உள்ளங்கள் ஊமையல்ல..

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

உள்ளங்கள் ஊமையல்ல..

Post by mubee » Sun Oct 06, 2013 3:23 pm

சமையலறை வாசலில் நின்றபடியே உள்ளே எட்டிப்பார்த்தேன். மாமி மும்முரமாக ஏதோ சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுதான் சமயம், சென்றுவிட வேண்டியதுதான். அரண்மனை போன்ற இந்த விசாலமான வீடு வாப்பா கட்டியதுதான். அனைத்து சொத்துக்களும் வாப்பாவுடையதுதான். என்றா லும் நெஞ்சுக்குள் இருக்கும் எனது இதயம் சின்னஞ்சிறியதுதானே. அது விசாலமாக இல்லாத பட்சத்தில் இந்த வீடும் வாசலும் சொத்தும் ஏன்? அற்பம். வெளியேறி விட வேண்டியதுதான். பாவம் மாமி, அவர்கள் நல்லவர்கள். விட்டு விட்டுப் போகிறேன்.

மெதுவாக கேட்டைத்திறந்து எட்டிப் பார்த் தேன். வீதியில் யாரையும் காணவில்லை. மெல்ல நடந்தேன். இப்படித் தனியாக நடந்து சென்றதும் கிடையாது. கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் உணர்ந்தேன் இன்னும் சற்று நேரத்தில் கடைவீதி வந்து விடும் என்று. வாப்பா பெரிய இரும்புக் கடையும் அதுவுமாகக் கொடிகட்டிப் பறந்த இடம். இப்போது மாமா அதில் உட்கார்ந்திருப்பார். நேரே நடக்காமல் வலது பக்கமாகத் திரும்பி, ஒரு குறுக்கு வீதியால் நடந்து சென்றேன். தார் றோட் கடந்து கிரவல் வீதி தொடர்ந்தது. பின்பு களிபோட்ட வீதி. சுற்றி வர மரமே கிடையாது. உப்புத் தரை வெட்டவெளியாகக் காட்சியளித்தது.

வெயில் கொதியாய் கொதிக்க வேர்வை வடிய ஆரம்பித்தது. சற்றுத் தூரம் செல்ல தென்னந்தோப்புகள் அடுத்து சவுக்கு மரத் தோப்பு ‘உஸ்ஸ்’ என்ற இரைச்சல் இரவாக இருந்திருந்தால் பேய்கள் என்று பயந்திருப்பேன். அதைக் கடந்து செல்ல பனைமரக்காடு. பெருங்கடல் அருகில் வந்து விட்டது. அங்கிருந்து வீசிய பலத்த காற்றில் பனை ஓலைகள் பலத்த சப்தத்தோடு ஆடி அசைந்தன. தொடர்ந்து வந்த மணல் வெளியில் கால் புதையப்புதைய நடந்து சென்றேன்.

நிறைய வீடுகள் தென்பட்டன. வீட்டு வாசல்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் நான் தனியே போவதை வேடிக்கை பார்த்தார்கள். உள்ளே உட்கார்ந்திருந்த பெண்கள், ‘இந்தப் பணக்காரப் பெண் சுட்டெரிக்கும் வெயிலில் தனியே எங்கே போகிறாள்’ என்று கேள்விக்குறியோடு நோக்கினார்கள். ‘யா அல்லாஹ்’ தெரிந்தவர்கள் யாரும் தென்படக் கூடாது’ என்று வேண்டிக் கொண்டேன்.

சற்று நேரத்தில் கடலோரம் வந்து விட்டேன். பேரலைகள் இரைச்சலோடு வந்து வந்து மோதிச் சென்றன. தொடர்ந்து நடந்தால் அலைகள் என்னைக் கொண்டு போய்விடும். ஒரு கணம்தான். மேற்கொண்டு சென்றால் என் உயிர் போவது நிச்சயம். ஆனால்... ஆனால்... மானமும் சேர்ந்து போய்விடுமே. அத்துடன் பாவமும் சேர்ந்து விடும். கடலோரம் நடந்தாலும் எங்கே போவது? யாராவது துஷ்டர்கள் கையில் மாட்டிக் கொண்டாலும் இத்தனை நாள் கட்டிக் காத்து வந்த கற்பும் போய்விடும். தெரிந்த நல்லவர்கள் கையில் அகப்பட்டால் வீட்டில் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். அப்புறம் மாமா மாமி முகத்தில் எப்படி விழிப்பது?

