என்றென்றும் உன்னோடு - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

என்றென்றும் உன்னோடு - தொடர்கதை

Post by thamilselvi » Mon Mar 12, 2012 9:48 pm

ஹாய் டியர்ஸ்,

உங்களோடு என் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எம் பேரு.......... (கொஞ்சம் நிறுத்துங்கள், எம் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி, என்று நீங்கள் சன்னமாய் முனுமுனுப்பது, என் செவிகளில் சன்னமாய் ஒலிக்கிறது.)

அய்யோ ! பாருங்கள் உங்கள் பாடல் என்னை திசை திருப்புகிறது.

சரி கொஞ்சம் அமைதியாய் இருந்தால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.

நான் யாழினி, என் பெற்றோர் எனக்கு வைத்த அருமையான பெயர். யாழைப்போன்று இனிமையாக வாழ்வேன் என்ற எண்ணத்தோடு வைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

யாழினி,

என்னை நான் வர்ணித்திக்கொள்வதில் ஒரு கிக் இருக்கவே செய்கிறது. சராசரிக்கும் கொஞ்சம் குறைவான உயரம், கொஞ்சம் சாயலில் ஷாலினியை ஒத்த முகவெட்டு, நீண்டகருங்கூந்தல், சரி ஒருமுறைபார்க்கலாம் இன்று இளைஞர்களை திரும்ப வைக்கும் அழகு. (திரும்பி பார்த்தவர்கள் தூக்கம் வராமல் தவித்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல).

நகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல், இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு நகரத்தில் வசிக்கிறேன் நான். அம்மா ரிட்டயர்ட் டீச்சர், அப்பா நோ மோர். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். இப்படி உங்களோடு பேசிக்கொண்டே, குளித்து உடைமாற்றி, என் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது தளத்தில் என் குடியிருப்பு, அம்மாவின் இருப்புகள் அப்பாவின் மருத்துவ செலவில் கரைந்து போனதால், சேமிப்பு ஒன்றும் அதிகமாக இல்லை. நான் அதைப்பற்றி வெகுவாக கவலைப்படுவதில்லை. நான் படிகளில் இரண்டாவது தளத்தைக்கடந்த போது, அம்மாவின் குரல் சன்னமாய் ஒலிக்கிறது. “இந்த பொண்ணு சாப்பட்டை கொண்டுபோகமல் போகிறாளே, வயத்துக்கு அல்சர் வந்தா என்ன பண்றது, டீ யாழினி கொஞ்சம் நில்லேன், வயசாயிடுச்சில்லயா, நடக்கமுடியலடி...........”

சற்று தாமதித்தேன், அவள் குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு, அந்த குரலில் தாய்மை வழிவதால், என்று எண்ணுகிறேன். சாப்பாடு டப்பாவை தந்தபடி, கொஞ்சம் யோசிடி ரங்கநாதன் மாமா தந்தாரே அந்த வரன் உனக்கு பொருந்தும் என்று எண்ணுகிறேன், போட்டோ பைல வச்சிருக்கேன், அப்புறமா பாரு, என்று கெஞ்சலும் கொஞ்சலுமாய் கூறினாள்.

சரிம்மா என்று தலையாட்டி வைத்னேன், இன்றும் சற்று நேரம் அவளோடு நின்றால், வயசான காலத்துல ஏன்டி இப்படி கஷ்டப்படுத்துற, காலாகாலத்துல கலியாணம் பண்ணி, ஒரு பேரனோ பேத்தியோ, பெத்துக்கொடுத்த அத கொஞ்சின சந்தோஷத்தோடு போய் சேருவேனில்ல........என்று அனுதின பல்லவி பாட ஆரம்பித்துவிடுவாள்.

தெருவை கடந்து, பிரதான சாலையில் கலந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினேன். சர்ர்ர்ரக்கென்று கடந்து போகும் வாகனங்களின் ஹாரன் ஒலியும், காலைக்கே உரித்தான குளுமையும், மிதமான வெம்மையும் இதமான உணர்வை மனதிற்குள் விதைத்தது.

பேருந்தில் அவ்வளவாக கூட்டமில்லை. ஆனாலும் அலுவலகத்தை நெருங்குவதற்குள்ளாக வேர்த்து ஒழுகும். தீப்பெட்டிக்குள் அடுக்கிவைக்கப்படும் தீக்குச்சிப்போல ஏம்பா, உள்ளே போ, போ உள்ளே என்று அதட்டலோடு நடத்துனர்கள் அடுக்கப்படுவர்கள். உங்களுகே தெரியுமே நீங்கள் ஒன்றும் இது போன்ற நிகழ்விற்கு விதிவிலக்கு அல்லவே !

நாசியை தொட்டுபோன வியர்வை, சென்ட், பவுடர்பூச்சு, மெதுவடை மல்லிகை பூ, என்று கலவையான மணங்களை உள்வாங்கியபடி நகர்ந்து இருவர் அமரும் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.

அக்கா மெதுவடை, அம்மா மெதுவடை, மெதுவடை மெதுவடை, என்ற வடை விற்கும் சிறுவனின் குரல் என்னை ஏனோ சங்கடப்படுத்தியது. படிக்கும் வயதில் அவனுக்கு என்ன கஷ்டமோ, ஆலோசனை சொல்வது கடினம், அதை செயல்படுத்துவது தான் கடினம். இந்த வேலையை விட்டு படி என்று சொல்ல எழுந்த ஆவலை எனக்குள்ளே அடக்கிக்கொண்டேன். தினமும் ஒரே பேருந்தில் பயணிப்பதால் அந்த சிறுவன் நன்கு பரிச்சயமானான். குட்மார்னிங் கா, என்று சிரித்தவனை பார்த்து கையசைத்தேன்.

அந்த கையசைப்பு எனக்கு முன்பு நின்றிருந்தவனின் தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கவனத்தை என்பால் திருப்பியது. அழகாய் துரு துரு கண்களோடு, சிவந்த இதழ்கள் குவிந்தும் குவியாமல் சிரித்த குழந்தையின் முகம் மலர்ந்து என்பார் தாவியது.

அப்பொழுதுதான் கவனித்தேன், ஒரு கையில் மாட்டிருந்த பேக்கின் கனமும் குழந்தையின் தாவலும், அவனை நிற்கவே தடுமாறச்செய்தது. என் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் அவன் அமராமல் தள்ளி நின்றது, எனக்கு கொஞ்சம் விந்தையாக கூட இருந்தது. ஆண்களில் இப்படிப்பட்டவர்களும், இருக்கிறார்களா என்ற என் எண்ணத்தை அழித்து, ஒரு வேளை கவனிக்காதிருக்கக் கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.

சார், சார் , என்று இருமுறை அழைத்தும் திரும்பாததால், நான் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமாய் வேடிக்கைப் பார்க்கலானேன். அந்த குழந்தை மழலை ஓசை எழுப்பி என்னை கவர முற்பட்டது. அந்த செயல் அம்மாவின் பேரன் பெயர்த்தி கூற்றை நினைவுப்படுத்தவே, நான் “அந்த மணமகனின் புகைப்படத்தைப் பார்த்தால் என்ன” ? என்று எண்ணினேன்.

(நான் திருமணம் செய்வதா வேண்டாமா என்று யோசித்து வையுங்கள்.)
மணமகனின் புகைப்படத்தை பார்க்கும் எண்ணத்தை ஒத்திப்போட்டது. அந்த குழந்தையின் மழலைச்சிரிப்பின் ஒலி, யாழ், புல்லாங்குழல் இன்னும் பல காற்றுவாத்தியங்களை விட அதீத இனிமையும் ஈர்ப்பும் அதனிடம்.

என் பார்வை அந்த குழந்தையின் மீது பதிந்த போது, குழந்தையை வைத்திருந்தவன் நிற்க முடியாமல் பேருந்தின் ஒட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்தான். முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம், “கொஞ்சம் அவர கூப்பிடுங்களேன்“ என்றுரைக்க, அவர் அழைக்கும் வேகம் காற்றின் சீற்றத்தில் கரைந்து போனதால், நானே எழுந்து அந்த குழந்தையை என் பாற் வாங்கவேண்டியதாயிற்று.

நான் குழந்தையை பிடுங்குவதாய் எண்ணியிருக்க வேண்டும். அவனின் பிடி குழந்தையை இறுக பற்ற, சற்று சிரமத்துடனேயே அவனிடமிருந்து குழந்தையை நான் வாங்க வேண்டியதாயிற்று. சார் அங்கே சீட் இருக்கு, குழந்தையை வச்சுக்கிட்டு சிரமப்படுறீங்களே வந்து உட்காருங்க, என்ற இருக்கை நோக்கி நகர்ந்தேன். குழந்தையை கொண்டு செல்ல அவன் அனுமதி எனக்கு தேவையாய் இருக்கவில்லை. அவனால் மறுக்கவும் முடியவில்லை, என் பின்னோடே குழந்தைக்காக வரவேண்டியிருந்தது.

முன்புறம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களில் யாரோ சீழ்கை ஒலி எழுப்பினார்கள்.

“கொஞ்சம் சுமாரா, அழகா, தனியா, ஒரு ஆம்பிளை நடமாட முடியலடா சாமி............“ என்று கமெண்ட் வேறு.

(கிண்டலும் கேலியும் ரசிக்கும்படியாக இருந்தால் பரவாயில்லை தான், பிறரை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாதே)
அந்த கிண்டல் அவனை காயப்படுத்தியிருக்க வேண்டும், தேவையா? இருக்கை இல்லை என்று நான் உங்களை கேட்டேனா?.

(அவர்கள் கிண்டலடித்தது என்னவோ என்னைதான், இயல்பாய் எனக்கு தான் வருத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்.)

ஓ, சாரி சார், உங்களுக்கு இருக்கை வேண்டாம் என்றால் ஒரு பாதகமும் இல்லை. குழந்தையை மட்டும் நான் வைத்துக்கொள்கிறேன், இறங்கும் போது வாங்கிக்கொள்ளுங்கள்“

அய்யோ என்ன பெண் நீங்கள், நம் இருவரையும் தான் அவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.

இருக்கட்டுமே, கிண்டலைவிட உங்கள் குழந்தையின் உயிர் விலைமதிப்பற்றதாய் உங்களுக்கு தோன்றவில்லையா? படி நேராய் நின்றிருந்தீர்கள், ஏதோ விபரீதம் நடப்பது போன்று பயம் ஏற்பட்டதால் எழுந்து வந்தேன், இதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள், என்னவோ ஏதோ ஆகட்டும் என்றிருக்க, நான் ஒன்றும் விலங்கினம் இல்லவே, சற்று மனிதத்தன்மையோடு சிந்தியுங்களேளேளேளன்.......................... இந்த இழுவைக்கு காரணம் பேருந்து ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தான்.

கல்லூரி மாணவர்களின் ஓஓஓஓ வென்ற கூச்சல்,பயணிகளின் சலசலப்பு இறைவேண்டுதல், அங்கு அசம்பாவித சூழலை நிச்சயப்படுத்தியது.

குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு எழுந்தேன், பேருந்து தாறுமாறாய் பயணித்தது. ஓட்டுநர் ஹேண்பாரின் மீது முன்புறமாக கவிழ்ந்திருந்தார்.

மனம் முழுவதும் திகிலை சூழ்ந்து கொண்டாலும், படிக்கும் போது சாரணர் இயக்கத்திலிருந்ததால் ஏற்பட்ட மனதிடம் உடன் வரவே செய்தது.
நான் ஓட்டுநர் இருக்கையை நோக்கி நகரவும், பயணிகளின் பயக்கூச்சல் ஒலியும், நிகழ்வாய் இருக்கும்பொழுதே........ கல்லூரி மாணவர்களின் ஒருவன் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்து, பேருந்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தினான். நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து விட்டால் போதும்மென்று பயணிகள் வெளியேற, மாணவர் இருவர் ஓட்டுநரை இரு இருக்கைகளின் இடையே உள்ள இடைவெளியில் கிடத்தினார்கள், அவர்களில் ஒருவன் ஓட்டுநரின் இதயத்தில் கைகளால் அழுத்தினான், (இந்த சீன் எல்லா புகைப்படங்களிலும் வருமே.........உங்களுக்கு பரிச்சயமானதுதான்.)

நான் ஓட்டுனரின் தலைப்புறமாக அமர்ந்து அவர் தலையை என் மடிமீது வைத்துக்கொண்டேன். வியர்த்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து விட்டேன். ஓட்டுநர் நல்ல நேரம் போலும் கால் மணி நேர போரட்டத்திற்கு பிறகு கண்களை மெல்ல திறந்தார். கல்லூரி மாணவர்களிடையே இதற்கும் ஓஓஓஓவென்ற கூச்சல்தான்.

ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி அம்மாணவர்கள் முகத்தில், உயிர் தப்பிய உணர்வு எந்தன் உள்ளத்தில், இந்த நிலையை தமிழ்ராஜாவின் அறிவுரையை நான் மறந்தே போனேன். மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் தான்.

தமிழ்ராஜாவின் அறிவுரை நினைவிற்கு வருமா என்று ஊகித்து வையுங்கள்................


மீண்டும் சந்திப்போம்.


ஒரு உயிர் பிழைத்த உற்சாகம் சில நொடிகளிலேயே, மரணத்தை தழுவியது. ஓட்டுநர் மூச்சுவிட திணறினார். இமைகள் பிரிய துடித்து, இயலாமையுடன் தழுவிக்கொண்டன. உயிர் பிரியும் தருவாயில் நீண்ட பெருமூச்சுகள் எழுமே, அப்படி தொடர்பெருமூச்சுகள் எழுந்தது அவரிடத்தில். அவர் என்று சொல்வதற்கில்லை அவன் தான் என் வயது தான் அவனுக்கும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
நான் முடிவே செய்துவிட்டேன், லைவ்வாக ஒரு மரண நிகழ்ச்சி அரங்கேறப்போகிறது என்று. கத்தி அலறவும் முடியாமல், துக்கத்தை மறைக்கவும் முடியாத நிலை எனக்கு. என் உடல் வியர்வையில் குளித்தது. விழிகளில் கண்ணீர் பெருகியது. நான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தேன். மெல்ல அவன் காதருகில் குனிந்து உன்னை நேசிக்கிற யாருக்காகவேணும் நீ பிழைத்துக்கொள் என்றேன்.

உலகத்தில் பிறந்த யாருக்கும் நம்மை பிறர் அன்பு செலுத்த வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும்.

(நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்களை படித்ததின் விளைவு)
உன் மனைவிக்காக, அல்லது காதலிக்காக, உன்பெற்றோருக்காக அல்லவென்றால், உன்னை நேசிக்கும் யாரோ ஒருவருக்காக, அட்லீஸ்ட் எனக்காகவாவது, (உடனே அதீதமாய் கற்பனை செய்துவிடாதீர்கள், காதலுடன் நேசிப்பதற்கும் சக மனிதனாய் நேசிப்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.) நான் மீண்டும் மீண்டும் ஆழமாய், உணர்வுப்பூர்வமான உச்சரிப்பினூடே கூறினேன். என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை பயித்தியமாக கூட எண்ணியிருக்கக்கூடும்.

நான் அழுதேன், அரற்றினேன், பிரார்த்தனை செய்தேன். “ஆபத்பாந்தவா அநாதை ரட்சகா, எந்த ரூபத்திலாவது வந்து விடு வந்து காப்பாற்று”

“யார் அந்த பொண்ணு, அப்படி அழுவுது”.

“அதுவா டிரைவர் பொண்டாட்டியாம்பா பாவம் சின்ன வயசு”
“அட நீ வேற டிரைவருக்கு இன்னும் கலியாணம் ஆகல” இடை மறித்து ஒருவர்.
“அப்படியா சொல்ற..... ஒரு வேள தங்கச்சியா இருக்குமோ”

அவர்களின் ஆராய்ச்சி என் பக்கமாக திரும்பியிருக்க, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது அந்த குரல், நகருங்கப்பா டாக்டர் வந்தாச்சு, வழிவிடுங்க..........

கூட்டம் விலகி வழிவிட்டது. ஓ என் பிரார்த்தனை கடவுளின் செவிகளுக்கு எட்டிவிட்டதா?”.

பெண்களின் கண்ணீருக்கு கற்களே கரையும் போது, கடவுள் கரைய மாட்டாரா என்ன?.

வந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை ஓட்டுநருக்கு, குத்தினார். நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். எனக்கு ஊசி என்றால் கொஞ்சம் பயம்பா. (சரி சரி புரிகிறது......சூழ்நிலை புரியாமல் கிண்டல் பண்ணாதீர்கள் ஆதித்தன்)

“ கொஞ்ச நேரத்திற்கு பயமில்லை, ஒன் ஹவர்க்குள்ளாக இவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தாக வேண்டும். இவரோடு யார் வருகிறீர்கள், என்று மருத்துவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.

“நான் வருகிறேன் சார்” என்றேன்.

“ நீங்கள்........”என்று இழுத்தார்

“ பயணிதான்” என்று முடித்தான் அந்த குழந்தைக்கு சொந்தக்காரன்.

