நீலாம்பரி (சிறுவர் நவீனம்)

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

நீலாம்பரி (சிறுவர் நவீனம்)

Post by mubee » Sun Oct 13, 2013 5:34 pm

கோங்கு நாட்டை எதிர்மன்னசிங்கன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். நாட்டில் மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்ந்து வந்தனர். நாடு சீரும் செழிப்புமாக இருந்தது. அயல் நாட்டவர்களும் அந்த நாட்டைப் புகழ்ந்து கொண்டிருந்தனர். இதனால் மன்னனுக்குப் பெருமையாக இருந்தது.

மன்னன் மக்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. மக்கள் மன்னனின் ஆட்சியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். அதைவிட மன்னனுக்கு வேறு என்ன வேண்டும்?

இப்படி இருந்து வரும் நாளில் மன்னன் நோயில் வீழ்ந்தான் வழமைபோல் அரண்மனை வைத்தியர் வைத்தியம் பார்த்தார். அவரால் நோயை இனங்காண முடியவில்லை. அதனால் சரியாக வைத்தியம் செய்ய முடியவில்லை. அவரும் தன்னால் இயன்ற வரை வாகடங்களைப் படித்து மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறுபட்டதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அயல் நாட்டு வைத்தியர்களை வரவழைத்தனர். அவர்களும் நோயை இனங்காணவில்லை. அதனால் சரியான மருந்தைக் கொடுக்க முடியவில்லை. ஏதோ முடிந்தவரை முயன்று பார்ப்போம் என்றனர். இறுதியில் கையை விரித்துச் சென்று விட்டனர். இவ்வாறு பல நாட்டு விசேட வைத்தியர்களையும் வரவழைத்தனர். இருந்தபோதும் பலன் தான் வெறுமையாக இருந்தது.

உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில் படுத்த படுக்கையாகி விட்டார் மன்னர். பட்டத்து இராணி கவலையில் வீழ்ந்தாள். அமைச்சர்களை அழைத்து எப்படியாவது, எந்த நாட்டில் இருந்தாலும் விசேட மருத்துவர்களை அழைக்குமாறு கூறினாள்.

மன்னனின் நோய் மக்களுக்கும் கவலையினைத் தந்தது. இதுவரை மகிழ்ச்சியாக இருந்த நாடு சோகத்தில் ஆழ்ந்தது. எந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் நாட்டில் நடைபெறவில்லை.

இந்த நிலையில் இமயமலைச் சாரலில் இருந்து ஒரு சுவாமியார் வந்திருந்தார். அவர் மன்னனைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினார்கள். மன்னர் அவரை அழைத்து வரும்படி கூறினார். அவர் வந்து மன்னனுக்கு வாழ்த்துகளை வழங்கினார். பின்னர் மன்னனை பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ புரிவது போன்றிருந்தது.

“மன்னா நீங்கள் இப்போது அனுபவிப்பது கர்ம வேதனை. மன்னா உங்களை ஒரு பெரிய குற்றம் ஆட்கொண்டு உள்ளது” என்றார்.

“சுவாமி பெரும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதனைத் தீர்க்கும் வழி இருந்தால் சொல்லுங்கள்” என்றார் மன்னர். “சற்றுச் சிரமமானதே ஆனால் நீங்கள் படை பலத்துடன் இருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம்...”

“எதுவானாலும் சொல்லுங்கள் முயன்று பார்க்கிறேன்.”

“நீங்கள் அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இப்போது அனுபவித்து விட்டதால் இனி முயற்சிக்கலாம். மன்னா இதைத் தீர்க்க வேண்டுமானால் உலகிலே மிக உயர்ந்த வைரமாகிய நீலாம்பரி என்னும் நீல வைரம் ஒன்றுள்ளது. அதை நீங்கள் எடுத்து உங்கள் முடியில் வைத்து அணிய வேண்டும்.

“இதை எடுப்பது அவ்வளவு இலேசான காரியமல்ல அது நீலாம்பரி என்னும் சந்திரமுகியிடம் இருக்கிறது. அவளுடைய பெயர் சந்திரமுகி ஆனால் அவள் அந்த நீலாம்பரி என்னும் வைரத்துக்கு உரியவள். ஆகையால் அவளையும் நீலாம்பரி என்று அழைக்கிறார்கள். அதனை பல இராச நாகங்கள் காவல் காத்து வருகின்றன. அந்த வைரத்தை எடுத்தால் தான் உங்களைக் குணப்படுத்தலாம். வேறு வழியில்லை” என்றார் சுவாமியார்.

(தொடரும்...)
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”