திரும்பி வந்த வழியே நடந்தேன். அந்தப் புதைமணலில் என் காலடிகள் மட்டுமே தென்பட்டன. அவைகள் என்னைப் பார்த்துக் கேலி செய்வது போல் இருந்தது. மணலைக் கடக்க பனங்காடு, சவுக்குத் தோப்பு, தென்னந்தோப்பு மீண்டும் அதே வழிகளைக் கடந்து வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தேன். ‘அப்பாடி’ பெருமூச்சு விட்டு விட்டு முதலில் ஒரு துவாயை எடுத்து முகத்தையும் கழுத்துப் பகுதியையும் நன்றாகத் துடைத்துக் கொண்டேன். சமையலறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். மாமி அதே விதமாக சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். போனதோ வந்ததோ தெரியாது போலும். நல்ல வேளை நான் போயிருந்தால் அப்பாவி மாமி மேல் பழி விழுந்திருக்கும். பாவம், திரும்பி ஹோ லுக்கு வந்து மின்விசிறியை சுழல விட்டு, கையி ரண்டையும் விரித்து சாய்ந்தபடியே மேலே பார்த்துக் கொண்டு செட்டியில் அமர்ந்தேன். மின்விசிறியைப் போலவே என் நினைவுகளும் சுழன்று சுழன்று பின்னோக்கிச் சென்றன.

அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். ஆஸ்பத்திரி கட்டிலில் வாப்பா - சுற்றி வர உறவினர்கள், வாப்பாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு நான், விம்மி விம்மி அழுதேன். உம்மா எப்போதோ போய்விட்டார்கள். இப்போது வாப்பாவின் நிலை இப்படி. ஆளுக்கு ஆள் எல்லோரும் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். வாப்பாவுக்கு இறுதி மூச்சு போலும். அந்த அறியாப் பருவத்தில் எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதற்கு முந்தைய நாளில்தான் டொக்டர் ‘பயப்படாதீங்க சுகமாகிவிடும்’ என்று ஆறுதல் மொழி கூறியவர் அன்று கைவிட்டு விட்டார் போலும். வாப்பா சைகை மூலம் அருகே வரும்படி அழைத்தார். சென்றேன். என் கையை மெல்லப் பிடித்துத் தூக்கி, என் வாப்பாவின் தங்கையான மாமியின் கையில் சேர்த்து வைத்தார். தலையணைக்குக் கீழ் இருந்த திறப்புக் கோர்வையை எடுத்து என் மாமாவின் கையில் கொடுத்தார். கண் மூடியது மூடியதுதான். அமைதியாக அவர் உயிர் பிரிந்து சென்றது. அழுதேன், அழுதேன், தேம்பித் தேம்பி அழுதேன். கண்ணீர் ஆறாகப் பெருகியது. ‘வாப்பா! வாப்பா’ என்று கதறி அழ வேண்டும் என் நினைத்தாலும் என்னால் முடியவில்லை. நான்தான் வாய் பேச முடியாத பிறவி ஊமையாயிற்றே. அருகில் நின்று கொண்டிருந்த மாமியின் மகன் இம்தியாஸ் கண்ணீர் விட்டு அழுதான். அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும்.

அன்றிலிருந்து மாமாவும் மாமியும் அவர்களது பெட்டிக்கடையை மூடி விட்டு, சிறிய வீட்டிலிருந்து எங்கள் வீட்டில் குடியேறினார்கள். இம்தியும் நானும் சேர்ந்து விளையாடுவோம். அவனே எனது உலகம் ஆனான். அவன் பள்ளிக்கூடம். விட்டு வரும்போது, மாபிள் போளை கொண்டு வருவான். பின்னேரம் ஒரே விளையாட்டுத்தான். சிறிய மரமொன்றில் ஏறி, மரக்கொப்பில் இருந்து பாய்வோம். சில நேரம் பொய்க்கோபம் கொண்டு, என்னை விரட்டிக் கொண்டு அடிக்க வருவான். நானும் ஓடித் தப்ப எத்தனிப்பேன். அப்போது மாமி பாய்ந்து வந்து ‘என்னடா நீ’ என்று ஏசி என்னைத் தப்ப வைப்பார்கள். என்னைத் தன் பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார்கள். பிறகு அவன் மேல் வகுப்பில் சித்தியடைந்து, டொக்டர் படிப்புக்காக வெளியூர் செல்ல நானும் வளர்ந்து விட்டேன். பெரிய இடைவெளி. அவன் லீவில் வீட்டுக்கு வரும்போது பழைய மாதிரி இல்லை. நிறைய மாற்றங்கள். எப்படியோ டொக்டராகி வெளிவந்த கையோடு மாமாவும் மாமியும் சேர்ந்து அவனை எனக்கு மணமுடித்து வைத்தார்கள்.

திருமணம் முடிந்து அவன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை. அன்பாகக் கதைக்கவும் இல்லை. தேநீர் வேளையில் வந்தால் மாமி யிடமே கேட்டு வாங்கிக் குடிப்பான். வேலை முடிந்து வந்தால் கால் கை கழுவிவிட்டு மாமியிடம் சென்றே வேண்டியதைக் கேட்பான். வேலைக்குப் போகும்போது நான் ஒரு நல்ல ஷேர்ட்டை எடுத்துக் கொடுத்தால், அதை வைத்து விட்டு வேறு ஒன்றைப் போட்டு டை கட்டிக் கொண்டு காரில் ஏறிச் சென்று விடுவான். எல்லாவற்றுக்கும் காரணம் நான் ஊமையாய்ப் பிறந்ததுதான், ‘இறைவா! ஏன் என்னை ஊமையாய் பிறக்க வைத்தாய்’ என்று இறைவனிடம் கேட்டதுண்டு. நியாயமாகப் பார்த்தால் ஒரு டொக்டருக்கு ஊமைப்பெண் பொருத்தமில்லைத்தான். அவனுக்கும் இன்ப மில்லை.

சிறிது காலம் செல்ல ஒரு பெண் அவனைத் தேடி வர ஆரம்பித்தாள். ஒரு நாளல்ல இருநாளல்ல. பலமுறை தேடி வந்து கொண்டி ருந்தாள். நானும் ஒவ்வொரு முறையும் என் இரு கைகளையும் விரித்து, அவன் இங்கு இல்லை என சைகை செய்வேன். போய் விடுவாள். பின்னர் அவனோடேயே காரில் வர ஆரம்பித்தாள். இரவு ஏழு மணிக்கு வந்தால் மணிக்கணக்கில் இருந்து கதைப்பார்கள். இது மாமிக்கும் தெரிந்துதான் இருந்தது. ஏன் தடுக்கவில்லை என்பது எனக்குச் தெரியாது. அவன் கையில் சிலவேளை ஸ்டெதஸ்கோப் கொண்டு வருவதிலிருந்து அவளும் ஒரு டொக்டர்தான் என்பதை விளங்கிக் கொண்டேன். அவர்கள் நீண்டநேரம் கதைப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாமல் அப்படியே கட்டிலில் போய் சரிந்து விடுவேன். தலையணையை கண்ணீர் நனைத்து விடும். எப்போது தூங்கினேன் எப் போது போனார்கள் என்பது எனக்குத் தெரியாது.

இந்நிலையில்தான் நான் விரக்தியடைந்து கடற்கரைக்கு நடந்து செல்ல நேரிட்டது. வேறென்னதான் செய்வது? இனி மறுபடி அவ்வாறு போகப் போவதில்லை. வேறு முடிவெடுக்க வேண்டியதுதான். முடிவெடுத்தேன். அது நல்ல முடிவாக இருக்கவேண்டும் என எண்ணினேன். ஒரு நாள் அவள் தனியே வந்தாள். நான் வழமைபோல் கையை விரித்துக் காட்டவில்லை மாறாக சைகை செய்து என்னருகே வரச்செய்தேன். என் கண்கள் கலங்கின கைகளும் நடுங்கின. நான் கழுத்தில் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி, அவள் கழுத்தில் அணிய எத்தனித்தேன். அதற்குள் அவள் திடுக்கிட்டுப் பின் வாங்கி, “ஆமினா என்ன இது? ஏன் இப்படி செய்aங்க? என்று சத்தமிட்டுக் கூறினாள். நான் அவளது கையிலிருந்த ஸ்டெதஸ்கோப்பைத் தொட்டுக்காட்டி, “நீ ஒரு டொக்டர் நீதான் அவருக்குப் பொருத்தமானவள், நீ அவரை முடித்துக் கொள், நான் உனக்கு இடைஞ்சலாக ஒரு நாளும் வரமாட்டேன். நான் இப்படியே மூலையில் ஒதுங்கிக் கொள்கிறேன். என்று கைகளால் சைகை செய்து விட்டு, மூலையில் போய் உட்கார்ந்து கொண்டேன். என் கண்ணிலிருந்து தாரை, தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. ‘ஆமீனா! ஏன் இப்படியெல்லாம் செய்aங்க? எழும்புங்க’ என்று சப்தமிட்டாள். ஏற்கனவே பின் கட்டில் வேலையாக இருந்த மாமி சப்தம் கேட்டு ஓடி வந்தார்கள். ‘என்னம்மா? என்ன நடந்தது?. ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டார்கள்.

என்ன நடந்தது ஆயிஷா? என்றார். என் கண்ணிலும் கண்ணீர் துளிர்ந்தது. ஆம்! இத்தனை நாளும் ஒரு பெண்ணான என்னாலும் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம் காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறேன். தன் கணவனை இவள் கவர்ந்து செல்லப்பார்க்கிறாள் என்று ஆமினா எண்ணியதில் எந்த தவறும் இல்லை. நானும் இம்தியும் சமகாலத்தில் மருத்துவக் கல்லூரியில் வெளிவந்தவர்களாய் இருந்தாலும் வேறு வேறு ஆஸ்பத்திரிகளில் வேலை செய்கிறோம்.

ஆயினும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று குறித்து காலத்தில் சமர்ப்பிக்கும் படிப் பணிக்கப்பட்டிருந்தோம். ஆகவேதான் நாங்கள் எங்கள் வேலை நேரம் போக, மற்ற நேரத்தில் இது சம்பந்தமாக சம்பாஷிப்பதிலும் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தோம். என்றாலும் நாள் போகப் போக இம்தியின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகியது. அவருக்கும் மனைவி ஊமைப் பெண்ணாக அமைந்து விட்டதால் எதையும் மனம் விட்டு அளவளாவக் கூடிய சந்தர்ப்பம் அமையவில்லை. நானும் நாலும் அறிந்த பெண்ணாக இருந்ததால் அவருக்கு என் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடது. நான் ஆராய்ச்சி விடயத்துக்காகத்தான் சந்திக்க வருகிறேன் என்பது மாமிக்கும் நன்றாகத் தெரியும். அதனால் அவர் என்னைத் தடை செய்யவில்லை. ஆனால் இப்போது ஆமினா என்னையும் இம்தியையும் சேர்த்து வைக்க விரும்புகிறாள் என்பதை வெளிப்படையாகப் புரிந்து கொண்டார்.

‘ஆமினா! நீ முழுவிருப்பத்தோடேயா, சம்மதத்தோடேயா இதை செய்து வைக்க விரும்புகிறாய்? என்று மாமி கேட்ட போது ‘ஆம் என்று மேலும் கீழும் தலையாட்டினாள். ‘ஆமினா! நீ உயர்ந்து விட்டாயம்மா உயர்ந்து விட்டாய், என்று மாமி அவளைக் கட்டித் தழுவிக் கொண்டார். ஆமினா அதிலிருந்து விடுபட்டு என்னையும் கட்டித் தழுவிக் கொண்டாள். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

இம்தியாஸ் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது ஒரு கணம் அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போய் நின்றான். இது என்ன தொலைக்காட்சி நாடகமா? உம்மா அருகில் நின்று கொண்டிருக்க ஆமினாவுக்கு ஆயிஷாவும் கட்டித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் கண்ணீரைக் கண்ணீரால் கழுவிச் கொண்டிருக்கிறார்கள். ஆமினாவின் தங்க நெக்லஸ் தரையில் கிடக்கிறது. என்னதான் நடந்திருக்கும்.

‘இங்க வாடா இம்தி; இதப் பாருடா. ஆயிஷா உன்னைக் கட்டிக் கொள்ள வேணும்னு ஆமினா விரும்புறா. அவவும் தலையை ஆட்டி பூரண சம்மதம் தெரிவிச்சிட்டா!

‘உம்மா!’ ‘ஆமாண்டா அவ கட்டித் தங்கம்டா. ஆயிஷா உனக்கு ஏற்றவன் எண்டு அவளே விரும்பி சொல்றா. நீ அவளை முடிச்சிக்க அதே நேரம் ஆமினாவும் உன் பொஞ்சாதியாத்தான் இருக்குப் போறா’

எனக்கு எதுவுதே பேசத் தோன்றவில்லை. என் நெஞ்சு ‘பக்’, பக்’ என்று அடித்துக் கொண்டது. ‘ஆமினா என்னை மன்னித்து விடு. உன் குறை ஒன்றை வைத்து உன்னைப் பழி வாங்கி விட்டேன். உன் உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொள்ளாத படுபாவியாகி விட்டேன். என்று அவளைத் தழுவிக் கொண்டான். முதல் முறையாக அவன் தோளையும் நெஞ்சையும் ஆமினா கண்ணீரால் நனைத்தாள். ‘ஆமீனா! என்னை மன்னிப்பாயா? என்றான் அவன் கதைகள் இரண்டையும் எடுத்து அவள் கன்னத்தில் அடித்துக் கொண்டாள். நீங்கள் என்னை அடித்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஒன்றும் சொல்லாமல் மவுனமாக இருந்தீர்களே, அதுதான் நீங்கள் செய்த குற்றம்’ என்று அவள் சொல்கிறாள் என்பதை அவன் அனுபவம் மூலமாக அறிந்து கொண்டான்.

ஆமினா குனிந்து கீழே கிடந்த தங்க மாலையை எடுத்து அவன் கைகளிலே கொடுத்தாள் அவன் கைகளைத் தூக்கி, ஆயிஷாவின் கழுத்தில் வைத்தாள். அவன் அணிவித்தான் முதன் முறையாக ஆமினா முகத்தில் ஒரு புன்சிரிப்பைக் காண முடிந்தது.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”