(மருத்தவரின் பார்வையில் பேருந்தில் பயணம் செய்ததற்காகவே இப்படி ஒரு ரியாக்ஷான என்ற கேள்வி தொக்கிநின்றது)

“குழந்தையை பிடியுங்கள்” என்று என்னிடம் நீட்டினான்.
என் மடியில் ஒட்டுநரின் தலை வைக்கப்பட்டிருந்ததால், நான் குழந்தையை வாங்க தயங்கவே..........மருத்துவர் கௌதமன் என்று குரல் கொடுத்தார்.

“அண்ணா என்றபடி முன் வந்தான் அவன், உங்களுக்கு அறிமுகமானவன்தான் சற்று முன் பேருந்தை நிறுத்திய அந்த மாணவன்.

“இவரை தூக்கி காரில் கிடத்திவிடுங்கள் பா”

அவனும் நண்பர்களுமாய் ஓட்டுநரை தூக்கிச்சென்றார்கள்.

நான் குழந்தைக்கு உரியவனிடமிருந்து குழந்தையை வாங்கினேன்.

“ஹேய் நாம தான் தப்பா புரிஞ்சுகிட்டோம், அந்த பொண்ணு, கொஞ்சம் நெட்டையா குழந்தையை வச்சிக்கிட்டு இருந்தானே அவன் பெண்டாட்டிப்பா..........”

கிசு கிசு தொடர்கிறது.

ஓட்டுநர் பிழைத்தாரா?

கிசு கிசு வில் எதாவது நிஜமாகுமா?

சிந்தித்து வையுங்கள்.............................. மீண்டும் சந்திப்போம்.


மெல்ல மாலை மயங்கும் நேரம், காகங்களின் கா கா, மரக்கிளை கிளிகளின் கீச் கீச் ஒலியும் மனதை சாந்ததென்றலுடன் உறவாடச்செய்தது. இருளும் அல்லதா பகலும் அல்லாத, மங்கலான வெளிச்சத்துடன் கூடிய பொழுது அது.

அந்த மருத்துவமனையின் நீண்ட வளாகத்தில், சுவற்றிற்கு முதுகை கொடுத்தப்படி அமர்ந்திருந்தேன் நான். சற்றே கலைந்த தலை, லேசாய் கசங்கிய உடை. கொஞ்சமே கொஞ்சமாய் இடம் பெயர்ந்த ஸ்டிக்கர் பொட்டு, என்னை போன்றே வாடியிருந்த ரோஜா மலர்.

சற்று தூரத்தில் பார்த்தும் பார்க்காமல் நின்ற அந்த குழந்தைக்கு உரியவன். என்னருகே உரசிக்கொண்டு அமர்ந்திருந்த கௌதமன். அவன் மேல் கால்களை நீட்டியவாறு கௌதமனின் நண்பன் ரவி, எங்களுக்கு நேர் எதிரில் அவசர சிகிச்சை பிரிவு. இடையிடையே அங்கும் இங்குமாய் அவசர நடைபோடும் வெள்ளை சீறுடை நர்ஸ்கள்.

“பிகாசோ ஒவியம் போல அழகா இருக்கீங்க மேடம்” என்றான் கௌதமன்.

சற்றே திரும்பி முறைத்தேன்.

“ சைட் அடிக்குற நேரமாடா இது”

“ இதோ பாருடா மேடத்துக்கு ஆசைய, நான் பாட்டிய எல்லாம் சைட் அடிக்குறது இல்ல, ஒன்லி பியுட்டியை மட்டும் தான் பாக்குறது”
இத்தருணம் கௌதமனை வருணிக்காமல் போனால், அருந்தா வருத்தப்படக்கூடும். சுருண்ட கேசம், அடர் கருவிழிகள், வெளுப்பும் இல்லாமல் விஷாலைபோன்று கருப்பாகவும் இல்லாமல், நடுத்தரத்தில் ஒரு கலர் என்ன கலர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சராசரி உயரம். அவன் அணிந்திருந்த ஸ்கை புளு ஷர்ட்டும், கருமை நிற பேண்ட்டும், அவனை மேலும் அழகுபடுத்தி காண்பித்தன.

வாயில் எப்பொழுதும் எதையோ மென்றபடி இருந்தான். கல்லூரி வாழ்க்கைக்கே உரித்தான குறும்பு அவனிடத்தில் அவ்வப்போது தலைநீட்டியது.

“உங்க ஹீரோ தனிமையில இனிமை காண்கிறாரா? கூப்பிடுங்க மேடம் வந்து உட்காரட்டும்”

“என்ன சீண்டலினா உனக்கு தூக்கம் வராதா”

“அய்யோடா சீண்டவும் இல்லை, தூண்டவுமில்லையப்ப நிஜயத்தை சொன்ன செல்லம் இப்படி கோவிக்கலாமா“

“அடிவாங்க போறடா“

“எதுக்காம்“

“கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு“

சிரித்தான், சிரிப்பிலும் கொஞ்சம் லேசான வருத்தம் தெரிந்தது. பசியும் தெரிந்தது. எனக்கும் தான், நாங்கள் யாரும் உணவருந்தவில்லை.

பசி வயிற்றின் உள் பாகங்களோடு கதை பேசியது. இரண்டு கால்களுக்கு இடையே முகத்தை புதைத்துக்கொண்டேன்.

“ஹலோ எக்ஸ்க்யுஸ்மீ“

“இந்த எக்ஸ்க்யுஸ்மீ யில் தனுஷ் ஐ நினைவுப்படுத்தினான்.

“உங்க ஆள கூப்பிடும்மா, பசிக்குது அப்புறம் அழுதுடுவேன்“ என்று வடிவேலை துணைக்கழைத்தான். நான் முகத்தை நிமிர்தாமலேயே,

“எப்படிடா கூப்பிடறது“ என்றேன்.
“கூப்பிடவேண்டாம் பாடுங்க, உன் பேரே தெரியாது, உன்னை கூப்பிட முடியாது, உனக்கோர் பெயர் வைப்பேன் உனக்கே தெரியாது”

“ப்ளீஸ் டா கௌதம், விளையாடாம கூப்பிடு”

“ எப்பவும் ஒரே மாதிரி இருக்கனும், தூங்கும்போது மட்டும் சார், தோள் மேல சாஞ்சுப்பாங்களாம், இப்ப மட்டும் டூ விட்டுடுவாங்களாம், என்ன பொண்ணுங்கடா”

அவன் விளையாட்டாய் சொல்லிவிட்டு போனாலும் மனம் காயப்பட்டது மனம், முன் பின் தெரியாத யாரோ ஒருவனின் தோளில் இளைப்பாறியிருக்கிறேன், என்பதை மனம் குற்றப்படுத்தியது. ஓட்டுநரின் உடல் சற்று தேறியதாய் மருத்துவர் சொன்னபிறகே அந்த குட்டி உறக்கம் கூட. என்னையறியாமல் உறங்கி விழுந்திருப்பேன் போலும், தோளில் சாய்த்துக்கொண்டான், அதற்கு இத்தனை கிண்டல்.

உறக்கம் கலைந்து எழுந்த போது, மனம் பதறி விலகியது, அவன் உரிமையாய் சாய்த்துக்கொண்டதில் நட்பையும் மீறி வேறு ஏதோ தெரியவே, பெண்மைக்கே உரித்தான எச்சரிக்கை குணம், அவன் பிடியில் இருந்து விலகச்செய்தது.

சற்று தூரத்தில் குழந்தையை தோளில் போட்டபடி நின்றிருந்த அவனை பார்த்தேன். அவன் மேல் எனக்கு கோபம் வந்தது. திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்வானாம், இன்னொரு பெண்ணை உரிமையுடன் தோளிலும் சாய்த்துக்கொள்வானாம். என்ன கொடுமை ஆதித்தன் இது, தமிழ்ராஜா நீங்களாவது என் தரப்பு நியாயத்தை கேட்கக்கூடாதா?

(அருந்தா முறைக்கத்துவங்கி விட்டதால் இன்று நான் எஸ்கேப் ஆகி நாளை வருகிறேன்)

யாழினி ஆகிய நான் காதலில் விழுந்துவிட்டேனா?
கந்தா காப்பாற்று.


சரக்............சரக்.............சரக்.............கென்று காலனி தரையுடன் உரசும் சப்தம். கௌதமனின் அண்ணா, என்னை நோக்கி அந்த நீண்ட காரிடரில் ஓடிவந்துக்கொண்டிருந்தார். எனக்குள் பயம் தன் உற்சவத்தை காண்பிக்க தொடங்கியது.

நான் நடந்து வந்து கொண்டிருந்தவர்களை நோக்கினேன், அவர்களும் எங்கள் இருவரின் முகச்சாயலை கண்ணுற்றதினால், நடையை துரிதப்படுத்தினார்கள். நான் எழுந்தேன். என் கால் கட்டைவிரல் புடவையில் அழுந்த முன்புறமாக தடுமாறினேன். வந்தவன் என் இடுப்பில் கைகொடுத்து தாங்கி நிறுத்த, அதை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை என்பதே உண்மை.

நான் யாரையேனும் தொடும்போதோ, அல்லது, யாரேனும் தொடும்போதோ, எனக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்று உற்று நோக்குவது என்பது வாடிக்கைதான், தற்போதோவென்றால், ஆராய்ச்சி செய்யும் மனநிலையில், நான் இல்லை என்பதாலும், அதைவிட முக்கியமாக, ஓட்டுநருக்கு ஏதோ சம்பவிக்கப்போகிறதென்ற திகிலாலும், அவனிடமிருந்து துரிதாமாய் விலகி, மருத்துவரை நோக்கிச்செல்லத்துவங்கினேன்.

“சரவணனோட பல்ஸ் இறங்கிக்கிட்டு இருக்கு, அவரோட குடும்பத்திற்கு தகவல் தரவில்லையா நீங்கள்? வினா பொதுவாகவே எழுந்தது.

இந்தவினாவிற்கான விடை எங்களிடத்தில் இல்லை, ஏனென்றால் சரவணின் குடும்ப விடயங்களை நாங்கள் யாரேனும் அறிந்திருக்கவில்லை. காலை எட்டு மணியிலிருந்து இதுவரையிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் எங்களுக்குள் ஒரு நட்பு பாலம் அமைத்திருப்பினும், சரவணின் குடும்பததிற்கு தகவல் தரவேண்டும் என்று எங்களில் யாருக்கும் எள்ளளவும் தோன்றவில்லை.
மருத்துவத்திற்கான கட்டணத்தை கௌதமும், நெட்டையனுமே ஏற்றார்கள், என்றாலும் பணப்பற்றாக்குறை ஏற்படுமாயின் அதை ஈடுசெய்ய நானும் தயாராகவே இருந்தேன்.

நாடித்துடிப்பு அடங்குகிறது என்றால், இறக்கப்போகிறார் என்று தானே அர்த்தம், கடவுளுக்கு மனம் இரங்கவில்லை போலும், இவள் என்ன படுகை வாசகர்களை இந்த வாட்டு வாட்டுகிறாள், இவளை அழவைத்து பார்க்க வேண்டும் மென்று திட்டமிட்டுவிட்டார் என்று எண்ணுகிறேன்.

என் கண்களில் மீண்டும் கண்ணீர் மையமிடுகிறது. இம்முறை நான் மட்டுமல்ல, மூவருமே செய்வதறியாது திகைத்து இயலாமையினால் கண்ணீர் துளிகளை பதியனிடுகிறோம்.

“நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?, சிறந்தவன் நீ தான் என்று உன்னை கூட்டிச்செல்ல வந்து விட்டதா?. மனம் இசைக்க தொடங்கியது.ள (லிரிக்ஸ் தவறாக இருந்தால், சரியான லிரிக்ஸை உச்சரித்துக்கொள்ளலாம் படுகை வாசகர்கள்)

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அந்த பெண் சற்றெ தலையை மட்டும் நீட்டி, விக்னேஷ் என்று விளித்தாள்.

விக்னேஷ்......... கௌதமனின் அண்ணார்தான், அவன் உள்ளே சென்ற பிறகு, கதவு சார்த்திக்கொண்டது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவளாக, அந்த கண்ணாடி கதவின் வழியே உள்நோக்கினேன்.

சரவணனின் உடல் இருந்த நிலை என்னுள் அதீத பயத்தை உண்டு பண்ணியது. சுவாசிக்க ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள், உயிர், உடலை பிரிய ஆசித்து போராட்டம் நடத்தியது, அதன் விளைவு, உடல் தூக்கி எரிய, அதனை இருவர் அடக்கி பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
நான் எதிர்பாராத வேளையில், கதவு திறக்கப்பட்டது, விக்னேஷ் ஐ அழைத்த அந்த புதியவள்,பேடில் வைக்கப்பட்டிருந்த தாள்களை காண்பித்து நீங்க, சரவணா மனைவிதானே, இதில் ஒரு கையெழுத்து போடுங்கள் என்றாள்.

நான் சரவணாவின், மனைவி அல்லவென்று சொல்ல எத்தனித்த வாயை அடக்கிக்கொண்டேன். நான் செய்வது தவறா சரியா என்று யோசித்து முடிவெடுக்க நேரமில்லை.

(மனைவி என்று கையெழுத்திடுவதா, அல்ல என்று ஓதுங்கி வேடிக்கைப்பார்ப்பதா? சிந்தித்து வையுங்கள் விரைவில் வருகிறேன்.)



சில நேரங்களில் சிந்தித்து நிதானமாய் முடிவெடுக்க நேரம் இருப்பதில்லை. அப்படி நிதானமாய் முடிவெடுப்போம் என்று நாம் ஒத்திவைத்தோமானால், சூழ்நிலை கொண்டு வந்து நிறுத்தும் முடிவை ஏற்க முடியாமல், மறுத்து மாற்றிக்கொள்ளவும் முடியாமல், நெருக்கடியான நிலையில் நிற்போம் என்பதை மறுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லை.

கையெழுத்திடுவதா, வேண்டாமா என்ற கண நேர போராட்டம் தான், சில நொடிகள் தாமதித்தாலும் சரவணனின் உயிர் பறந்து போக வாய்ப்பிருப்பதால் புதியவளின் கைகளில் இருந்து கையெழுத்து இடவேண்டிய தாள்களை வாங்கி கையெழுத்திட்டேன்.

குழந்தை கௌதமனின் தோளில் தவழ்ந்திருந்தாள். சில நிகழ்வுகள் தூக்கம் பசி மகிழ்ச்சி இவற்றை திருடிக்கொள்ளும் போது மனநிலையில் ஏற்படும் மாற்றம் சுற்றியிருக்கும், சுற்றி நிகழும் செய்பாடுகளில், உறவுகளில், மனதின் விருப்பங்களில் நாட்டமில்லாமல் போகும், அவ்வன்னமே யாழினியின் நினைவுளில் குழந்தை தற்காலிக மறதியை பெற்றிருந்தாள். விக்னேஷ் வெளியில் வந்து பொதுவாக பார்த்து, ......................... அந்த பார்வை மனதில் கலவரத்தை உண்டுபண்ணியது,

அவனிடத்தில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வேறு, சற்று நிதானத்திற்கு பிறகு, அவன் பேசினான்.

“சரவணன் இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை, அவரது இதயத்தின் இரண்டு வால்வுகளும் முழுமையாக கொழுப்பினால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரவு கடந்து, இந்த இரவில் மீண்டும் மாரடைப்பு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில், சரவணன் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. நாளை அப்பல்லோவில் இருந்து இதயத்திற்கான தலைமை மருத்துவர் வருகிறார். அதிக செலவுகள் ஆகும். அவர் குடும்பத்திற்கு தகவல் சொல்லிவிட்டீர்கள் தானே?
“ஏன் விக்கி கவலைப்படுகிறாய், சரவணனின் தர்மபத்தினி இதோ இருக்கிறாளே?.“

“சீரியஸ்நெஸ் புரியாமல் விளையாடாதே கௌதம்“ என்று அடக்கினான் விக்னேஷ்

நான் யோசித்தேன், எடிஎம் கார்டு பேகில் தான் இருந்தது. பேக் இல்லை. பேக் பேருந்திலேயே பயணித்து டிப்போவில் யாரேனும் பாதுகாப்பாய் எடுத்து வைத்திருக்கலாம் அல்லவென்றால் சக பயணி யாரேனும் சுட்டபழம் என்று காபளிகரம் செய்திருக்கலாம்,

அருந்தாவிற்கும் தமிழ்ராஜாவிற்கும் மெயில் பண்ணலாம், ஆதித்தனுக்கு அவசர உதவி என்று போன் பண்ணலாம், எது எப்படி இருந்தாலும் அங்கிருந்து பணம் போட்டாலும் எடுக்க எடிம் கார்ட் வேண்டுமே?

தீவிர சிந்தனையின் போது, கை தானாய் கழுத்து சங்கிலியின் முனை பிடித்து விளையாடும், அது குழந்தை பருவ பழக்கம் என்று எண்ணுகிறேன். தாய் முளை காம்பில் வாய் பதிந்திருக்க, தாலியை பற்றி விளையாடும் குழந்தை.

“சங்கிலி........ ஹய் என்றேன்.

“என்ன ஹய்“ – கௌதம்

விக்னேஷின் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது.

நெட்டையன் சற்றே எரிச்சலாய் என்னைப்பார்த்து என்ன என்றான்.

“பொழுதும் அவன் பார்வையில் தீக்கழம்பு கழன்றது, அது நிஜமா? அல்லது என் மனம் அவ்வாறு கற்பித்துக்கொள்கிறதா? என்றும் தெரியவில்லை.
அவன் பார்வையை சந்திக்க திராணியற்றவளாய், விக்னேஷை பார்த்து, இது மூன்று பவுன் சங்கிலி, எப்படியும் விற்றால், 60,000தேறும், தற்போதைய செலவுக்கு இது போதும் தானே?

“என்னவோ சொன்னாயே அண்ணா, இதோ பார் தர்ம பத்தினி என்பதை நிரூபிக்கிறாள்.

“கையெழுத்து போட்டாள் தர்மபத்தினி ஆகிவிடுவாளா? இது என்ன விளையாட்டு, பார்ப்பவர்கள் தவறாய் நினைக்கப்போகிறார்கள், நெட்டையன் எனக்கு ஆதரவு தெரிவித்தான்.

இல்லை ஜீவா சார், எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொள்கிறாள் பாருங்களேன். நாமும் இங்குதான் இருக்கிறோம்.

அவன் பெயர் ஜீவா என்பதா? பெயரில் இருக்கும் ஜீவன் பார்வையில் இல்லையே, கண்கள் கஞ்சியில் தொய்த்து எடுத்ததை போன்று அது என்ன பார்வை.

ஏதோ யோசித்தவனாய், சரவணின் முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றான் ஜீவா

“நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே........” என்று இழுத்தான் கௌதம்.

இப்படி யாழினி பாடவேண்டியது, அவளுக்குபதிலா நான் பாடுறேன் என்று முடித்தான்.

என்னை வம்புக்கு இழுக்கலேன்னா உனக்கு தூக்கம் வராதா?

“வம்பிழுக்கிற மாதிரி நீ ஒருத்திதான் இருக்கிற”

இந்த பேச்சை இதோட விட்டுடு, எனக்கு ரொம்ப பசிக்கு, ஜஸ்ட் ஒரு காஃபி கிடைக்குமா?

“அப்போ நீ ஜீவா வ லவ் பண்ணல”

“நான் காஃபி கேட்டேன்டா“

“போய் மாமாகிட்ட கேளு அம்மணி”

இவன் பேசியது அத்தனையும் அவன் காதில் விழுந்தாலும், அவன் மறுப்பேதும் சொல்லாமல் இருந்ததில், கௌதம் இப்படி பேசுவது அவனுக்கு விரும்பம் தானோ என்று எனக்குள், சந்தேகத்தை ஏற்படுத்தியது.

என்ன பேசுவதென்று தெரியவில்லை எனக்கு, காலையில் அம்மா ஊட்டிவிட அவசர அவசரமாய் உண்டது. வயிற்றில் பசி பெருங்குடல் சிறுங்குடலை தின்னதொடங்கியிருந்தது.

“ அட்லீஸ்ட் ஜஸ்ட் சைட்டாவது அடியேன், அம்மணி வெறும் கழுத்தாய் இருக்கக்கூடாது என்று மருத்துவ செலவை ஏற்கும் அந்த பாரிவள்ளலுக்காக”

நான் முறைத்தேன்.

“ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி” என்று ராகம் பாடினான்.

“ஏய் என்னடா டி சொல்லற” இது ரவி

என் அக்காவ இப்படிதான் கூப்பிடுவேன்....இவளையும் அப்படிதான் கூப்பிடுவேன்.

“என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட, பிகாசோ ஒவியம் னு சொன்ன” -ஜீவா

“ஜஸ்ட் மிஸ், ரெண்டு வயசு பெரியவளா போய்ட்டாளே...“

“அடப்பாவி” என்று வாயில் கைவைத்தேன். கௌதம் சிரித்தான் அவன் கண்களும் சேர்ந்து சிரித்தது.
“என்னவிடுங்கப்பா, குழந்தைக்கு பசிக்குமில்ல”,

“பாருடா நம்ம தாயுமானவள, குழந்தைக்கு பால் ஊட்டினது நானு, தூங்க வச்சது நானு,”

“ஹேய் அவனா நீ........... என்று இடைபுகுந்தான் ரவி.

எனக்கு தான் கொஞ்சம் தர்ம சங்கடமானது. ஆதித்தனை போன்றே குழந்தையை மறந்ததற்காக குற்றம் சுமத்துகிறானே என்றானது.

“அப்போ நீங்க எல்லாம் காஃபி குடிச்சாச்சு“

“எஸ்“ இது ரவி

“அப்போ நான் உங்க லிஸ்ட்ல இல்ல அப்படிதானே?“

“நோ கண்மணி, உனக்கு சீரியல் நடிகைப்போல் அழவே நேரம் சரியாக இருக்கிறது” என்று கிசுகிசுத்தான் ஜீவா

இது என்ன புதுகதை, இந்த துணிவு எப்படி வந்தது இவனுக்கு. நான் திரும்பி முறைக்கதான் எண்ணினேன்....... முடியாமல் இமைதாழ்ந்தது.

இமைகளில் ஒரு வானவில் விழிகளை தொட்டு பேசுதே, இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்............அருந்தா ஹம் செய்வது போல் எனக்கொரு உணர்வு.

நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்காத சூழலில், எங்களின் மனதின் இதமான உணர்வை கெடுப்பது போன்று..........

அந்த மூதாட்டி சராசரிக்கும், அதிக பருமனுடையவலாய் இருந்தாள். வயோதிகம் நடையிலும், உடலிலும் தெரிந்தது. பெரிய தோடுகள் போட்டதாலோ என்னவோ காது அறுந்திருந்தது. வெற்றிலை காவி பற்களில். எண்ணெய் காணாத தலையை அள்ளி முடிந்திருந்தாள்,

சற்றே வேக நடை, நடையினூடே உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் அனைவரையும் அவள் புறமாய் திருப்பியது.

அடி பாதகத்தி குடியை கெடுத்தவளே, நீ நல்லா இருப்பியோ நாண்டுகிட்டு சாவியோ..................ஒப்பாரி ராகத்தில் நீண்டது. நான் அவள் புறமாய் திரும்புவதற்கு முன்பாக அவள் கரம் கொத்தாய் என் தலைமுடியை பற்றியது.

“நானா, யார் குடியையாவது கெடுப்பேனா?“

அவள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா”

யார் அந்த மூதாட்டி?................................................வினாக்களுடன் விடைபெறுகிறேன்.



நானாவது பிறர் குடியை கெடுப்பதாவது, முதியவளின் எதிர்பாராத தாக்குதலில் மனம் தீடிர் தடுமாற்றத்தை அடைந்தாலும், சற்றென்று சுதாரித்துக்கொள்ள முயற்சிக்கும் முன்பாகவே, அவள் இரண்டுகைகளாலும், முதுகில் ஓங்கி அறைந்தாள். வலித்தது, என்னை பெற்றவள் கூட என்னை அறைந்ததில்லை.

என் தகப்பானார் அதிர்ந்து ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை. இதயம் படபடத்தது, சரவணனுக்கு அடுத்த பெட்டை எனக்கு தயார் செய்து விடலாம் அப்படி ஒரு நிலை.

கண்களில் ஏன் கண்ணீர் வழியவில்லை. எனக்காக அழ ஒரு துளி கண்ணீர் கூடவா மிச்சமில்லை.

அடுத்த அறைக்கு அவள் தயாராகும் முன்பாக நான் விலக முற்பட, முதியவள் பின்புறமாய் என் ஜாக்கெட்டை பற்றி இழுத்ததில், அவள் வளுவான கைகளில் ஒரு பகுதி இடம்பிடித்தது. என்ன எதுவென்று பிறர் சுதாரிக்கும் முன்பாக இந்நிகழ்வு நிகழ்ந்து முடிக்க, ஜீவா முதியவளை தடுக்க, கௌதமன், தோளில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் செய்தறியாது நிற்க, விக்னேஷ் அங்கிருந்து என்னை அனைத்து விலக்க....................................

“ நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போய்டுவ, உன் வம்சம் விளங்கது, உன் வீட்டு வாழைமரம் வத்திப்போக, ஒப்பாரி நீண்டது பதிவிடஇயலா வார்த்தைகளோடு.

நான் சட்டென்று முந்தானை பிரித்து போர்த்திக்கொண்டேன். என் உடல் அவமானத்தில், கூனி குறுகியது. தரைதளத்தில் இருந்த ஒவ்வொரு வார்டில் இருந்தவர்களும் வேடிக்கை பார்த்தனர்.

தீடிரென எழுந்த கலவர சப்தத்தில், அதிர்ந்து எழுந்த குழந்தை மூச்சு விடாமல் கத்தியது.

தூரத்தில் செக்யுரிட்டி ஓடி வருவது தெரிந்தது.

ஜீவா முதியவளை தடுத்து நிறுத்தியிருந்தான். இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது அந்த முதியவளின் ஓலம்.

அது அன்றைய இரவிற்கு ஒவ்வாமல், தனித்து நாரசமாய் தோற்றமளித்தது.

கண்கள் அழட்டுமா வேண்டாமா, என்று கலங்கி கலங்காமல் நின்றது. துக்கம் தொண்டையை அடைக்கும் என்கிறார்களே அது இது தானோ,

கலங்கிய கண்களுக்குள் அம்மா சிரித்தாள். அவளுக்கு இன்னும் ஒரு போன் கூட செய்யவில்லை. கொசு கடித்து விடுமோ, ஈ
மொய்த்துவிடுமோ, என்று பார்த்து பார்த்து வளர்த்தவள் அம்மா.

வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் பணி எனக்கு, பல வேளைகளில் வேலை முடித்து தாமதாமாகவே விடு திரும்புவதும், தவிர்க்க முடியாத நாட்களில் இரவு வேலைபார்ப்பதும், வேலை பளுவின் காரணமாக தகவல் தர மறப்பதும் வாடிக்கை என்பதால், என் பாதுகாப்பை குறித்து அவள் பரிதவிக்கப்போவதில்லை.

யாரோ அடிக்கிறார்கள், வசை மாரி பொழிகிறார்கள். குடி கெடுத்தவள் என்கிறார்கள். எனக்கொன்றும் புரியவில்லை.

மனம் வலித்தது, மனதின் வலி முகத்தில் தெறித்தது. உடல் தகித்தது. கண்கள் இருண்டது.

“என்னாச்சுப்பா“ விக்னேஷ் என்னை தாங்க ஆயத்தமானான்.

நான் சரிந்தேன்...............ஹேய்ய்ய்ய்ய்ய்...............ஜீவாவின் குரல் என் செவி தீண்டியது.

அங்கு எல்லோரிடம் ஒரு நிகழ்வு மாற்றம் ஏற்பட்டது.

குழந்தையை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த கௌதமன், குழந்தையை தூக்கியபடி ஓடி வந்தான்.

நான் சரிந்தேன்.............
என்விழிகளின் ஓரங்களில் கண்ணீரும் சரிந்தது.
உள்ளத்தில் தானே புயல் மையம் கொள்ள உதடுகள் உச்சரித்தது நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.

மனிதாபிமானம் மாபெரும் குற்றமா?


யாரோ தாங்கினார்கள்.

ஹேய், யாரச்சும் கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்கப்பா, விக்னேஷ்.

யாரோ தண்ணீர் கொண்டுவந்தார்கள்.

யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்.

இந்த யரோக்களின் உள்ளத்தில் எங்கோ மனிதாபிமானம் ஒட்டிக்கிடக்கிறதல்லவா, அது எனக்கு கொஞ்சம் அதிகமோ, அல்லவென்றால் நான் தான் எல்லா விடயங்களையும் மிகைப்படுத்தி காண்கின்றேனோ?

மெல்ல கண்விழித்தேன், என் முகம் நோக்கி அநேக முகங்கள் குனிந்திருந்தன. கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் பரிதவிப்பு கொஞ்சம் என்ன நடந்ததென்று அறியும் ஆவல்.

அந்த பொண்ணு கண்ணு முழிச்சிருச்சு,

கொஞ்சம் தூக்கிவிடுங்கப்பா,

கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க.

யாரோ கை கொடுத்தார்கள், யாரென்று காண்கிறேன், அட நம்ம ஆதித்தன்.

விழிகள் அகல விரிகிறது. எனக்குள் மலர்ந்த ஆச்சர்த்திற்கு அளவே இல்லை, இப்படி சிநேகிதிக்காக ஒடிவந்த இதயத்தின் துடிப்பை என்னவென்பது.

என் தலை தாங்கிய மடி எதுவென்று நோக்கினால், அந்த மடிக்கு சொந்தக்கரரான தமிழ் ராஜா அங்கு நின்றதால், நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் என் துயரம் எங்கோ பறந்து போனது.

(சுமையா சென்னை சென்று விட்டதாலும், அருந்தாவிற்கு தேர்வு இருப்பதாலும், அவர்களால் என்னை தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதை பிறகு அறிந்தேன்.)

உறவுகளிடமும், உற்றவர்களிடமும், பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ, விஷயங்கள் நண்பர்களின் இதயத்தில் இரகசியமாய் புதைந்துபோகிறது.

கௌதமனின் முகத்தில் நிம்மதி, ஜீவா...........அந்த கண்களில் திடீரென்று மின்னிவிட்டு உணர்வின் சேதி என்னவென்று தெரியவில்லை. முதல்ல வந்து உக்காருங்க, அப்புறம் சந்ததோஷப்படலாம், கைப்பற்றி அழைத்து சென்றான் விக்னேஷ்

என்னை சூழ்ந்திருந்த மனித முகங்கள் கலைந்தது.
குழந்தை அதிகம் அழுதுவிட்டால் போலும், வாடியிருந்த முகம். என்னை கண்டு சிரிக்கலாமா வேண்டாமாவென்று தாமதித்த இதழ்கள்.

நான் நடந்தேன், என் பின்னாக, ஆதித்தன், தமிழ்ராஜா, ரவி, ஜீவா, கௌதமன்,............ஒரு படை தளபதி தன் சேனைகளுடன் வெற்றி நடைபோடும் காட்சி என்னுள் விரிந்தது.

எல்லையில்லா உற்சாகம் எனக்குள், அதற்காக உற்சாக பானம் அருந்திவிட்டேன் என்று யாரும் தவறாய் கற்பிதம் செய்யக்கூடாது.

ஹேய் ரெண்டு பேரும் எங்கப்பா வந்தீங்க, மனதில் மகிழ்ச்சி முகத்தில் பிரதியிட்டு புன்னகையாய் வழிந்தது.

2 எபிசோடா, பசி வித் காஃபி பற்றியே பேசிட்டிருந்த, சைட் அடிக்கிறவங்க யாரும் காஃபி வாங்கிதர மாதிரி தெரியல, அதான் காஃபியோட வந்த மேடம் பிபி வந்து சாஞ்சுட்டீங்க........... ஆதித்தனுக்கே உண்டான குறும்பு அவன் (அவர்) கண்களில் வழிந்தது.
என்னப்பா நீ தைரியமான பொண்ணுன்னு நெனச்சேன், இப்படி சாஞ்சுட்ட, நான் நெனக்கிறேன் உனக்கு பசி மயக்கம்னு, தமிழ் ராஜாவிற்கே உரித்தான கரிசனை விழிகளில்.

(விழிகள் மட்டுமே மனிதனின் உண்மையான உணர்வுகளை அடையாளப்படுத்தும்.)

நான் கேட்டது வேறப்ப எதுக்கு வந்தீங்க?

“ லூசு ஹாஸ்பிட்டல் அட்ரஸ் சொல்லு, அந்த பாட்டியம்மாவ சாமாதானப்படுத்த வரேன்னு சொன்னேனில்ல, தமிழ் ராஜாவின் கையால் செல்ல கொட்டு ஒன்றை தலையில் வைத்தான் (தார்)

ஒரு இன்ஜக்ஷன் போட்டுகிறியா? – விக்னேஷ்

“வேண்டாம்பா, அதான் ஆதித்தன் காஃபி வாங்கிவந்திருக்காரே, குடிச்சா டயர்ட் போயிடும்“ (ஊசியென்றால் கண்ணை கசக்கி அழுவேன் என்பது வேறு விஷயம்)

அனைவருமாய் ஹாஸ்பிடல் ஸ்டாப்களின் ரெஸ்ட்ரூமில் தஞ்சம்புகுந்தோம்.

ஜீவா காஃபியை என் கைகளில் திணித்தான்.

குழந்தை கௌதமனிடம் சேட்டை பண்ணிக்கொண்டிருந்தாள். கௌதமன் அவளோடு விளையாடி இடையிடையே எங்கள்பாற் பார்வையை செலுத்தினான்.

“யார் அந்த லேடி“

“யார்“ முகத்தை அசைத்து கண்களால் வினவினேன்.

“உன்னை அடிச்சது“ என்று வினவினான் ஆதித்தன்.

“அவங்கள சமாதானப்படுத்ததானே வந்தேன்“ – தமிழ்ராஜா

“அப்போ என்னை பார்க்க வரல”

ஆதித்தன் தமிழ்ராஜா இருவருமே ஹேய்......... என்று கோரஸ் எழுப்பினார்கள். அந்த ஒலியில் அவர்கள் என்மீது வைத்திருந்த நட்பின் ஆழம் தெரிந்தது.

“நான் பண்ண கலாட்டாவில் சரவணனை மறந்துடோமோ?“

“சரவணன் நல்லா இருக்கார், அவர் மனைவி வந்துட்டாங்கப்பா“ – கௌதம்.

“எல்லாம் சரி உன்னை அடிச்சது யாரு” மீண்டும் வினவினான் ஆதித்தன்.

“எனக்கெப்படிப்பா” தெரியும் என்று கைகளை விரித்தேன்

“யாழினியை அடிச்சது யாருன்னு நான் சொல்றேன்” சம்மன் இல்லாமல் ஆஜரானான் ரவி.

யாழினியை அடித்த அந்த முதியவள் யார்?


சம்மன் இல்லாமல் ஆஜரானாலும், ரவி சொல்ல வந்த சேதி என்னை பற்றியது என்பதால், யார் என்ற வினா முதலில் என்னிடத்தில் இருந்தே எழுந்தது.

அதை அறியும் ஆவல் தமிழ்ராஜாவிடம் அதிகம், என்றாலும் ஏனையவர்களும் அந்த விடயத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் சளைத்தவர்களாக இருக்கவில்லை.

பழகிய பலமணி நேரங்கள், ஒரு நட்பு அலைகளை பரவ விட்டதில் இயற்கை தவறேதும் செய்யவில்லை என்று எண்ணுகிறேன். இங்கே யாருக்கும் யாரிடத்திலும், எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லை. யாரோ என்று எண்ண முடியாத அளவிற்கு அங்கே நட்பு விரவிக்கிடந்தது. சக தோழிக்கு நிகழ்ந்த நிகழ்வு, அனைவர் மனதையும் காயப்படுத்தியிருந்தது.

அனைவர் பார்வையும் அவன் மேல் ஆர்வமாய் திரும்பியிருக்க,
நடுவாந்திரமாய் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தபடி, எனக்கு தெரியாது......... எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்றீங்கண்ணு............ என்று இழுக்கும் பொழுதே கௌதமன் வலிக்காமல் அவன் முதுகில் அடித்தான்.

காற்றிழந்த பலூனை போல் ஆனது, முதியவள் யார் என்று அறிய ஆவல் கொண்டவர்களின் நிலை.

ஆதித்தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

எப்படியாவது அவங்கள சமாதானப்படுத்தனும்னு நெனச்சு வந்தேன், பட் முடியாம போச்சு, வருத்தபடாதீங்க யாழினி, உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்றான்.

அப்படி அவன் வாய் சொன்னதே தவிர முகத்தில் ஏமாற்றம் பிரதிபலித்தது.

கௌதமன் ரவியின் விளையாட்டை சுலபமாக எடுத்துக் கொண்டாலும், ஜீவாவின் முகத்தில் சிறு எரிச்சல் வந்து மறைந்ததை யாழினியாகிய நான் கவனிக்க தவறவில்லை.

அவனிடையே ஏற்பட்ட முகமாற்றங்கள் எனக்கு எதையோ உணர்த்தினாலும், நட்பா காதலா என்றொரு இனம் புரியா குழப்பம் என் உள்ளத்தை ஆட்டுவித்தது.

எனக்கும் அந்த முதியவளை குறித்து அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவள் அடித்ததைவிட, அவள் வார்த்தைகள் என்னை கொன்றது.

ஜீவாவின் மீது இடைப்பட்ட நிமிடங்களில் ஏற்பட்ட குழப்பமான உணர்வு, முதியவளின் குடியை கெடுத்தவள் என்ற வார்த்தையை ஊர்ஜிதப்படுத்திவிடுமோ என்றொரு அச்சத்தை எனக்குள் உண்டாக்கியது.

அடிப்படையில் நான் யாருக்கும் தீங்கு செய்யக்கூடியவளே அல்ல. என் பார்வை இயல்பாய் ஜீவாவின் பக்கம் திரும்பியது.
குழந்தை அவன் தாடையில் தன் வாயை வைத்து கடித்தாள், கீழ் இரண்டு பால் பற்கள் வந்திருந்தது. நிச்சயம் அவனுக்கு லேசாய் வலிக்கதான் செய்திருக்கும், வலியை உணர்ந்து சிறு ஆ என்றொரு ஒரு எழுந்த போதும், ஊடாக நகைக்கவே செய்தான் அவன்.

இரண்டு கைளாலும் குழந்தையை அனைத்துக்கொண்டதைப் பார்த்த போது, புகைப்படம் எடுத்திருந்தால், தகப்பனின் பாசம் அங்கு காவியமாக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

ஹ, ஆ, அம்மா என்று அவள் தத்தி தத்தி மழலை பேசினாலும், இசையாய் வந்து செவி தீண்டிய உணர்வு எனக்கு.

என் முகம் என் உணர்வுகளை பிரதிபலித்ததோ என்னவோ, ஆதித்தன் என் கையை பற்றியதால் நான் என் உணர்வு நிலையை அடைந்தேன்.

“நாங்கள் புறப்படுகிறோம்” இருவர் தொனியும் ஒன்றாய் ஒலித்தது.

நான் தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். என்னதான் கௌதமன் ரவி இருவரும் உடன் இருந்தாலும் கூட தனித்து விடப்பட்ட உணர்வு எனக்குள், கண்ணை கட்டி காட்டில் விடப்படும் நிலை என்னவென்று நிகழ்காலத்தில் உணர்கிறேன்.

ஆதித்தன் ஊருக்கு போக வேண்டியது கட்டாயம் என்பதால், தமிழ்ராஜாவாவது உடன் இருந்தால் தேவலாம் போல் இருந்த போதிலும், அவன் முகத்தில் தெரிந்த அவசரம், அவனுக்கு என்ன வேலையோ என்று மனதின் ஏக்கத்தை மறைத்துக்கொள்ளச்செய்தது.

அவ்வப்போது அம்மா முந்திரிக்கொட்டை, என்று செல்லமாய் தலையில் தட்டுவதின் அர்த்தம் இப்போது புரிந்தாலும் கூட, நிகழ்வுகளின் அவசியத்தில் தலையிடாமல் இருக்க இந்த யாழினியால் முடியவில்லையே ஏன்?

நேரம் கடந்த இரவு என்பதால், எப்படி பேருந்து நிலையம் செல்வார்கள் என்றொரு கவலை என்னுள் எழுந்ததின் ஊடாகவே, முதல் முறை வந்த நண்பர்களை சரிவர உபசரிக்கும் நிலையில் நான் இல்லாதது ஒரு குறையாகவே பட்டது எனக்கு.

இருவர் முகத்திலும், சற்று சீக்கிரமே விடைகொடுத்தால் தேவலை என்றொரு பாவனைத்தோன்றியது.

விடைபெறும் தோரணையில் விக்னேஷ் என்கைப்பற்றி குலுக்கவே, மூவருக்கும் விடைதரும் இக்கட்டான நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
நான் விரும்பியது எதுவும், அங்கே நடக்கவில்லை, என் வாழ்வை சூழ்நிலை வாழ்ந்துக்கொண்டிருந்தது என்பதே நிஜம். சூழலுக்கு ஏற்ப மாறும் பச்சோந்தி தனம் எப்பொழுது என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது என்று எனக்கு தெரியவில்லை.

நானும் பேருந்து நிலையம் வரை வருகிறேனே என்று எழுந்தேன்.

ஆதித்தனும், தமிழும் மறுப்பதற்கு முன்னதாகவே, ஜீவா இப்பொழுது அவசியம் போகவேண்டுமா? என்றொரு வினாவை முன்வைக்க, அதில் என்மீதான கரிசனை தென்பட்டதையும் மீறி, என் மீதான உரிமைபாராட்டல் சற்று அதிகம் தலைதூக்கவே, அதை மறுக்கும் மனோ நிலைக்கு நான் ஆட்பட்டதால், நிச்சயம் போக வேண்டும் என்றொரு பதிலை உதிர்த்துவிட்டு, தமிழ்ராஜாவி்ன் கரம் பற்றிக்கொண்டு அவர்களுடாக நைடக்க இடைப்பட்டேன்.

என் வார்த்தையில் சற்று அழுத்தம் தெரித்திருக்கவேண்டும். மற்றவரின் வித்தியாச பார்வையையோ, ஜீவாவின் கஞ்சித்தன்மைக்கொண்ட பார்வையை எதிர்நோக்கும் சக்தி என்னிடம் இல்லாததாலேயே, தமிழ்ராஜாவின் பற்றுதலோடு நகரவேண்டியிருந்தது.

பேருந்து நிறுத்தம் வரை நீங்கள் வரவேண்டியதில்லை யாழினி, நான் நிறுத்தியிருக்கும் கார் வரை வந்தால் போதுமானது, நான் இவர்கள் இருவரையும் சென்னை பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன், அதுவுமல்லாமல், நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இருவரும் குழந்தைகளாக எனக்கு தோன்றவில்லை என்றான்.

ஜீவாவிடம் அவ்வாறு பேசியதில் யாருக்கும் உடன்பாடில்லை போலும், என் நிலையும் அவஸ்தையும் அவர்களுக்கு புரியவாய்ப்பில்லையே?

மற்றபடி அங்கு ஒரு ஆழமான மௌனமே விரவியது.

லேசனா தென்றல், இரவிற்கே உரித்தான எங்கோ நாய் குரைக்கும் ஓசை, சன்னமான நிலவொளியுடன் தெளிவில்லா உருவத்தை பறைச்சாற்றும் இருள், என் கண்களின் ஓரம் பனித்த கண்ணீரை அவர்கள் அறிய செய்ய வாய்ப்பில்லை.

விக்னேஷ் ஓட்டுனர் இருக்கையிலும், ஆதித்தன் அருகிலுமாக அமர்ந்துவிட, அந்த முதியவள் இங்குதான் எங்கேனும் இருக்கக்கூடும் யாழினி, நீ தைரியமாய் போய் அவளிடமே கேள், விடை கிடைக்கும், பிறகு ஜீவாவிடம் அப்படி நடந்திருக்க வேண்டாம், உன் குழப்பம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை நீ ஜீவாவை நேசிப்பதாய் உனக்கு தோன்றினால், அவனிடம் சொல்வதில் எந்த தவறும் இல்லை. திருமணமானவனா? என்றொரு சந்தேகம் இருப்பின் இதை நீ அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிடலாம். பிறரை காயப்படுத்தி அதில் மகிழ்ச்சியடைக்கூடியவள் நீ அல்ல வென்பதால் நான் இதை உனக்கு கூறுகிறேன் என்றான்.

நான் மௌனித்தேன். என் பலவீனம் மற்றவருக்கு தெரியாமல் இருள் எனக்கு துணை புரிந்தாலும் கூட நண்பனாகிய தமிழ்ராஜாவை ஏமாற்ற என்னால் முடியவில்லை.

எங்கள் கைகள் பிரிந்த போது இருவர் உள்ளங்களும் இணைந்து என் பிரச்சனை அவனுடையதாக மாறியதால், கனத்த இதயம் அவனுடையதாகியது.

தாய், தகப்பன், கணவன் மற்றும் பல உறவுகள் இருந்தபோதிலும் கூட நட்பு மட்டுமே பால் பாகுபாடற்று வாழும் என்ற எண்ணம் தோன்றியது என்னுள்.

கார் கண்ணீர் துளிகளால் மங்கலாக்கப்பட்ட பார்வையில் இருந்து மறைந்து போனது.

என் மனம் முதியவளை தேடி................................

தொடரும்...

:thanks:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Mon Mar 12, 2012 10:14 pm

என் மனம் முதியவளை தேடியது. அவளுக்கு ஏன் என் மேல் இத்தனை கோபம், காழ்ப்புணர்வு. அத்தனை பலமாய் என்னை தாக்கினாள் என்றால், எவ்வளவு கோபமும், வெறியும் அவளுக்கு என் மீது இருக்க வேண்டும்.

கோபத்தையும் தாண்டி என் செயல் ஏதோ ஒன்று அவளை காயப்படுத்தியிருக்க வேண்டும், யாரேனும் காரணமே இல்லாமல் பிறரை தாக்குவார்களா என்ன? தீண்ட வரும் பாம்பு கூட தன் உயிரை காப்பாற்றி கொள்ளவே சீறுகிறது.

அவளை பார்த்ததும், அவள் மனம் நோகும் படியாக நடந்துக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினேன்.

என் சிந்தனை ஓட்டம் இப்படி இருக்க என் கண்கள் பாதையில் எங்கேனும் முதியவள் தென்படுகிறாளா? என்ற தேடுதல் வேட்டைக்கு துணைபுரிந்தது.

இதமான குளிர் மெல்ல உடல் நடுங்கச் செய்தது. கொசுவின் கொய்ய்ய்ய்ய்ய்ங் ரீங்காரம் செவியில் இசைமீ்ட்டியது. கொசுவின் இசை இதமான ராகமாக தோன்றினாலும் கூட கொசுவின் கடியை அனைவருமே அறிந்திருப்பீர்களாகையால் வந்த வலி ரசிக்கும்படியாக இல்லை. புத்தர் நிர்வாணியாக இருந்தபடியால் கொசுக்குடிக்கு பயந்ததாக ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். புத்தரையே விட்டு வைக்காத கொசுவிற்கு யாழினி எம்மாத்திரம்.

மருத்துவமனையில் நோயாளியோடு ஒரு உதவியாளர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் உடன் வந்தவர்கள் அங்காங்கே மரத்தடியிலும், மரத்தடியில் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சிலும் படுத்திருந்தார்கள்.

ஒரு கொசுதான் என்றால் தட்டிவிடலாம். கொசுக்கள் கூட்டணி அமைத்தால் என் நடையை துரிதப்படுத்தினேன். ஒன்று பட்டால் உண்டு வாழ்வென்பது கொசுக்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. மனிதர்கள் மட்டும் அதை ஏன் உணரவில்லை என்ற கேள்வி எழுந்து, என் இதழ்களுக்கு ஒரு கேலி புன்னகையை உறவாக்கியது.

என் நடை ஒரு அரை ஓட்ட துரிதத்தில் இருந்ததாலும், இருள் அங்கு சூழ்ந்திருந்ததாலும், அழகிற்காக வைக்கபட்டிருந்த மலர் தொட்டியில் போய் இடித்து நின்றேன். அங்கே மெல்லிய வேலியிட்டிருந்தது. நான் வேகமாய் இடித்துவிட்டேன் போலும், அந்த வேகத்தில் தொட்டி சாய்ந்து செடியின் கிளை தரையில் விழுந்ததில் ஒரு சிறிய கிளை மட்டும் உடைந்தது. அநத நிகழ்வு என் இதயத்தை உடைக்கச் செய்தது.

நான் இடித்தேன் என் கால் வலிக்கிறது, ஆ என்றுறொரு ஒலிக்கூட என்னில் பிறக்கிறது. அது என்ன செடியென்று தெரியவில்லை நிச்சயம் அந்த செடிக்கும் வலிக்கும்........... வலிக்கும் தான், குனிந்து அந்த தொட்டியை சரிப்படுத்தி அந்த கிளையை செடியோடு ஒட்டும் விதமாக வைத்தேன்.

“சாரி டியர் தெரியமால் தான் உன்னை உதைத்துவிட்டேன் என்னை மன்னித்து விடு“ என்று அந்த செடியோடு பேசியதினாலேயே அந்த சன்னமான முனகல் என் செவியை தீண்டியது.

நான் நிமிர்ந்து முனகல் சப்தத்தை தொடர்ந்தேன், அங்கு ஒரு மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது, அந்த சிலையை சுற்றிலும் அழகுக்காக சிறு தோட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த தோட்டத்தின் நடுவாந்திரமாக பசும் புற்கள் பரவிகிடந்தது. அந்த தோட்டத்தின் ஓரத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஒரு தொட்டியை நான் தள்ளியிருக்கிறேன்.

நான் சற்று அருகில் போக முற்பட்டேன், ஆனாலும் கூட புற்களில் செருப்பு காலோடு நடக்க நான் தயங்கினேன். ஒவ்வொரு உயிருக்கும் வலி உணர்வு இருக்குமோ என்றொரு சந்தேகம் என்னுள் எழுந்தது.

நான் காலணியை கழட்டி வெளியில் விட்டேன். அது கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையாக நீங்கள் எண்ண வேண்டாம்.

நுனி கால்களால் நடந்து மணற்கொட்டப்பட்ட பகுதிக்கு, தாண்டிச்சென்றேன். அங்கு தேவமாதாவைச் சுற்றிலும் மணற்பரப்பப்பட்டிருந்தது. அந்த மணற்பரப்பில் முழங்காற்படியிட்டு சுற்றி வந்து வேண்டிக்கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சற்று முன்பு நான் கேட்டது முனகல் அல்ல, ஒரு முதியவளின் வலிநிறைந்த அழுகையுடன் கூடிய பிரார்த்தனை.

மங்கலான இருளிலும் கூட நான் அவளை அடையாளம் கண்டுக்கொண்டேன். அவள் என்னை அறைந்தவளென்று, இப்பொழுது நான் அந்த செடியை நோக்கி நன்றி என்றொரு வார்த்தையை உதிர்த்தேன்.

அந்த முதியவளின் பிரார்த்தனை முடியும் என்று நான் காத்திருக்கிறேன்.

நீங்களும் கூட அவள் யாரென்று அறிய காத்திருங்கள் நாளை சந்திப்போம்.
முதியவளின் பிரார்த்தனை எப்பொழுது முடியுமென்று காத்திருந்தேன். அவள் என்னை அறைந்தவள் என்ற காழ்ப்புணர்வு என்னிடத்தில் கொஞ்சமும் இல்லை. அதைக்காட்டிலும் அவள் என்னை அடித்ததின் காரணம் என்னவென்பதை அறியும் ஆவலுடையவளாய் இருந்தேன்.

ஆழ்ந்த இருள், சில் வண்டின் ரீங்காரம், முதியவளின் முனகல் பிரார்த்தனை, என்னுள் ஒரு பய உணர்வை உண்டாக்கிய போதிலும் கூட நான் அங்கே நின்றிருந்தேன்.

அவள் ஏன் என்னை அடிக்க வேண்டும்? மீண்டும் மீண்டும் இவ்வினா என்னுள் எழுந்தது.

“ஹேய் இங்க என்ன பண்ற, அதட்டலான அந்த ஒலி என் கவனத்தை ஈர்த்தது.

திரும்பினேன், அங்கே ஜீவா நின்றிருந்தான். வெகு நேரம் தேடியிருப்பானோ என்னவோ அவன் குரலில் கோபம் தெறித்தது.

என்ன?

இங்க என்ன பண்ற?

காற்று வாங்கிட்டிருக்கேன், என் பதில் அவன் செவியை தீண்டவில்லை போலும், “என்ன“ என்றிரைந்தான்.

நான் நான்கு இடங்களில் பாதங்களின் நுனி விரல்களை புல்வெளியில் பதித்து அவனருகே சென்றேன்.

ஏன் இப்படி கத்துவீங்க ஜீவா?

நீ என்ன அங்க பண்ணிட்டிருந்த?

“காற்று வாங்கிட்டிருந்தேன்“

“கிண்டலா“

அவன் கண்கள் இடுங்கி கோபப்பட்ட விதம் எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.

மெல்ல புன்னகைத்து, இல்லப்பா நம்ம ஊரு நக்கல் என்றேன்.

எப்பவும் விளையாட்டு தானா உனக்கு, தமிழையும் ஆதி்த்தனையும் வழி அனுப்ப போய்ட்டு திரும்பி வரவே இல்லேனா என்னை நெனைக்கிறது?

என்ன நினைக்கனும்னு உங்களுக்கு தோணுதோ அதைதான் நினைச்சிருக்கனும்? அது சரி என்ன நினைச்சிங்க?

அவனிடத்தில் பதில் இல்லை போலும், மௌனித்தான்.

நான் என்ன குழந்தையா தொலைந்து போறதுக்கு? எதுக்கு இப்படி பதட்டப்படுறீங்க, குழந்தை எங்க?

“குழந்தை கௌதம் பக்கத்துல தூங்குறா“

“அவங்க ரெண்டு பேரும்“

“அவங்களும் தான் பா“

குளிர் உடலுக்குள் மெல்ல நடுக்கத்தை கொண்டு வந்தது. நான் ஸ்ஸ்ஸ் என்றொரு ஒலி எழுப்பினேன்.

நீ எப்பவும் இப்படி கோமாளிபோல எதாவது செஞ்சுட்டுதான் இருப்பியா?

என்ன கோமாளித்தனம் கண்டீங்களாம் என்னிடத்தில்

குளிருது, காற்று வாங்க வந்தேன்னு சொல்ற, இது கோமாளித்தனம் இல்லாம என்னவாம்? இப்பொழுது அவன் உதடுகள் ஒரு கேலி புன்னகையை உதிர்த்தது.

“இந்த குளிர், காற்றில் மிதந்து வரும் இரவி்ற்கே உரித்தான வாசம், தரைவழி பாதங்களில் ஊடுருவும் சில்லிப்பு, சில்வண்டு சப்தம் இதெல்லாம் வித்தியாசமா........... ரசிப்பு தன்மையோடு தானே இருக்குங்க ஜீவா“

மெல்ல புன்னகை ஒன்று அவன் இதழ்களில் உதயமானது.

“இந்த குளிர், காற்றில் மிதந்து வரும் இரவி்ற்கே உரித்தான வாசம், தரைவழி பாதங்களில் ஊடுருவும் சில்லிப்பு, சில்வண்டு சப்தம், இவற்றோடு மங்கலான ஒளியில், லேசாய் கலைந்த தலை, எடுத்து சொருகாமல் காற்றில் ஆடும் உன் முந்தானை, சற்றே மேலாடை விலகியாதால் அரைகுறையாய் தெரியும் முன்னழகு, இதையெல்லாம் காணும் போது நிச்சயம் ரசிக்காமல் இருக்க முடியவில்லை“

நான் அவசர அவசரமாய் ஆடையை சரிசெய்தேன். அவன் சிரித்தான்.
“நான் உங்களை பார்த்து சொல்லவில்லை யாழினி, சற்று முன்பு நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம் பேசுவதாக இந்த வசனம் எழுதப்பட்டிருந்தது அதைச்சொன்னேன்”

என் முகத்தில் வழிந்த அசட்டுத்தனம் தெரியாமல், நிலவு மேகங்களிடையே மறைந்து எனக்கு துணைப்புரிந்தது.

இருவர் பார்வையும் தழுவி பின் வேறு திசை நோக்கியது.

“உங்க மனைவி என்ன பண்றாங்க“

“குழந்தைக்கு அம்மாவா இருக்காங்க”

“இது என்னங்க புது கதை, உங்க மனைவி தாங்க உங்க குழந்தைக்கு அம்மாவா இருக்க முடியும்”

அது என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பாக எங்களிருவரையும் கடந்து சென்றாள் அந்த முதியவள்.

என் கவனம் முதியவள் பாற் திரும்பியது, நான் அவள் பின்னே ஓடி அவள் கரம் பற்றி நிறுத்த முயன்று தோற்றேன்.

“ஏய் சே, கையை தொடாத........கரங்களை உதறிக்கொண்டாள் முதியவள்.

நான் மீண்டும் அவள் கரம் பற்றி அவளை நிறுத்தினேன்.

“த ஒரு முறை சொன்னா தெரியாதா உனக்கு, தொடத, தொடாம பேசு, என்ன? ஒலியோடு சைகையும் எழுந்தது அவளிடம்.

அவள் நின்றாள்.

“என்னை தெரியலியா உங்களுக்கு”
“யார் நீ உன்னை நான் ஏன் தெரிஞ்சுக்கனும்“

என்ன ஒரு அசால்ட்டான பதில், முதுகில் நகத்தால் கீறிய காயம் இன்னும் ஆறவில்லை.

என் பின்னாக வந்த ஜீவாவின் கண்கள் சிவந்து அவன் கோபத்தை வெளிகாட்டியது. தள்ளு.........என்று அவளிடத்திலிருந்து சற்று விலக்கவும் செய்தான்.

காகங்களின் கரையல் சப்தம் விடியலை வரவேற்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய், மனித முகங்கள். ஒரு நாளின் திடீர் சம்பவங்கள் வாழ்க்கை ஒரு நூதன போராட்டம் என்பதை பறைச்சாற்றியது.

நான் யாரேன்றே தெரியாத ஒருத்தி, என்னை ஏன் அடிக்க வேண்டும். இன்னமும் அவள் பேசிய வார்த்தைகள் நெஞ்சத்தை சுட்டது.

“இவளை ஏன் அடிச்ச“ சற்று அழுததமாய் வார்தைக்களை பிரயோகித்து கையை ஓங்கினான்.

முதியவள் பயந்திருக்க வேண்டும், நின்ற இடத்திலேயே மடங்கி தரையில் அமர்ந்தாள்.

ஜீவா ப்ளீஸ், என்ன ஏதுன்னு தெரியாம இப்படி மிரட்டாதீங்க, அவங்களுக்கு நான் யார்னு தெரியல, அங்க கோபம் வேறு யாரோ மீது என்று தான் எண்ணுகிறேன்.

ச்சே என்றொரு ஒலி அவனிடத்தில் எழுந்தது. கைகளை உதரி மறுபக்கமாய் திரும்பி நின்று, ஷர்ட் காலரை சற்று தூக்கிவிட்டு, தலையை கோதிவிட்டுக்கொண்டு பின்பு இடுப்பில் கையை ஊன்றியபடி நின்றுக்கொண்டான்.

அவனின் இந்த செயல் அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறான் என்பதை அப்பட்டமாய் பிரகடனப்படுத்தியது.

முதியவளின் பிரமாண்டமான உருவம் சட்டென்று தரையில் அமர்ந்தது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது எனக்குள்.

“நாலு பிள்ளையை பெற்றேன், நான்கு பிள்ளைக்கும் இந்த கையாலதான் சோறு ஊட்டினேன்“

அவளின் இரு கைகளையும் விரித்துக் காண்பிததாள். கைகள் அடர்பனியில் இளரோஸ்நிற ரோஜா இதழ்களை நனைத்ததைப்போன்ற நிறத்தில் இருந்தது.

அது வியாதியா என்று எனக்கு தெரியாது. அது ஏதோ சத்து குறைவினால் ஏற்படுவதாக அம்மா சொல்வாள். பொதுவாக எலலா வியாதியுமே சத்துக்குறைவினால் தான் ஏற்படுகிறது.
வெண்குஷ்டம் உடையவர்களால் அதிக படியான சூரிய வெப்பத்தை தாங்கமுடியதென்றும், சூரிய வெப்பத்தில் அதிக நேரம் இருக்க நேரிட்டால் தோலின் நிறம் மாறிவிடும் என்பதும் அவள் சொல்லி தான் தெரியும்.

என் சிநேகிதி ஒருத்திக்குக்கூட வெண்குஷ்டம் இருக்கிறது, அவளை தொடுவதிலோ, அல்லது அவளோடு உறவாடுவதிலோ எனக்கு எந்த தயக்கமும் ஏற்பட்டதில்லை.

“வந்தவங்களுக்கு போனவங்களுக்கு, எங்க வீட்டு வேலக்காரவங்களுக்கு, இந்த கையாலதான் படியளந்தேன், இப்ப வந்தவ சொல்றா ஒட்டிக்குமாம்..............கைகளை திருப்பி திருப்பி பார்த்தாள். தொட்டா ஒட்டிக்குமாம்.............தொடத என்னை தொடத........ யாரு பெத்த புள்ளையோ நீ............ என் அங்கம் பத்தி எரியுது....... வயிற்றைத்தொட்டு காண்பித்தாள்

“எங்காச்சும் அடுக்குமா? பையனுக்கு மவன் பொறந்துருக்கான், நான் தூக்க விதியில்ல.......... நான் தூக்க வேண்டாம்னா தூக்க, அந்த பிஞ்சு முகத்த காட்டலமில்ல..........நீதான் சொல்லேன் தாயி...... “

என்னை பார்த்தாள் பார்வை குறைந்துவிட்டது பஞ்சடர்ந்த கண்களில் தெரிந்தது.

அழுகையினூடே எழுந்தவள் மூக்கை சிந்தி ஓரமாய் போட்டு செடிகளுக்கு போடப்பட்டிருந்த நீரில் பாங்காய் கைய சுத்தம் செய்தாள்.

அவளை பார்த்தாள் தூய்மையற்றவளாக தெரியவில்லை எனக்கு. பழமையான சேலை என்றாலும் கூட துவைத்து சீராய்தான் உடுத்தியிருந்தாள். அவளை தொடவேண்டாம் என்று எனக்கு அறிவுருத்தியதிலிருந்தே......அவள் நல்லதொரு தாய் என்பது எனக்கு விளங்கியது. அவளின் புலம்பலுடன் கூடிய அழுகை மகன் வழி பெயரன் மீது அவளுக்கு இருந்த பாசத்தை பறைச்சாற்றியது.

இருந்தாலும் கூட அடிவாங்க நான் எந்த காட்சியில் வந்தேன் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

முதியவளுக்கு பேரக்குழந்தையின் மீதிருக்கும் பாசத்தில் பங்கம் ஒன்றும் இல்லை. அவள் கோரிக்கையில் தவறேதும் இல்லையே..........

என் கண்கள் கலங்கியது, நான் கண்களை துடைத்தபடி திரும்பினேன்.

அங்கே...........ரவி, குழந்தையுடன் ஜீவா, வெறித்தபார்வையுடன் கௌதமன், சோகத்துடன் கைகளில் கார்சாவியை சுழற்றியபடி விக்னேஷ்.

ஒவ்வொரு முகத்திலும் பிரதிபலித்த சோக உணர்வு எனக்குள் சிரிப்பை உருவாக்கியது.

குபீரென்று பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து தொலைத்தேன்.

துன்பம் வரும் வேளையில சிரிங்க, என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க, பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு என்ற பாடல் வரிகள் நினைவில் வந்தகன்றது.

கௌதமன் அடிக்க கை ஓங்கினான்
எதுக்கு இந்த சிரிப்பு-விக்னேஷ்
யாழினிக்கு பயித்தியம் பிடிச்சாச்சுப்போ....ஜீவா

உங்கள ஏன் அடிச்சாங்கன்னு கேட்பீங்கன்னு பார்த்தா, பாட்டி வடை சுட்ட கதையை கேட்டுட்டு இருக்கீங்க.......ரவி.

இவர்கள் சம்பாஷணைகள் எதுவும் என்செவி தொடவில்லை. பாட்டியும் பேரனும் சந்திக்கப்போகும் காட்சி என்னுள் விரிந்தது.


என் தீவிர சிந்தனை மூவரையும் என்பாற் திருப்பியது.

யாழினி எந்தக்கோட்டையை பிடிக்க போகிறீர்கள் என்றான் ரவி

முதியவளின் கோரிக்கை நிறைவேற என்ன வழி என்று சிந்தனை செய்கிறேன்.

இது தேவையில்லா பிரச்சனை, வந்து முழுவதுமாய் ஒரு நாள் முடிந்து போயிற்று, இப்ப தான் சரவணனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தாயிற்றே, அவரிடத்தில் விடைப்பெற்று வீட்டிற்கு செல்வது தான் முறை, நான் வேறு காலேஜ் செல்லவேண்டும்.

நான் இதில் உங்களை சம்பந்தப்படுத்தவில்லை ரவி நீங்கள் போவதாய் இருந்தால் போகலாம்

என்ன இப்படி பேசுகிறீர்கள்?

நான் வெற்று பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். இது போன்ற பார்வை எப்பொழுதேனும் என்னுள் நிகழ்வதுண்டு.

சிந்தனை ஓட்டம் எங்கோ சென்று கொண்டிருக்க இலக்கே இல்லாமல் பார்வை எங்கேனும் பதிந்திருக்கும்.

நீ கிளம்பு ரவி என்றான் கௌதமன்

அப்போ நீ?

அண்ணாகிட்ட பேசிட்டு கொஞ்சம் லேட்டா வரேன்.

சரி என்று தலையாட்டிவிட்டு, நான் வரேன் என்று ஜீவாவிடம் மட்டும் விடைப்பெற்றான்.

எனக்கு என்னவோ நீங்கள் தேவையில்லாம் பிறர் பிரச்சனையில் தலையிடுவது போல் தோன்றுகிறது?

ரவி பளீஸ் உங்கள் கருத்துக்களை என் மீது திணிக்க முற்படாதீர்கள், இது உங்களுக்கு தேவையில்லாதது என்றால் நீங்கள் விலகிக்கொள்ளலாம், இதை செய்யாதே என்று நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.

இங்கே என்ன கருத்து கணிப்பா நடக்கிறது, அவன் ஏளனம் பேச்சில் தெரிந்தது.

குழந்தையை பார்த்து என்ன செய்யப்போகிறாள் அந்த கிழவி, வயதாகிவிட்டால், சாப்பிட்டுவிட்டு ஏதோ ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதானே........

ஹேய், நீ அதிகபடியாய் பேசுகிறாய், முதியோர்களுக்கு எந்த உணர்வோ, உறவுகளோ இருக்கக்கூடாதா என்ன? – கௌதமன்

நீ போவதாய் தானே சொன்னாய் போ – ஜீவா

ரவி நீ புறப்படு, யாழினி நீங்கள் மட்டும் என்னோடு வாங்க, என்ற விக்னேஷ் முதியவளைப்பார்த்து உங்க மருமகள் பெயர் என்னம்மா? என்று வினவினான்.

பத்மா என்றுரைத்தாள் முதியவள்.

நான் விக்னேஷின் பின்னாக நடந்தேன்.

ரவி இன்னமும் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. யாழினி தேவையில்லாமல் பிரச்சனையை பெரிசாக்குறா, நீயும் அவக்கூட இருக்கிறயேடா? என்று கௌதமனை வினவினான்.

ரவி நீ அவங்கள புரிஞ்சுக்கல, அவங்க அந்தம்மாவோட உணர்வ புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு உதவி செய்யனும்னு நினைக்கிறாங்க.

உணர்வுகள புரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப்போறா, இல்ல இந்த கிழவிக்கூட பேரன பாக்குறதால இவளுக்கு என்ன வந்துடபோகுது.

ஏதோ வந்துவிடப்போகிறது என்பதற்காகதான நாம் பிறரிடம் பழகுகிறோம், அது மனதின் உணர்வு, அவளுக்கு பேரனை பார்ப்பது மிக முக்கியமான நிகழ்வாக தோன்றுகிறது. அதை விமர்சிக்க நாம் யார் என்று பதிலுறுத்தான் ஜீவா

யாழினி விக்னேஷின் பின்னூடக நடந்தாள்.

அவன் நின்ற இடம் பிரச வார்டு, மருத்துவனைக்கே உரித்தான பெனாயில் வாசம் அங்கு கொஞ்சம் அதிகமாகவே வீசியது.

“பத்மா யாரு”

“நான் தான் சார்“ என்று முன்வந்தாள் அந்த பெண்.

“உங்க குழந்தை கொஞ்சம் தரமுடியுமா“?

அவளுக்கு ஏன் கேட்கிறார்கள் என்பது தெரியாத காரணத்தினால், அவள் அருகிலிருந்த பெண்மணியை பார்த்தாள். அநேகமாய் அவள் பத்மாவின் சகோதரியாய் இருக்க வேண்டும்

யாழினி அப்பொழுதுதான் அந்த பெண் அணிந்திருந்த சேலையைப்பார்த்தாள், யாழினி அணிந்திருந்த சேலையும் பத்மாவின் சகோதரி அணிந்திருந்த சேலையும் ஒன்றாகவே தோற்றமளித்தது.

“ஏன்” என்ற வினவல் பத்மாவிடமிருந்து வந்தது.

“உங்க மாமியார் வந்திருக்காங்க, குழந்தையை பார்க்க பிரியப்படறாங்க”

“வந்து...........”
“அதெப்படி அந்த அம்மாவிற்கு வெண்குஷ்டம் இருக்கு, அது குழந்தைக்கு ஒட்டிக்காதா? என்றாள் ஒத்தபுடவைக்காரி.

“எனக்குள் கோபம் கொப்பளித்தது, அது என் முகத்தைச் சிவந்து போக செய்தது, கோபத்தில் நான் அழகாய் இருப்பேன் என்று சொல்வதற்கில்லை.

“அது சரி பத்து மாதம் இரத்தமும் சதையுமாய் அவளோடு ஊறி வளர்ந்த பிள்ளையோடு பழகி ஒரு பிள்ளையை நீ பெற்றுக்கொள்ளும் போது கூட உனக்கு எதுவும் ஒட்டவில்லை, அவள் மகனுக்கும் வெண்குஷ்டம் வரவில்லை, குழந்தையை பார்ப்பதாலேயே குழந்தைக்கு வந்து விடுமா? என்ன உங்களின் சங்கதி, மாமியார் கொடுமைக்கு மட்டும் காவல்துறை முன்வராது, இப்பொழுது உன் மேலும் புகார் கொடுக்கலாம்“ என்றேன்

விக்னேஷ் நகைத்தான்

“ஏன் நகைக்கிறீர்கள்“

“நீ அடிவாங்கியதின் ரகசியம் எனக்கு இப்பொழுது புரிகிறது”

“என்ன சொல்கிறீர்கள்”

“ஒரே நிற புடவையால் வந்த வினை“ என்று பத்மாவின் தமக்கையை சுட்டினான்

“நானும் கவனித்தேன், சிகப்பு புடவை கட்டியவள் எல்லாம் என் மனைவி என்றொரு பழமொழி உண்டு அதைபோல் ஆகிபோனது என் நிலை”

“நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை, எனவே குழந்தையை உங்கள் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள், அவங்க வந்து முதியவளுக்கு காண்பித்துவிட்டு வரட்டும்”

“அய்யோ நான் வரவில்லை, அந்த பொம்பள இந்த அம்மாவையே எப்படி அடித்தாள், என்னால் அடி உதையெல்லாம் தாங்க முடியாது” என்று நழுவினாள் அவள்

“அடிப்பாவி நான் அடிவாங்கியதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாளா?” மனம் புழுங்கிபோனேன். இப்படியும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

குழந்தையை விக்னேஷே தூக்கிக்கொண்டான். நான் மெல்ல அவனோடு நடந்தேன்.

“இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் அல்லவா யாழினி“

“ஆம்“ என்று தலையசைத்தேன்.

“ஒன்றிரண்டு வார்தைகள் தான் பேசுவீர்களா என்ன?“

“அப்படி இல்லை, அதிகம் பேச எதுவுமில்லையே?“

“இந்த சமூகத்தை குறித்த கவலை உங்களுக்கு அதிகமாய் இருக்கிறது”

“என்ன சொல்லவருகிறீர்கள், ரவியை போன்று ஏதோ சொல்லப்போகிறீர்களா என்ன?“

“ அப்படி எதுவுமில்லை உங்களைப்போன்றோரும், சமூகத்திற்கு தேவைதானே, சற்று ஏறக்குறைய நீங்கள், நான், கௌதமன், ஜீவா நால்வரும் ஒரே சிந்தனையாய் இருப்பதாய் எனக்குத்தோன்றுகிறது”

“நானும் ரவியை குறித்து அப்படிதான் எண்ணினேன், ஆனால் என் கணிப்பு தவறாகிவிட்டதே”

“சிலர் அப்படி தான் இருக்கச்செய்வார்கள், அதற்கா வருந்தி என்ன செய்வது,

பேச்சினூடே இருவரும் முதியவளிடம் வந்திருந்தார்கள்.

முதியவளின் முகத்தில் ஒரு பதட்டம், குழந்தையை பார்த்ததும் அவளுடைய மகிழ்ச்சி, அந்த குழந்தையாகவே அவள் மாறிவிட்டதைப்பறைச்சாற்றிது.

விக்னேஷ் அவளிடம் குழந்தையை நீட்டினான், “அய்யோ, வேண்டாம் பா,என்று குழந்தையை பெற மறுத்தாள் முதியவள் நல்லா இருக்கான் இல்ல, இங்க அப்பனும் இப்படிதான் இருந்தான், கண்களில் கண்ணீர் கசிந்தது. சுருக்கு பையை திறந்து, அதில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை எடுத்து அந்த குழந்தையின் கையில் வைத்தாள்,

இவன பார்க்கதான் உயிர கையில பிடிச்சுக்கிட்டு இருந்தேன், ரொம்ப நன்றி புள்ள, என்று யாழினியின் முகத்தை வழிப்பதுபோல் பாவனை செய்து நெட்டி முறித்தாள்.

அந்த கணம் என்னுள் ஒரு ஆழமான மகிழ்ச்சி உள்ளத்தில் கரைபுரண்டது.


நான் முதியவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன், எதோ இனம் புரியா மகிழ்ச்சி என்னுள். எண்ணங்களிலும் பார்க்கும் கோணங்களிலும் தான் எத்தனை வேறுபாடு. ஒருவருக்கு ஒருவர் ஒரு நிகழ்வை பார்க்கும் கோணங்கள் வேறுபடுகிறது. முதியவளுக்கு பேரனை பார்ப்பது தான் மாபெரும் தவமாய் இருந்திருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு சாதாரணம், மகனின் குழந்தையை பார்ப்பதால் என்ன வந்துவிடப்போகிறது என்றதொரு அலட்சியம்.

“வந்த வேளை முடிந்துவிட்டதல்லாவா பிறகென்ன
புறப்படலாமே” என்றான் ரவி

ம் போகலாம் என்றேன்.

கௌதமன் வந்து என் கையில் அவன் கையை பிணைத்துக்கொண்டான், நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுவேன் யாழினி”

“அவள் இப்பொழுதே மிஸ் தான் நீ வேறு ஏன் மிஸ் பண்ணுகிறாய் என்று நகைத்தான் விக்னேஷ்.

ஜீவாவின் தோளில் குழந்தை லேசாய் சிணுகினாள், ஜீவா குழந்தையை தட்டி தூங்க வைக்க முற்பட, நான் அவனிடமிருந்து குழந்தையை வாங்கினேன்.

குழந்தை வாயிலிருந்து ஜொள் வழிந்தது. (ஜொள் என்றவுடன் சைட் அடிக்கும் நினைவு யாருக்கேனும் வந்தாள் அதற்கு பொறுப்பு நான் அலல)

நான் அவள் வாயை முந்தானையால் துடைத்துவிட்டேன். விழித்தவள் அவசரமாய் ஜீவாவை நோக்கி கைகளை நீட்டியபடி தாவினாள். என்னதான் அன்பாய் இருந்தாலும் உரியவர்கள் யார் என்று இயல்பாகவே அறியும் உணர்வு குழந்தைகளுக்கு இருக்கிறதல்லவா? குழந்தைகளுக்கு மட்டுமல்ல கன்றுக்குட்டியிடம் கூட நான் அதைக்கண்டிருக்கிறேன். எத்தனை பசுக்கள் இருந்தாலும் தன் தாயின் மடியை அது தெளிவாய் அறிந்துக்கொள்கிறது.

நாங்கள் அனைவருமே மருத்துவமனைவிட்டு வெளியில் வந்திருந்தோம்.

ஜீவா டீ கடையில் பால் வாங்குங்களேன், குழந்தைக்கு புகட்டிவிடலாம் என்றேன்.

ஜீவா டீ கடைக்கு செல்லவும், அந்த பெண்மணி வந்து என் கைகளை பற்றி தனியே அழைக்கவும் சரியாகதான் இருந்தது. நான் அந்த பெண்மணியுடன் பேசுவது ரவிக்கு பிடிக்கவில்லை போலும் ரவியின் முகம் வேறுபட்டது.

யாழினியோடு சென்ற அந்த பெண்ணின் நடவடிக்கைகள் அவ்வளவாக சரியில்லை என்பதை ரவி அறிந்திருந்தான், அதுவுமில்லாமல், அந்த பெண் இரவுநேரங்களில் பேருந்து நிலையங்களிலேயே தங்கியிருப்பாள். அநேகமாக அவள் கால் கேளாக இருக்க வேண்டும். அவளோடு யாழினிக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது. ஒரு வேளை யாழினியும் அப்படிதானோ என்றொரு ஐயம் ரவியின் மனதில் உதித்தது.

எண்ணங்களுக்கு ஏற்ப செயல்களும் மாறுபடுகிறது. ரவியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப அவனின் முகமும் மாறுபட்டது. அதை யாழினி கவனிக்க தவறவில்லை.

யாழினி கையிலிருந்த தங்க வளையல்களை கழட்டி அந்த பெண்ணிடம் கொடுத்ததை ரவியும் கவனிக்காமல் விட்டானில்லை.

ரவியின் மனதில் யாழினியின் பிம்பம் சற்றே களங்கமுடன் மாற்றப்பட்டது.

நான் அந்த பெண்மணியிடம் பேசிவிட்டு வந்து குழந்தையை பெற்று அவளுக்கு பால் புகட்ட துவங்கினேன்.

ரவிக்கும் கௌதமனுக்கும் கிசுகிசுப்பாய் ஏதோ உள் நாட்டுபோர் நடக்க துவங்கியிருந்தது.

நான் போகிறேன் யாழினி மீண்டும் சந்திப்போம் என்றுவிட்டு பார்வையால் பொதுவாக அனைவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டான்.

கௌதமனின் முகத்தில் சிறு வாட்டம் தென்பட்டது.

“என்னாச்சு“

“ஒன்றுமில்லை யாழ் நானும் புறப்படுகிறேன்“

“அவகிட்ட என்ன பேச்சுவேண்டிகிடக்கு வரப்போகிறாயா? இல்லையா? “ரவி அடிக்குரலில் கத்தினான்

அவள் என்று குறிப்பிட்டது யாழினிக்கு தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. நன்றாகவே பேசி வந்த ஒருவர் தீடீர் என்று இப்படி பேசுவது மனதை சங்கடப்படுத்துவதாகவே இருந்தது. பொதுவாகவே நாம் காண்கின்ற காட்சிகள் அனைத்தும் உண்மையாக இருப்பதில்லை.

காட்சிகளை மட்டுமே கொண்டு நாமும் இப்படிதான் நெருக்கமானவர்களின் மனதை காயப்படுத்துவோம், அந்த வகையில் ரவி ஒன்றும் விதிவிலக்காய் இருக்கவில்லை.

“இப்போ என்னாச்சு”

“ அதை உன்னிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை, நீ நல்லவளாக இருந்தால் இனி கௌதமனிடம் பேசாதே” ரவியின் குரல் அழுத்தமாய் ஆணித்தரமாய் ஒலித்தது. நண்பன் என்கிற வகையில் அவன் தெளியாய் இருந்தது. எனக்கு மகிழ்ச்சியே அளித்தது.

“என்னதான் பிரச்சனை இங்கே“ – ஜீவா குறுக்கிட்டான்

“யாழினி பேசினாளே அந்த பெண் யார் என்று கேளுங்கள், உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு, என்றான் ரவி

எனக்கு கோபம் வந்தது, எதற்காக சொல்ல வேண்டும், நட்பாய் எண்ணியிருந்தால் இப்படி முற்சந்தியில் நிறுத்தி கேள்வி கேட்க தோன்றுமா?

அந்த மருத்துவனை பெங்களுரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருந்தது. ஆங்கிலேய தொண்டு நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்டு, சேவையின் நிமித்தம் செயல்பட்டுவருகிறது.

மருத்துவமனையைவிட்டு ஒரு கிலோமீட்டர் வெளியில் வந்த பிறகே பேருந்து கிடைக்கும். மருத்துவமனையில் இருந்து காலை ஆறு மணிக்கொன்றும், மாலை ஆறுமணிக்கு ஒருமாய் இரு முறை மட்டுமே பேருந்து பயணிகளுக்காக வந்தது.

புளிய மரத்தடியில் ஒரே ஒருஓலை கூரை வேய்ந்த டீக்கடையும், வெறிச்சோடிப்போன பயணியர் நிழற்குடையும் தான் நிகழும் சம்பவத்திற்கு சாட்சிகளாய் இருந்தது. அவைகளுக்கு தெரிந்திருக்கும், யாழினி உத்தமி என்பது, உடன் பழகியவர்களுக்கு தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

“யாராய் இருந்தால் என்ன, பேசினால் அவள் குணம் எனக்கும் வந்துவிடுமா“?

“நீ நியாய தர்மம் பற்றி பேச வேண்டாம், அவள் யார் என்பதை பற்றி மட்டும் சொல்”

“ஒரு பெண் அவ்வளவுதான் எனக்கு தெரியும்”

“யாழினி இப்படி பேசுவதால் நான் கூட உன் நடத்தையை சந்தேகிக்க வேண்டியிருக்கும்“ என்றான் ஜீவா

“ஓ நடத்தையில் சந்தேகமா, உடன் இருந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் யாருடைய கற்பை சூரையாடிவிட்டேன், நடத்தைக்கெட்டவள் என்று சொல்வதற்கு.”

புருவங்கள் இடுங்கி, குரல் கம்மி, பார்வையை மறைத்த கண்ணீர் விழவா வேண்டாமா என்று அனுமதி கேட்டது.

மனித சுபாவம் அப்படிதான் போலும் ஒன்றும் இல்லாத விடங்களை பெரிதுபடுத்திக்கொண்டு, அதற்று காரண காரியங்களை தேடிக்கொண்டு, ஜீவாவும் ரவியுடன் இணைந்ததில் மனம் வருந்தியது.

கௌதமன் மட்டும் நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தான். நீயும் எதாவது சொல்ல வேண்டியதுதானே, என்று அவன் கரம் பற்றி திருப்பினேன்.

“ எது பேசுவதாய் இருந்தாலும் அவனை தொடமால் பேசு என்றான் ரவி, அந்த பெண் மருத்தவமனை நோக்கி நடந்து எப்பொழுது கண்களில் இருந்து காணாமல் போய் இருந்தாள்.

ரவி ப்ளீஸ் வார்த்தைகளால் காயப்படுத்துவதை நிறுத்திக்கொள், பார்க்கிற, பேசுகிற எல்லோருடனும் பகிரமுடியதா ஒரு நிகழ்வு அது, யாரோ தவறு செய்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவீனம். பால் வேற்றுமை இருக்கும்போது அங்கே பாலியலும் இருக்கதான் செய்யும் அது தவிர்க்க முடியாதது. பிறந்த குழந்தையில் இருந்து பறக்கிற பட்சி வரை செக்ஸ் இருக்கும் போது அதை தவறான கண்ணோட்டத்தி்ல் பார்ப்பது தவறு, அதீதமாய் முழுமையாய் நேசிக்கிற ஒருவனை தவிர வேறு யாரிடமும் பெண்கள் தன் உடலை அர்பணித்துவிடுவதில்லை. பெண்கள் ஆண்களிடம் அன்பை தான் எதிர்பார்க்கிறார்கள், ஆண்கள் தான் பெண்களை போக பொருளாய் பார்க்கிறார்கள். பழகிய என்னிடம் பத்தினி தன்மையை சந்தேகிப்பது உன் ஆண் ஆதிக்க புத்தியை தான் பறைச்சாற்றுகிறது”

என்னைப்பற்றி பேசுவதாக இருந்தால், தாராளமாக பேசலாம், அங்கே வேறொரு பெண்ணின் வாழ்வு விமர்சிக்கப்பட ஏதுவான சூழல் உண்டானதால் நான் பத்தினி என்று நிருபித்து, அவர்கள் என்னுடன் நட்பாய் இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று தோன்றிது. திருவண்ணாமலையில் இருந்து பேங்களுர் செல்லும் பேருந்து வர, குழந்தையை ஜீவாவின் கைகளில் திணித்து விட்டு, பேருந்தை நிறுத்தி பேருந்தில் ஏறினேன்.
பேருந்தின் பெருமூச்சினூடே, அம்மா என்று மழலையின் அழுகுரல் இசைத்தது. குழந்தையின் கரம் என்னை நோக்கி நீண்டிருந்ததை, நான் நின்றிருந்த இடத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தேன். இருந்த மணிதுளிகளில் ஒரு குழந்தைக்கு அம்மாவாய் இருந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளித்தது. அவள் பேச முற்பட்டு அம்மா என்று என்னை முதல் முறையாக அழைத்ததும் மகிழ்ச்சியேதான்.

நான் நகர்ந்து ஓட்டுநருக்கு பின்புறம் இருந்த இருக்கையின் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டேன்.

டிக்கெட்............ ஓட்டுநர் டிக்கெட்டை கிழித்து நீட்ட, என்னிடம் பணம் இல்லை என்பதை உணர்ந்தேன்.

என்னம்மா டிக்கெட்க்கு பணமில்லையா, நல்லா டீசன்ட்டா டிரஸ்பண்ணிகிட்டு இப்படியெல்லாம் கூட ஏமாற்ற வருவீங்களா, டிரைவர் வண்டிய நிறுத்துப்பா,

பிரேக்கில் கால் வைத்த ஓட்டுநர் திரும்பி என்னை பார்த்தார்.

ஏய் திட்டுறத நிறுத்துப்பா, நம்ம சரவணாவ ஆஸ்பிட்டலில் சேர்த்துட்டு வறாங்க, சாரி மேடம், ஏய் கிட்டு மேடம் பேக் மேல வச்சிருக்கேன் பாரு எடுத்துக்கொடு.

அப்பொழுது தான் கவனித்தேன், நான் நேற்று பயணித்த அதே பேருந்து அது.

விழிகளில் வழிந்த நீரை மறைக்க ஜன்னல் வழி பார்வையை திருப்பிக்கொண்டேன். கிட்டு கைப்பையை என்னிடம் கொடுத்ததும், நான் அதை வாங்கியதும், பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றதும் அனிச்சை செயலாக அங்கே நிகழ்ந்தது.

நான் பார்வையை பேருந்திற்கு வெளியாக படரவிட்டேன். கொஞ்சம் வயல், கொஞ்சம் கரம்பு, பயிரிடப்பட்ட மணிலாவின் வரப்பு ஒரங்களில் மேய்ந்துக்கொண்டிருந்த சிறு கன்று, கிணறு , அடர்ந்த மரங்கள், கருப்பு நிற சாலைக்கு பார்டர் போல மண்தரை, அதில் பச்சைநிற புற்களுக்கு இடையிடையே, சிறிய பலதரப்பட்ட வண்ணமலர்கள். பேருந்தை தொடர்ந்த மலை முகடுகள், பேருந்திற்கு வழிகாட்டிய காலை பகலவன் தக தகவென்று வெள்ளித்தட்டாக.

காட்சிகள் மனதை சற்று இலகுவாக்கியது, பேருந்தின் ஓட்டத்திற்கு இணங்க என் எண்ண ஓட்டம் போட்டி போட்டது.

அந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்பது நிஜம்தான், அப்படி என்றால் நான், ஒரு பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ சேவகர்,(பணத்திற்காக தட்டச்சர் மனதின் திருப்திக்காக சேவகர்.யாழினிக்குதான் எத்தனை முகங்கள்) எனக்கு இடப்பட்ட பணி எச்ஐவி கிருமியைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். அதே தருணத்தில் எய்ட்ஸ் நோயாளிகளைப்பற்றி, யாரிடமும் பகிர்ந்துகொள்ளகூடாது. அவர்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம்.

பாலியல் தொழிலாளர்களிடம், ஆணுறை அணிந்த பிறகே அறிவுறுத்துவதும், ஆணுறை எப்படி அணிய வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதும் கூட எங்கள் பணிதான். கீ செயினில் சிறிய பெட்டி போல் வடிவமைத்து, அதனுள் ஆணுறையை வைத்து இரகசியமாய் கொண்டு போய் கொடுத்த நாட்களும் உண்டு. அவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, உதவி தேவைப்படகூடியவர்கள்.

கவனக்குறைவின் காரணமாக அவள் வயிற்றிலும் ஒரு உயிர் ஜனித்துவிட்டது. நோய் தொற்று அவளிடம் இருப்பதால், குழந்தை வேண்டாம் என்று அவள் முடிவெடுக்க, கரு கலைப்பு செய்ய சொல்லி நானும் வளையலை கழட்டி கொடுத்தாயிற்று,

சாதாரணமாய் கருக்கலைப்பு, மன்னிக்க முடியாத குற்றம்தான்
ஆனால் இவ்விடத்தில்..............................................................?


கருகலைப்பு மாபெரும் குற்றம்தான் எனினும், பிறக்கும் குழந்தை ஜனித்த சில மாதங்களிலேயே மரணிக்கும் வாய்ப்பு உள்ளதால், வலி தெரியாமல் வாழ்விழப்பது நன்மையே என்று தோன்றினதாலேயே அவளுக்கு உதவிசெய்தேன்.

ஏன் இப்படி சம்பவிக்கிறது?. மனிதர்களின் ஒழுக்க குறைவினாலா? அன்பற்ற இயந்திர வாழ்க்கை முறையினாலா? எந்த காரணமாக இருந்தாலும் ஒரு ஜீவன் இன்று மரணத்தை தழுவப்போகிறது. எனக்கு தெரிந்து ஒன்று, தெரியாமல் எத்தனையோ?

அம்மா நெற்றியை தொட்டுபார்த்தாள், சுடவில்லையே, காய்ச்சல் கூட இல்லையே ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்“

“ஒன்றுமில்லை அம்மா”

“யாழினி உன்னை குறித்து நான் கவலைப்படுவது உனக்கு புரிகிறதா?. எனக்கு பின் உனக்கு ஒரு துணை வேண்டும் என்று தோனவில்லை. சீக்கிரமாக திருமணத்திற்கு சம்மதித்தால் நன்றாக இருக்குமே, என்றடி காஃபியை ஆற்றி என் கையில் கொடுத்தாள்.

நான் முதுகை சுவற்றிற்கு கொடுத்து அமர்ந்த படி விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“திருமணத்திற்கு என்ன அவசரம் அம்மா”

“அம்மா எப்பொழுதும் உன்னுடனேயே இருப்பேன் என்றா எண்ணுகிறாய்”

“மரணம் எல்லோருக்கும் வரும்தான், நீ மரணித்தால் உன் பிரிவு எனக்கு துயர்தரும், அதை வேறொரு துணையால் ஈடுசெய்ய முடியாதே அம்மா”.

“நான் சொல்வதை புரிந்துகொள்ள மாட்டாயா? மரணம் வரும் போது என் செல்ல மகளை நான் தனித்துவிட்டு போகிறேன், என்று என் மனம் பதைக்காதா?”

“திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, திருமணம் செய்த அனைவரும், தங்கள் துணையுடன் மட்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்களா?, இப்பொழுது நான் நன்றாகதானே இருக்கிறேன். உன் நினைவே எனக்கு மாபெரும் துணை”

“ ஒரு வேளை மாப்பிள்ளை உனக்கு பிடிக்கவில்லை பெண்ணே?“

“ நான் இன்னும் நீங்கள் தந்த புகைப்படத்தை பார்க்கவில்லை”.

நான் அம்மாவை பார்த்தேன். அம்மா நல்ல அழகு, நீண்ட கருங்கூந்தல் அவளுக்கு, சிவந்த தேகம், முன்நெற்றியில் வந்து விழும் சிறு கார்குழல்கள், சளைக்காமல் வேலை செய்யும் உழைப்பாளி, எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தை என்றால் அலாதி பிரியம் அவளுக்கு. தெரு முழுவதும் உள்ள குழந்தைகள் மாலை வீட்டில் ஆஜராகிவிட, குழந்தைகளுக்கே உரித்தான கலகலப்பு எப்போதும் நிரந்தரமாகிவிட்டது இங்கே.

அம்மா அருகில் அமர்ந்து தலையை வருடிவிட துவண்ட என் மனச்சோர்வை மறைக்க, அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டேன். சில நேரங்களில், எதையும் பேசாதபோது கூட தாயின் தொடு உணர்வு எத்தனை ஆறுதலாய் அமைந்துவிடுகிறது.

எவ்வளவு முயன்றும் கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க இயலவில்லை.

“ஏன் அழுகிறாய், யாரையாவது நேசிக்கிறாயா?, உனக்கு பிடித்தவரை நீ மணந்துக்கொள்”

அம்மா தொடர்பில்லாமல் ஏதோ காரண காரியங்களை குழப்பிக்கொள்வது வேடிக்கையான ஒன்றாக இருந்தது.

அம்மாவை பதைக்க வைப்பதில் எனக்கு உண்டான தர்ம சங்கட நிலை,

“ நீ பார்த்திருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்கிறேன் அம்மா”

நான் சொன்ன பதில் அவளுக்கு திருப்தி தரவில்லை போலும், எதையோ சிந்தித்தவாறு நகர்ந்து போனாள்.

அம்மாவிற்காக நான் சொன்ன பதில் என் மனதை குத்த தொடங்கியது.

காதலிப்பது ஒருவனை, மணப்பது வேறொருவனையா?, மனதில் ஒருவனையும், மடியில் ஒருவனையும் சுமக்க எத்தனித்துவிட்டாயா? என்று வினா எழுப்பியது மனசாட்சி.

எண்ணங்களின் தொடர்பயணம் மனதை வலிக்கச்செய்தது. ஜீவாவைப்பற்றி அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று எழுந்த எண்ணத்தை மரணிக்கச்செய்தேன். ஜீவாவை திருமணம் செய்துக்கொள் என்று சொல்லிவிட்டால், அதற்கான சூழல் அங்கு இல்லையே............ குழந்தையும் குழந்தைக்கு சொந்தகாரியும் தெளிவற்ற காட்சியாய் வந்து போனார்கள்.

“நடக்காது என்று தெளிவாய் தெரிந்த பின்னும் மனம் அவனையே நாடுவது ஏன்? நானும் சராசரி பெண்தானா?“

“எதாவதொரு செயல் என் பிம்பத்தை மாற்றி போட்டிருக்கிறதா? ரவி ஏன் என் மேல் கோபப்படவேண்டும். வியாதி அவளுக்கென்றால், நான் என்ன செய்வது வியாதியஸ்தர்களோடு பழகும் எல்லோருக்கும் வியாதி வந்து விடுமா? அல்லது அவள் அப்படி ஒரு தொழில் செய்வதாலேயே நானும் தவறானவளா?

“போய் முகத்தை அலப்பிட்டு, அந்த சிவப்பு நிற சேலை உடுத்திட்டு வா“

“எதுக்குமா“

“மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்க“

“என்னம்மா இது, இப்ப என்ன அவசரம்“

“அவசரம் எனக்கில்லடி மாப்பிள்ளைக்கு, ஆறு மாதத்தில வெளிநாட்டுக்கு போறாராம், அதுக்குள்ள திருமணத்தை முடிச்சிடலாம்னு”

“நானும் வெளிநாட்டுக்கு போகனுமா?”

“இல்லடா அவர் வருகிற வரை நீ என்னோடு தான் இருப்பாய்”

“கல்யாணம் செய்து இங்கே விட்டு போக எதற்கும்மா கல்யாணம்”

“உன்னை அவருக்கு அதிகம் பிடித்துவிட்டதாம், உன்னை வேறு யாரேனும் கொத்திக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா? அதனால் தான் இந்த அவசரம்.


என்ன ஆயிற்று அம்மாவிற்கு, அம்மா திருமணத்திற்கு அவசரப்படுத்துவது இயல்பான ஒன்றுதான் என்றபோதும் கூட மனம் இப்பொழுது திருமணத்தை நாடவில்லை, மனம் முழுவதும் மருத்துவமனையில் பார்த் அந்த பெண்ணே நிரம்பியிருந்தாள். தவறான ஆலோசனை தந்துவிட்டோமோ என்று மனம் நெருடியது.

ஒரு முடிவோடு, ”அம்மா கொஞ்சம் வெளியில போய்ட்டு வரேனே” எப்பொழுதும் கோபப்படாத அம்மாவின் முகத்திலுமு் சற்று கோபம் எட்டிப்பார்த்தது.

”இப்ப எந்த சமூகத்துக்கு சேவை பண்ண போற, நீ சேவ பண்ற லட்சணம் தான் பாத்ரூம்ல தெரியுதே, ஜாக்கெட் கிழிஞ்சிருக்கு, நேத்து ஆபிசுக்கும் போகல, ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போன் பண்றாங்க, யாழினி வரலன்னு, லீவ் லெட்டரும் தரல. நேத்து ஆபிஸ் போயிருந்தாலாவது, நைட் ஒர்க்னு ஒத்துக்கலாம். ராத்திரி வீட்டுக்கும் வரல, எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லவுமில்ல, வந்த பிறகு கூட என்ன ஏதுன்னு சொல்லல, இப்படி உம்முன்னு இருந்த என்னடி அர்த்தம். பேசிக்கொண்டே அருகில் வந்து முகத்தை நிமிர்த்தியவள், ஏண்டி ஜாக்கெட் கிழிஞ்சது, தப்பு தண்டா எதுவும் நடக்கலியே?.

அம்மாவின் உதடுகள் கோணி அழுகைக்கு தயாராகியது. முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு சமையலறை நோக்கி நடந்தாள்.

தப்பு தண்டா…….. விக்கித்து போனது மனம், அம்மா என்ன நினைக்கிறாள், நான் தவறிவிட்டேன் என்றா, இல்லை எவரேனும் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்றா, இதை தவிர அவளது எண்ணம் எதுவாய் இருக்கக்கூடும்

பாவம் அவள், என்னைப்பற்றி எவ்வளவு வருத்தப்படுகிறாள், அவள் தாய்மையை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டேனே….

செல்போன் ரீங்கியது.

செல்போனை கையில் எடுத்து ஆன் செய்தபடி மாடிக்கு வந்தேன்.

மொட்டை மாடியில் காற்று சில்லென்று முகத்தில் உரசியது. கருமையான வானத்தில் நிலவு புது மலராய் காட்சி தந்தது. நிலவிற்கு மேல் பக்கதில் ஒரு விண்மீனும் கீழ் ஒரு விண்மீனும் மணப்பெண் தோழிகளாய் காட்சியளித்தது.

சுற்றிலும் இருள் கவிழ்ந்திருக்க சற்று தூரத்தில் நகரத்தின் பக்கவாட்டு தோற்றத்தில் வட்ட வட்டமாய் மின்சார விளக்குகளின் ஒளி மஞ்சள் பொட்டுகளாய், அலங்கரிக்கப்பட்ட அணிகலனில் பதிக்கப்பட்ட கற்களாய் காட்சியளித்தது.

மாடியில் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த சுவற்றில் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த ரோஜா செடிகள் காற்றில் அசைந்தது. அது என்னை கை நீட்டி அழைப்பதை போல் தோன்றியது. முகத்தை செடிகளுக்குள் புதைத்துக்கொள்ளலாம் என்றொரு உணர்வு, அப்பொழுதாவது மனதின் வெம்மை தனிந்துவிடுமா என்ன?

”ஹலோ”

”யாழினி நான் செல்வா பேசறேன்”

”சொல்லுங்கண்ணா”

”வேலை எதாவது இருக்காம்மா, தொந்தரவு செய்யறேனா?”
”இல்லண்ணா சொல்லுங்க”

” ஒரு சின்ன உதவி யாழினி, சென்னையில இருந்து பாடும் பறவைகள் ட்ரூப் கலை நிகழ்ச்சி பண்றதுக்காக வந்திருக்காங்க, ”

”எந்த ஊர்லண்ணா”

”பாச்சல் லமா, அதுல ஒரு பொண்ணும் வந்திருக்கு, இன்னைக்கு நைட் மட்டும் உன் கூட தங்க வச்சுக்கறயா?”

”சரிண்ணா, இப்ப எங்க இருக்காங்க”

”பாச்சல்ல நிகழ்ச்சி நடந்துட்டிருக்கு, முடிஞ்சதும் கூட்டிட்டு வரேன்”.

”சரிண்ணா ஒரு சின்ன ஹெல்ப், நம்ம பதுமா இருக்காங்களே..”

” தென்றல் நகர் பதுமாவா”

”ஆமா அவங்கதான், அவங்க பிரகனெண்ட்டா இருக்காங்களாம், கலைச்சுட சொல்லி சொன்னேன். பட் மனசு முழுக்க பாரமா இருக்கு”

”ப்ச் இதுக்கெல்லாமா கவல படுவாங்க, ஏதோ உனக்கு தெரிஞ்ச வழிய நீ சொன்ன, குழந்தைய கலைக்க வேண்டியதில்ல, குழந்தை பிறக்குறதுக்கு முன்னால தாய்க்கு இன்ஜெக்ஷன் மூலமா நெவரோபின் மருந்து தருவாங்க, குழந்தைய சிசரின் மூலமா எடுத்துட்டு, சொட்டு மருந்தா குழந்தைக்கும் நெவரோபின் தருவாங்க, குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருக்காது. இப்பவெல்லாம் மருத்துவம் ரொம்ப வளந்துடுச்சும்மா”

”ஒரு வேளை கலைச்சுட்டிருந்தா”

” நீ எங்க பார்த்த பதுமாவ”

” அத்தியந்தல் ஹாஸ்பிட்டல்ல”

”ஏன் என்னாச்சு உனக்கு, உடம்பு சரியில்லயா?”

”ப்ச், இல்லண்ணா, நான் எப்பவும் போற பஸ்ல டிரைவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு, அவர கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு, நைட் அங்கேயே இருக்கும்படியா ஆயிடுச்சு, காலைல வீட்டு வரும்போதுதான் அவங்கள பார்த்தேன்.

”அப்படியா, கருணாலயா அறக்கட்டளைக்கும் அத்தியந்தல் ஹாஸ்பிட்டலுக்கும் லிங்க் இருக்கு, நிச்சயமா அவசரப்பட்டு கருவை கலைக்கமாட்டாங்க, பதுமாவுக்கு நூறு ஆயுசும்மா, செகண்ட் ரோல உட்கார்ந்திருக்காங்க நான் இப்பவே பேசிடறேன். என்ன அவங்க திரும்ப அதே தொழில் செய்யாம இருக்கனும், அவங்க வருமானத்துக்கு வேற வழி எதாவது செய்யனும்”.

”அய்யோ, எனக்கு இப்போதான் உயிரே வருது, பஸ்ட் போய் பேசுங்கண்ணா ப்ளீஸ், நான் வச்சிடட்டுமா?.”

”வச்சிடு, நான் நிகழ்ச்சி முடிஞ்சபிறகு கால்பண்றேன்”

எனக்குள் ஒரு உற்சாக கீற்று, என்னால் எந்த உயிருக்கும் ஆபத்தில்லை என்பதை அறிந்தவுடன் மனம் லேசானது
செல்போனை துண்டித்தபடி திரும்பினேன், அங்கே
அவன் நின்றிருந்தான்.


நிலவு மேகங்களுக்கு இடையில் சரசமாட சென்றுவிட அந்த பகுதி இருண்டது, அந்த கருமை அவனை யார் என்று அடையாளப்படுத்தாமல், கண்களை சற்று சிரமத்தில் ஆழத்தியது.
அவன் யார் என்று அறியும் ஆவலைவிட கீழே அம்மா என்ன செய்கிறாளோ, மாப்பிள்ளை வீட்டார் யாரோ வருவதாக சொன்னாளே என்ற சிந்தனையே என்னுள் எழுந்தது. மங்கலான நிலவொளியில் அவனை நோக்கியவாறு முதல் படியில் கால் பதித்தேன்.

அவனும் போனில் பேசதான் மேல் வந்திருக்க வேண்டும், ஹலோ என்ற அவன்குரல் ஏற்கனவே பழக்கப்பட்டதை போன்று தோன்றவே சற்று தாமதித்து, பின் வேறு நபர் பேசுவதை ஒட்டுக்கேட்பது தவறு என்று அறிவு உறுத்தவே, வேகமாய் படிகளில் இறங்கி, என் போர்ஷனை நோக்கி நடந்தேன். வராந்தாவில் குண்டு பல்ப், சோகையுடன் வெளிச்சத்தை உமிழ்ந்தது. அறையினுள் நுழையலாம் என்று எத்தனித்த நொடியில், யாரோ மாடிப்படிகளில் ஏறி வரும் ஒலியும் பேச்சுக்குரலும் கேட்கவே, விழிகளை படிகளை நோக்கி திருப்பினேன்.

செல்வா அண்ணாவும், அந்த பெண்ணும் என் கண்களுக்கு தரிசனமானார்கள், அந்த பெண்ணைக்கண்டதும், என் முகம் மலர்ந்தது, உள்ளம் நெகிழ்ந்தது, உடல் முழுவதும் உற்சாக பூச்சு தொற்றிக்கொண்டது.

யாமினி, என்று அழைத்தபடி ஆவலாய் ஓடி அணைத்துக்கொண்டேன். அவள் என்னை அணைக்கவில்லை, எந்த நிலையில் நின்றாளோ, அப்படியே நின்றாள். அவள் ஏன் என்னை அணைக்கவில்லை, அவளுக்கு என்னவாயிற்று, ஒரு வேளை யாமினி இல்லையோ, யாமினியின் முகசாடை ஒத்த வேறு பெண்ணோ, நான் தான் பயித்தியக்காரி போல நடந்துக்கொள்கிறேனோ, சட்டென்று அவளிடமிருந்து விலகினேன். அவள் இப்பொழுது அழுகிறாள் என்று தெரிந்தது, அவள் என்னை அணைத்துக்கொண்டாள், அந்த அணைப்பில் இனம் புரியா உணர்வு உண்டானது, என்ன அது? பத்து வருடகள் உருண்டு ஓடியிருக்கும் நான் அவளை சந்தித்து, அவளை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி அல்லவா தோன்றியது, அவள் அழுகிறாளே, மகிழ்ச்சியின் உச்ச நிலையில் அழுகை வருமோ, அதை தான் ஆனந்த கண்ணீர் என்று கூறுகிறார்களோ?, அழுகையும் ரசிக்கும்படியான ஒரு உணர்வுதானோ?, அவள் கண்ணீரில் அல்லவா அவள் நேசித்ததின் ஆழம் புரிகிறது.

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி” , சீ அசடே இதற்காக கூடவா அழுவாங்க, நாம தான் இப்பொழுது சந்தித்துவிட்டோமே, அதற்காக சந்தோஷப்படுவதைவிட்டு....,
என்றேன். வாய்மொழிந்தாலும் கூட கண்களை கரைத்துக்கொண்டு கண்ணீர் வரவே செய்தது. நம்ம அரவிந்த் இப்ப இங்க இருந்தா நல்லா இருக்குமில்ல என்றாள். எனக்கும் அவன் நினைவு வந்தது. மனம் கிடுகிடு என்று ஓடி பால்யபருவத்தில் ஒட்டி பின் மீண்டது.

“போதும்பா கொஞ்சம் அழறத நிறுத்திட்டு என்ன அனுப்புங்க, கொல வெறி மாதிரி கொல பசி எனக்கு” என்றார் செல்வாண்ணா. அவர் முகத்தில் பசி தெரிந்தது. “பசி வந்தாச்சு, அப்ப சாப்பிட்டுட்டே போகலாம் வாங்கண்ணா, என்று அவர் கரம்பற்றி அழைத்தேன்.
அது சரி என்னாலாவது கொஞ்சம் இடைவெளிவிட்டீங்களே, உங்க ரெண்டு பேரோட ஹஸ்பெண்ட் பார்த்திருந்தா, அவர்களின் மூச்சு நின்னு போய் இருக்கும், நமக்கு கிடைக்காத நெருக்கம்......அவர் ஏதோ சொல்ல போக, தட தட சப்தத்தோடு மேலிருந்து அவன் இறங்கி, எங்கள் முன்பாக வந்து நின்று ஸ்டைலாக கையசைத்து ஹாய் என்று பொதுவாக கூறினான்.

இவன்..........இவனைத்தெரியும் என்றுது மனது.....கடந்த காலத்தில் தேடி விடைதேட முனைந்தது. பால்ய முகங்கள் எதுவும் ஒத்து போகாமல் சற்றே நான் திணற, ஏய் அரவிந்த் என்று ஓடி போய் அவனோடு ஒட்டிக்கொண்டாள் யாமினி, எனக்குள் ஒரு ஆச்சர்ய குறி மின்னலாய் தோன்றி மறைந்தது. என்னை அணைப்பதற்கு கால தாமத்தை அனுபவித்த ஒருத்தியாள் எப்படி அவனோடு பிணைந்து அன்பை வெளிப்படுத்த முடிகிறது.

இந்த எதிர்பாராத சூழலின் மாற்றத்தை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும் போதெ, அம்மா வெளியில் வந்தாள். அம்மாவின் முகம் வெளிறி ஒரு அருவெறுப்பு உணர்வை காண்பித்தது. அம்மாவின் முகத்தை பார்த்த நான், ஓ இவன் தான் என்னை பார்க்க வந்த மாப்பிள்ளையா என்று எண்ணமிட்டேன், எது எப்படியோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. யாமினி காதலிக்கும் ஒருவனை தனக்கு திருமணம் செய்விக்க அம்மாவின் மனம் இடம் தாராது என்று எனக்குள் மகிழ்ந்துக்கொண்டேன். விதி வேறு விதமாய் விளையாடப்போகிறது என்பதை அப்பொழுது நான் உணராதிருந்தேன்.

அரவிந்தனே யாமினியிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். சற்று முன் தான் ஒரு அழகான பெண்ணை அணைத்துக்கொண்டிருந்தோம், அதை மூன்று பேர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் என்ற உணர்வு அவனிடத்தில் இல்லை. அந்த புன்னகை மாறாமல், ஏய் சித்திரகொளவி எப்படி இருக்க என்ற கேள்வியில் அன்பு வழிந்தது.

“ம் நல்லாதான் இருக்கேன், வாங்களேன் உள்ள போலாம், என்று அழைத்தேன். அம்மாவின் முகத்தில் லேசான குழப்பம் தென்பட்டு மறைய, வழிவிட்டு உள்ளே போனாள், உள்ளே யாரும் இருக்கவில்லை, அப்படி என்றால் அரவிந்தன் மட்டும் தானா வந்திருக்கிறான், என்று எண்ணியபடி பாயை எடுத்து தரையில் விரித்தேன்.

சிறுவயது முதற்கொண்டு நான் யாமினி அரவிந்தன் மூவருமே நல்ல நண்பர்கள் தான், பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தோம், அரவிந்தனின் அப்பா ஜெயமணியும், அம்மாவும் ஒன்றாக பணியாற்றியதால், எங்கள் நட்பிற்கு எந்த தடங்கலும் இல்லாதிருந்தது. யாமினியின் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட, அவளின் அம்மா வேறொருவரை மணந்துக்கொண்டாள், யாமினி அவள் வீட்டில் இருந்ததைவிட அரவிந்தன் வீ்ட்டிலும் என்னுடைய வீட்டிலும் இருந்ததே அதிகம். அம்மாவிற்கு யாமினியை அடையாளம் தெரியவில்லை என்பது எனக்கு புரிந்தது. அம்மாவிற்கு யாமினியை மிகவும் பிடித்திருந்தது, கணக்குப்படத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி அம்மாவிடம் தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டாள், இணைபிரியா தோழிகளான எங்களிருவரின் பெயரில் ஏற்பட்ட ஒரு எழுத்து மாற்றத்தினாலே செய்து யார், யாமினியா யாழினியா என்ற குழப்பத்தை அனுபவித்தார்கள் ஆசிரியர்கள், பெருபாலும் நான் செய்த குறும்பிற்கெல்லாம் யாமினி அடிவாங்கி என்னை காட்டிக்கொடுக்காமல் காபாற்றியிருக்கிறாள். ழி மி வேறுபாட்டால் கணவர்களும் மாறுபட போகிறார்கள் என்று போகிற போக்கில் யாரோ சொல்லிவிட்டுபோக இப்பொழுது அதுவே நிஜமானதில் ஆச்சர்யமடைந்தேன்.

அவர்கள் இருவரும் மௌனமாய் இருந்தார்கள், அவர்களின் கரங்கள் மட்டும் பிணைந்திருந்தது. முகத்தில் தெரிந்த விசாலமான அமைதி என்னை ஆழ்ந்த சிந்தனைக்குள் தள்ள முற்பட அம்மாவின் யாழினி என்ற அழைப்பிற்கு யாமினி அம்மா என்று குரல் கொடுத்தபடி எழுந்தாள், அது பால்ய வயதை மீண்டும் கொண்டு வர, இப்பொழுது என்ன செய்யப்போகிறாள் அம்மா, நானும் அவளின் பின்னே விரைந்தேன், அம்மாவிடம் வெறுப்பின் சலனம், எங்கே யாமினியை திட்டிவிடுவாளோ என்ற அச்சத்தை என்னிடம் உண்டு பண்ணியிருந்தது.
தொடர்ச்சியாக பக்கங்களைப் புரட்டிப் படியுங்கள் ... :ros:

:thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:21 pm

தமிழ் செல்வி கதை நன்றாக இருக்கு ஏன் வேறு தளங்களில் உங்களை பார்க்க முடியவில்லை/
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Tue Mar 13, 2012 10:46 am

அறிமுகப்பதிவா, இதோ உடனே போட்டுடறேன் ஆதித்தன், அதிக அதிக அதிக அதிக வேலை முத்துலட்சுமி அம்மா, அதனால் தான் எல்லாவற்றையும் மிஸ் பண்ணிவிடுகிறேன். கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் படுகைக்கு வந்து உங்கள் படைப்புகளை படித்துவிட்டு திரும்பினால் கொஞ்சம் திருப்தி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Tue Mar 13, 2012 6:33 pm

thamilselvi wrote:அறிமுகப்பதிவா,
ஆமாம், படுகை உறவுப் பாலத்தில் தங்களது அறிமுகத்தையும் பதிவிட்டால் மகிழ்வேன்.

பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=4
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by muthulakshmi123 » Tue Mar 13, 2012 8:05 pm

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பதிவு கொடுங்கள் நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் நாங்கள் பார்த்து மகிழ்வோம்..
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by thamilselvi » Sat Mar 17, 2012 10:05 pm

“யாழினி வரல, நீ வந்து நிக்குற”, என்றாள் அம்மா. “யாழினி அங்க பேசிக்கிட்டு இருக்காம்மா, என்னை தான் கூப்பிட்டீங்கன்னு நினைச்சு நான் வந்துட்டேன், யாமினி பேச்சை முடிக்கவில்லை, சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த அம்மா யாமினியின் முகத்தைப்பற்றி தன் புறமாய் திருப்பினாள்.

” அம்மாடி நீ யாமினி தான, இவ்வளவு நாளா எங்கடிம்மா இருந்த”, அம்மாவின் முகத்தில் தெரிந்த வெறுப்பு விலகியது. அம்மா பால்ய வயது யாழினி, யாமினி, அரவிந்தன் மூவரையும் அறிந்திருந்தாள்.

இவர்கள் மூவரும் ஒன்றாய் இருந்த போதிலும் கூட அரவிந்தனின் அண்ணா கரண் மட்டும் யாழினியோடு சண்டைப்போட்டுக்கொண்டே இருந்தான். சற்று முன்பு வை தன் பெண்ணை பெண் பார்க்க வந்தவனை அணைத்துக்கொண்டு நின்ற பெண்ணின் மீது இருந்த அருவெறுப்பு எங்கோ காணாமல் போய் இருந்தது.

யாமினி பெற்றோர் இல்லாதவளாகையால் ஜானகியம்மாவிற்கு யாமினி மீது தனி பிரியம் இருந்தது. யாமினி அம்மா என்று விம்மியபடி அம்மாவின் அணைப்பிற்குள் சரண்புகுந்தாள்.

அங்கு வந்து தாய் மகளின் பாசக்காட்சியினைக் கண்ட எனக்கு தமிழ்ராஜாவின் திரைதுறைக்கு சமர்ப்பிக்கலாம் என்று தோன்றிது. அம்மாவின் முகம் மீண்டும் அன்பு மயமானதில் யாழினியாகிய எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அரவிந்தன்தான் என்னை பெண் பார்க்க வருகிறான் என்பதை ஏன் அம்மா என்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டாள். போட்டோ பார்த்துவிட்டு சொல்லும்படி அல்லவா சொன்னாள்.

என் சிந்தனை ஓட்டம் இப்படி இருக்க, போதும் உங்கள் அழுகாச்சி பாசம், அங்க பசிக்குதுன்னு உட்கார்ந்திருக்காங்க, போய் சாப்பாட்ட போடுங்க என்றேன்.

தாயன்பு கிடைக்காத ஒருத்திக்கு, அந்த அன்பின் ஸ்பரிசம் கிடைக்கும் போது, அதை அனுபவித்து மகிழாமல், அழுவதைகண்டு வியந்தேன். வருகிற கண்ணீரில் கூட உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு ஏற்றால் போல் வகைப்பிரிக்கலாம் போலும்.

அழுத கண்களை துடைத்தபடி யாமினி பாத்திரத்தோடு பரிமாற சென்றாள். அம்மா தன் முந்தனையால் கண்களில் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டாள். கண்ணீர் வராத போதும் யாமினிக்காக அவள் உள்ளம் அழுவது அவள் முகத்தின் விகசிப்பில் தெரிந்தது.

உருளை கிழங்காம்மா என்று பாத்திரத்தில் கை வைத்து எடுக்கப்போனேன், ”இது என்னடி கெட்டப்பழக்கம் கையை கழுவாம, போ போய் கையை கழுவுடி முதல்ல….”என்று அதட்டினாள் அம்மா.

சிறு குழந்தையை அதட்டுவது போல் என்னை அதட்டியதில் தாய்மையை கண்ட எனக்கு முகத்தில் மென்புன்னகை அரும்ப, “நிமிர்ந்த அம்மா என் முகத்தில் என்னடி இருக்கு” என்றாள்.

“யாழினி” இது செல்வா அண்ணாவின் அழைப்பு குரல்.

“கூப்டிங்களா அண்ணா” என்று சமையலறையில் இருந்து வெளியேறி நடு கூடத்திற்கு வந்தேன். அங்கு பேனாசோனிக் கம்பெனி தொலைக்காட்சி பெட்டியில் சன் தொலைக்காட்சியில் தங்கம் நீ என்று பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

பாடலுக்கு ