Page 18 of 19

Re: அழகிய தேவதை - தொடர்கதை - பாகம் 74

Posted: Sun Aug 05, 2012 9:26 pm
by Aruntha
சிவா நீ சற்று சிந்தித்து பார் உன்னை எத்தனையோ கனவுகளை சுமந்து வளர்த்த உன்னோட அம்மா, அப்பா அவங்க நிலைமையை சிந்திச்சாயா? இப்போ தான் உன்னோட அப்பா கிட்ணி ஆபரேசன் பண்ணிட்டு வந்திருக்கிறார் இந்த நேரத்தில நீ இப்பிடி அவங்கள தூக்கி எறிஞ்சு கதைத்தால் அவரோட உடம்புக்கு ஏதாச்சும் ஆகினால் என்ன செய்வாய்? நீ என்ன குழந்தை பிள்ளையா? உனக்கு சொல்லி புரிய வைக்க தேவையில்லை என்றாள்.

ரம்யா நீ சொல்றது எல்லாம் புரிது ஆனால் அவங்க பண்ணினத என்னால மன்னிக்க முடியலடா. அவங்க என்னை எடுத்து வளர்த்தது தப்பில்ல. அது அவங்க சூழ்நிலை. ஆனால் நான் செல்வன் செல்வியோட சகோதரம் என்று தெரிந்ததுக்கு அப்புறமா என்னை அவங்க கூட பழக கூடாது என்று நினைத்தாங்க பாரு அத தான் என்னால மன்னிக்க முடியல என்றான்.

சிவா நீ சொல்றது சரி தான் ஆனால் அவங்க இடத்தில நீ இருந்தால் நீயும் இப்பிடி தான் பண்ணி இருப்பாய். பெத்தவங்க மனசு பிள்ளைங்க நமக்கு புரியாது நாங்களும் ஒரு நேரத்தில பெத்தவங்களாகி நம்ம பிள்ளைங்க நமக்கு இப்பிடி ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் தான் அத புரிய முடியும் என்றாள்.

அவள் கூறிய ஒவ்வொரு வரிகளும் அவனது மனதில் ஆழமாய் இறங்கியது. தன் பதற்றம், கோவம் எல்லாவற்றையும் மறந்து சற்று சிந்திக்க ஆயத்தமானான். சிவா நீ நல்லா யோசிச்சு பார் உனக்கே நிலைமை புரியும் என்றாள். உனக்கு என்ன பேசணும் என்று தோன்றினாலும் எனக்கு போன் பண்ணு. அது எந்த நேரமா இருந்தாலும் பறவாயில்லை. நான் உனக்காக இருக்கன் என்றாள் ரம்யா.

நீ உன் அம்மா அப்பா கூட பேச முன்னாடி சற்று உன் மனச உன் கைக்குள்ள கொண்டு வா. நினைத்ததை எல்லாம் பேசாத. அவங்களுக்கும் ஒரு மனசு அத உன்னோட மனசில முதலில நிப்பாட்டு என்றாள். அதுக்கும் மேல உனக்கு ரொம்ப ரென்சன் இருந்தால் முதல்ல எனக்கு போன் பண்ணு அப்புறமா உன் அம்மா அப்பா கூட பேசு ஒகே வா என்றாள். அவனும் சம்மதிக்க சரிடா சிவா நீ எதையும் போட்டு மனச குழப்பாம படுத்து தூங்கு நான் காலைல உனக்கு போன் பண்ணுறன் என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அவள் கூறிய வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தை சிந்தித்த வண்ணம் கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன்னையே அறியாது தூங்க ஆரம்பித்தான். காலை வெகு நேரமாகியும் அவன் எழுந்திருக்கவில்லை. அவனது மனக்குழப்பம் மற்றும் சோர்வு அவனை அப்படியே தூங்க வைத்து விட்டது. அவனை உடனடியாக எழுப்ப துணிவின்றி மாணிக்கமும் மனைவியும் இருந்து விட்டார்கள். அவனாக அமைதியாகி எழுந்து வரும் வரை காத்திருந்தார்கள். தொலைபேசியின் சிணுங்கல் கேட்டு கண் விழித்தவன் அழைப்பது யார் எனப் பார்த்தான். மறுமுனையில் அவன் மனதை முழுமையாக புரிந்து சரியான நேரத்தில் ஆறுதல் கூறி பக்குவப்படுத்திய ரம்யாவின் அழைப்பு.

சோம்பல் முறித்தபடி ஹலோ என்றான் சிவா. என்னடா சிவா நேரம் இவ்வளவு ஆச்சு நீ இன்னும் எழும்பலயா என்றாள். இல்லடா ரமி நான் நல்லா தூங்கிட்டன். இப்போ உன் அழைப்பு பார்த்து தான் எழும்பினான் என்றான். சரி சீக்கிரமா எழுந்து போய் அம்மா அப்பா கூட பேசு என்றாள். என்ன சொல்றாய் ரமி நான் போய் அவங்க கூட பேசவா? என்றான். ஆமா சிவா நீ எழுந்து போ அவங்க கூட சகஜமாக பேசு என்றாள். அவளின் வற்புறுத்தலாலும் அன்பான கட்டளையாலும் மறுக்க முடியாமல் எழுந்து செல்ல ஆயத்தமானான்.

சிவா அவங்க என்ன கதைச்சாலும் கோவப்பட கூடாது. அன்பா கதைக்கணும் சரியா என்றாள். அவனுக்கு ஒரு குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல் அறிவுரை கூறினாள் ரமி. அவனும் எழுந்து சென்று தாயை பார்த்தான். சிவா காப்பி குடியப்பா என்றபடி காப்பியை நீட்டினார் தாய். அதை வாங்கி அருந்தியவன் அப்பா உங்க உடம்பு எப்பிடி இருக்கு என்று கேட்டான். அவனின் இரவு இருந்த நிலைக்கும் தற்போது அமைதியாக பேசுவதையும் ஆச்சரியமாக பார்த்த படி நின்றார்கள் மாணிக்கமும் மனைவியும்.

தொடரும்…!
பாகம் 75

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 75

Posted: Sat Aug 25, 2012 12:18 pm
by Aruntha
அவனின் அமைதியான பேச்சு மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் அவன் தம்மை விட்டு விலகி விடுவனோ என்ற ஏக்கம் அவர்களை வெகுவாக பாதித்த வண்ணம் இருந்தது. அம்மா ரொம்ப பசிக்குது சாப்பிட என்ன இருக்கு என்று கேட்க இதோ சப்பாத்தி ரெடி ஆக இருக்கு வா எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவம் என்று கூற வீட்டு அலாரம் மணி ஒலித்தது.

இருங்கம்மா நீங்க சாப்பாட பரிமாறுங்க நான் யார் என்று பாக்கிறன் என்ற படி எழுந்தான் சிவா. அங்கு சென்றவனுக்கு ஆச்சரியம் மகிழ்ச்சி எதுவுமே தாங்க முடியவில்லை. அவன் கண் முன்னே கமலி குடும்பமும் ரம்யா குடும்பமும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்த சிவா வாங்க என்று வரவேற்றான். அவர்களும் அவனை தொடர்ந்து வந்தார்கள்.

அவர்களை பார்த்த மாசிலாமணி சற்று தயங்கியபடி நின்றாலும் வாங்க என்று கூறி வரவேற்றார். என்ன எல்லாருமே ஒண்ணா வந்திருக்கிறீங்க ரொம்ப சந்தோசம் என்று கூறியபடி வந்து சோபாவில் அமர்ந்தார். அப்போ எல்லாருக்கும் சேர்த்தே சப்பாத்தி எடுக்கிறன் வாங்க ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம் என்றார் சிவாவின் தாயார்.

என்ன சப்பாத்தி மட்டும் தானா? மதியம் ஒண்ணுமே தராமல் நம்மள விரட்ட பாக்கிறீங்களா? இன்னிக்கு மதியம் இருந்து ஒண்ணா சமைச்சு சாப்பிட்டு தான் புறப்படுவம் என்று கமலி கூறி சிரித்தார். என்ன அப்பிடி பாக்கிறீங்க சார் நாம நடந்த தவற நினைச்சு சண்டை போடுறதோ இல்ல மனஸ்தாப்பட்டு பேசாம இருக்கிறதோ நல்லதில்லை. அது தான் நாம முடிவெடுத்திட்டம் இதுவும் நம்ம வீடு தான் நாம எல்லாருமே ஒரே குடும்பம் தான் என்றார் குமார்.

குமாரிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத மாசிலாமணி என்னப்பா சொல்றாய் நிஜமாவா என்று கேட்டார். ஆமா நாம சிவாவ பெத்தவங்களா இருக்கலாம் பிறப்பால நாம அவனுக்கு அம்மா அப்பாவா இருக்கலாம். ஆனால் இந்த இருபது வருடமா நீங்க தான் அந்த அம்மா அப்பா ஸ்தானத்தில இருந்து அவன வளர்த்து இருக்கிறீங்கள். இந்த உண்மை தெரியாமல் போயிருந்தால் அவனோட கடைசி காலம் வரைக்கும் நீங்க தான் அவன் சொந்தம். அத நாங்க தட்டிப் பறிக்க விரும்பல என்றான் குமார்.

நீங்க சொல்றத நம்பவே முடியல இப்பிடியும் மனிதர்கள் இருப்பார்களா? என்றார் மாசிலாமணி. இதில என்ன இருக்கு. சிவா இப்போ நம்ம பிள்ளை அவனுக்கு எல்லாமே நாம எல்லாரும் தான் அதில என்ன சண்டை பேதம் பாக்கிறது. பாசம் காட்டுறது மட்டும் தான் நம்மளால முடியும். அதனால தான் இந்த முடிவு எடுத்தம் என்றான்.

ஆமா நீங்க இப்போ இருக்கிறது கூட உங்க சொந்த வீடு இல்ல உங்க வீடு ஊரில இருக்கு சிவாவோட படிப்புக்காக தான் பட்டினம் வந்தீங்க அதனால நம்ம வீடு இருக்கிற இடத்தில இன்னும் இடம் மீதமா இருக்கு அதில ஒரு வீட்ட கட்டி நீங்களும் நாம எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா வாழ்ந்திட்டா போச்சு என்றாள் கமலி. எல்லாருமே ஒண்ணா இருக்கிறப்ப யாரும் யாரையும் இழக்க போறதில்லை எல்லாருமே ஒண்ணாகிடலாம் என்றாள்.

ஆமா நாம இப்போ வந்தது இத பத்தி கதைக்க மட்டுமில்ல கெட்டதில தான் ஒரு நல்லது நடக்கும் என்பாங்க ஆனால் இது நல்லதிலயே ஒரு நல்லது நடக்குது என்றான் ராஜன். என்ன நீங்க சொல்றது புரியல என்று கூறியபடி அவர்களை நோக்கினார் மாசிலாமணி. அதுவா நான் சொல்றன் என்று ஆரம்பித்தான் குமார். நம்ம ரம்யாவ நம்ம சிவாக்கு பேசி முடிச்சிட்டா அப்புறம் நமக்குள்ள இருக்கிற நட்பு என்ற உறவு மாறி எல்லாருமே உறவுக்காரங்கள் ஆகிடுவம் இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்றான் குமார்.

திடீரென குமார் கேட்ட கேள்வியால் சற்று குழப்பமடைந்த மாசிலாமணி சிவாவை பார்த்தார். அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அவனின் மனதின் விருப்பத்தை எதிரொலித்தது. மாசிலாமணி மனைவியை பார்த்து என்னப்பா சொல்றாய் என்றார். ஒரு நொடி கூட தயங்காமல் சிவாக்கு சரியான ஜோடி ரம்யா தான் என்றார். எப்பிடி சொல்றாய் என்று கேட்க அவனை இவ்வளவு தூரம் அமைதியாக்கி அறிவுரை கூறி இப்போ இப்பிடி வைத்திருக்கிறது ரம்யா தான். அவள விட சிறந்த ஒரு வாழ்க்கை துணையை நம்மளால தேர்ந்தெடுக்க முடியாது என்றார்.

அப்போ என்ன எல்லாருக்குமே சம்மதம் என்றால் நம்ம பசங்க மூணு பேருக்குமே ஒண்ணா கல்யாணத்தை பண்ணிடலாம் என்றார் மாசிலாமணி. அவரின் அந்த வார்த்தைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. சரி கல்யாண வேலைய அப்புறமா பாக்கலாம் முதலில நம்ம வீடு இருக்கிற காணில அதே போல ஒரு வீடு கட்டுற வேலைய உடன ஆரம்பிப்பம். அந்த வேலை முடிஞ்சதும் எல்லா குடும்பமும் ஒண்ணா இருந்திட்டு கல்யாண வேலைய ஆரம்பிப்பம் என்றாள் பிரியா.

நீங்க வீடு கட்டுறீங்களோ கல்யாணம் பேசுறீங்களோ அத பத்தி பறவாயில்லை இப்போ எனக்கு உடனடியா சாப்பாடு வேணும் ரொம்ப பசிக்கிது என்றான் செல்வன். எனக்கும் தான் என்று பக்க பாட்டு பாடினாள் செல்வி. ஆன்டி இவங்களுக்கு சாப்பாடு குடுக்காட்டி என்னையே கடிச்சு சாப்பிட்டிடுவாங்க சீக்கிரம் சாப்பாடு குடுங்க என்றாள் ரம்யா. ஐயோ சண்டை பிடிக்காதீங்க வாங்க சாப்பிடலாம் என்று எழுந்தான் சிவா. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

முதல் நாள் ஒரு நொடியில் அவர்கள் சந்தோசம் எல்லாமே தொலைந்து போனாலும் மறு நொடி அதை விட பல மடங்கு சந்தோசம் அவர்களிடம் தவழ்ந்ததை பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தொடரும்……!
பாகம் 76

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 76

Posted: Sun Sep 02, 2012 8:10 pm
by Aruntha
சிவாவுக்கு இருந்த அத்தனை தடைகளும் நீங்கியது. நட்புக் குடும்பங்கள் யாவும் உறவுக்காரர்கள் ஆக வேண்டிய காலம் மிகவும் நெருக்கமாக இருந்தது. நட்பென்று ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கை பயணம் இன்று உறவாக மலர்ந்தது. அவர்களின் பாசம் ஆணி வேராக ஊன்றியிருந்தது. அவர்களிடம் இருந்த ஒற்றுமை ஆலம் விழுது போல ஊன்றியிருந்தது.

மறுநாளே அந்த அழகிய அன்பு நந்தவனத்தில் மூன்றாவது வீடு கட்டுவதற்கான வேலை ஆரம்பித்தது. ஒரே வடிவத்தில் இருந்த வீடுகள் இரண்டோடு மூன்றாவது வீடும் இணைந்தது. ஒரு புறம் வீடு கட்டுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க மறு புறம் நட்பு வட்டத்துக்குள் இருந்த பட்டாம் பூச்சிகள் காதல் வானில் சிறகடித்து பறந்த வண்ணம் இருந்தது.

யார் என்று தெரியாமல் ஆரம்பித்த ரமியாவின் காதல் சிவாவுடன் மிகவும் நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அன்று ஒரு பேச்சுக்கு சிவா கூறிய ரமியா உன் கனவுக் காதலன் நானாக இருக்க கூடாதா என்ற வார்த்தைகள் இன்று உண்மையாகியிருந்தது. பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையாக அந்த குடும்பங்களுக்கு இடையான புரிந்துணர்வு பாசம் நட்பு இருந்தது. கடவுளே அவர்களின் ஒற்றுமையை பார்த்து பிரமித்துப் போய் இருந்தான். இந்த பூமியிலே இப்படியான பாசமான குடும்பங்களை படைத்ததற்காக அவனே பெருமை கொண்டான்.

இத்தனை பெரிய பிரச்சினை வந்தும் அவர்களின் புரிந்துணர்வு, பாசம் அவற்றை தூசாக நினைத்து எல்லாவற்றையும் ஏற்று கொண்டது. இது பார்ப்பதற்கு அந்த இறைவனுக்கே பிரமிப்பாக இருந்தது. அந்த கடவுளுக்கு கூட அவர்களின் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்க மனது வரவில்லை. அவர்களின் குடும்பத்தில் மேலும் மகிழ்ச்சியை வளர்க்கவே விரும்பினான்.

மூன்று மாத காலத்துக்குள்ளே அவர்களின் வீடு கட்டும் பணி முடிந்தது. அவர்கள் வீட்டு கிரக பிரவேசம் மிகவும் எளிமையாக அவர்களின் குடும்பங்களுடன் முடிந்தது. அவர்கள் தம் செல்வங்களின் திருமணத்தை விமரிசையாக கொண்டாட இருந்தமையால் கிரக பிரவேசத்தை மிகவும் எளிமையாக கொண்டாடி முடித்தார்கள்.

அன்று அனைத்து குடும்பங்களும் சேர்ந்து கோவிலுக்கு சென்றார்கள். தமக்கு கிடைத்த இந்த வாழ்க்கைக்காக நன்றி கூறினார்கள். அப்படியே அன்றைய மதிய சாப்பாட்டிற்கு ஹொட்டல் ஒன்றுக்கு சென்றார்கள். நீண்ட நாட்களின் பின்பு அனைவரும் ஒன்றாக வெளியில் சென்றிருந்தார்கள். தனேஷின் தாயார் கூட தன் கணவரின் இழப்பை நினைத்து வருந்துவதை விட்டு சற்று தேறி அவர்களின் மகிழ்ச்சியில் கலந்திருந்தார். ரேவதியும் தன் சோகங்களை மறந்து மகிழ்ந்திருந்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து நரேஷ் கூட பூரித்திருந்தார்.

அவர்கள் அனைவரும் மதிய உணவை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் சொல்லியபடி யோசியரும் வந்திருந்தார். சீக்கிரமாக தங்கள் அழகிய தேவதைகளுக்கும் இராஜகுமாரர்களுக்கும் திருமணம் செய்வதற்கு நாள் பார்த்தார்கள். அதன் படி யோசியரும் நல்ல நாளாக பார்த்து கொடுத்தார். ஒரே நாளில் மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் செய்வதற்கு நாள் குறிக்கப்பட்டது.

அந்த பட்டிணத்திலேயே அவர்களின் திருமணம் போல் இதுவரை நடக்காத அளவிற்கு பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார்கள். இது ஒரு வீட்டு திருமணம் இல்லை. சில குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நட்புகள் உறவுகளாக சங்கமிக்கும் ஓர் சங்கமமாக இருந்தமையால் மிகவும் பெரியளவில் ஒழுங்குகள் செய்தார்கள்.

அதன் படி பண்டிணத்திலேயே மிகவும் பெரிய திருமண மண்டபத்தை ஒழுங்கு செய்தார்கள். சமையல்காரர் முதல் அலங்காரகாரர் வரை பிரபலமானவர்களை பார்த்தார்கள். தம் உறவுக்காரர்கள் முதல் நண்பர்கள் வரை யாரையும் விடாது அழைப்பதாக முடிவெடுத்தார்கள். அதற்கமைய ஒழுங்குகளையும் சிறப்பாக பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

தொடரும்…..!
பாகம் 77

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 77

Posted: Sun Oct 07, 2012 8:28 am
by Aruntha
திருமணத்திற்கான நாளும் நெருங்கிய வண்ணம் இருந்தது. திருமண வேலைகள் மும்முரமாக நடந்தது. மூன்று அழகிய தேவதைகளுக்கும் ஒரே விதமான திருமண உடைகள் எடுக்கப்பட்டது. அவர்களை கரம் பிடிக்க காத்திருக்கும் ராஜகுமாரர்களுக்கும் ஒரே போன்று உடை எடுக்கப்பட்டது. அவர்களின் பெற்றவர்கள் அனைவருமே ஒரே போன்று உடையலங்காரம் செய்வதற்கும் தீர்மானித்தார்கள். இது ஒரு திருமணம் போன்று இல்லாது நட்புகள் உறவாகும் நட்பின் சங்கம நிகழ்வாக இருந்தது.

திருமண நாளினை ஒட்டி அவர்களின் வீட்டிற்கு உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அவர்களின் ஒரே மாதிரியான மூன்று இல்லங்களும் அலங்காரத்தில் மிகவும் அழகாக மிளிர்ந்தது. உறவுக்காரர்களால் நிறைந்திருந்த அவர்களின் அன்பு இல்லங்கள் சொர்க்கலோகம் போன்று காட்சியளித்தது. ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். நேரமாச்சு நாளைக்கு திருமணம் அனைவரும் போய் தூங்குங்க என்ற வண்ணம் டாக்டரம்மா வந்தார். அந்த பெரியவரின் வார்த்தைகளை மதித்து அனைவரும் தூங்க சென்றார்கள்.

காலைக் கதிரவன் கதிர்களை பரப்பி கோலாகலமாக அன்றைய பொழுதை ஆரம்பிப்பதற்காக உதிக்க ஆரம்பித்தான். திருமண நாள் என்பதால் அனைவரும் நேரத்துடன் எழுந்து அலங்கார வேலைகளை பார்த்தார்கள். அலங்கரிப்பு நிபுணர்கள் இராஜகுமாரிகளாகிய செல்வி, ரேவதி, ரம்யா ஆகிய அழகிய தேவதைகளை அலங்கரித்த வண்ணம் இருந்தார்கள். மறு அறையில் அரசிளங் குமாரர்களாகிய செல்வன், தனேஷ், சிவா ஆகிய ராஜகுமாரர்களுக்கான அலங்காரம் நடந்த வண்ணம் இருந்தது.

அலங்காரம் முடித்த இராஜகுமாரர்கள் மூவரும் கைகளை ஒன்றாக கோர்த்து கம்பீரமாக நடந்து மணமேடையை நோக்கி சென்றார்கள். பார்ப்பவர்கள் கண் திருஷ்டி படுமளவிற்கு அவர்களின் பாசம் நட்பு எல்லாம் இருந்தது. அவர்கள் மூவரும் மேடையில் அமர்ந்து திருமண சடங்குகளில் மூழ்கி இருந்த வேளை அழகிய தேவதைகள் மூவரும் ஒன்றாக கைகோர்த்து மணமேடையை நோக்கி மெல்ல நடந்தார்கள். தேவலோகத்திலிருந்து வரும் தேவலோக தேவதைகள் போல பார்ப்பதற்கு அழகாக இருந்தார்கள்.

மெல்ல நடந்து சென்று தங்களின் மனதினை கவர்ந்து இன்று கணவனாக காத்திருக்கும் தங்களின் ராஜகுமாரர்களின் அருகில் அமர்ந்தார்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் இன்று தான் சொர்க்கலோக மாதுக்களையும் தேவர்களையும் பார்த்தது போல் அவர்களின் அழகில் மயங்கி சொர்க்கத்தில் இருந்தது போல் மகிழ்ந்திருந்தார்கள்.

பல ஆண்டுகளாக நட்பாக இருந்த குடும்பங்கள் இன்று உறவென்ற பந்தத்தில் சம்மந்திகளாக உறவெடுத்தார்கள். கெட்டி மேளங்கள் கொட்ட அங்கு கூடியிருந்தவர்களின் ஆசிகளுடன் மணமகன்கள் ஒவ்வொருவரும் தங்களின் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிந்தார்கள். மணமக்கள் அனைவரும் தங்கள் பெற்றவர்களின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதங்களை பெற்றார்கள்.

நட்புக்கள் உறவுகளான மகிழ்வோடு இன்பம் துன்பம் நிறைந்த இவ் உலகில் தங்கள் அன்பு நிறைந்த பயணத்தை ஆரம்பித்தார்கள். அவர்களின் நட்பான உறவுகள் இனிதே வாழ நாமும் வாழ்த்துவோம்

முற்றும்….

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sun Oct 07, 2012 10:19 pm
by ஆதித்தன்
முதன் முதலில் படுகையில் மிக அழகாக ஒர் தொடர்கதையை எழுதி முடித்தவர் நீ/அருந்தா என்ற பெருமை எப்பொழுதும் உண்டு.

வாழ்த்துகள் அருந்தா.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sun Nov 18, 2012 9:36 pm
by Aruntha
நன்றி ஆதி. மீண்டும் ஓர் தொடர்கதை எழுத ஆசை தான். தொடர உள்ளேன் வெகு விரைவில்......!

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sun Nov 18, 2012 11:03 pm
by ஆதித்தன்
ரொம்ப நல்லது. அடுத்த முறை ஆரம்பத்திலிருந்தே கதையினை தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

வாழ்த்துகள்.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sat Jul 20, 2013 10:45 pm
by Aruntha
அடுத்து நான் ஆரம்பிக்க இருக்கும் தொடர் கதைக்கு யாராச்சும் ஏதாச்சும் கரு சொல்லுங்களன். உங்களுக்கு பிடித்த கருவுடன் எழுத காத்திருக்கிறேன்.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Mon Jun 02, 2014 6:16 am
by Arulmani
வணக்கம்,

தங்களது இந்த கற்பனை திறனை எண்ணி வியக்கேன்! இரண்டு நாட்களில் முழு கதையையும் படித்து விட்டேன். நான் இதுவரை படித்த கதைகளிலேயே இந்த கதை என்னை மிகவும் பாதித்து விட்டது. இக்கதை முழுவதிலும் எந்த இடத்திலும் விரும்பத்தகாத பாத்திரபடைப்புகள் இல்லை. இக்கதையில் வரும் பாத்திரங்கள் போல் நம் நிஜ வாழ்க்கையில் நடக்காதா என்று என்ன தோன்றுகிறது. தாங்கள் இதே போல மேலும் பல கதைகளை கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் மிக்க மகிழ்ச்சி.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Mon Jun 02, 2014 8:29 pm
by Aruntha
மிக்க நன்றி. இது என்னுடைய 2 வது தொடர் கதை. முதலாவது கதை அவளும் வாழ்க்கையும் என்ற பெயரில் இத் தளத்தில் உள்ளது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி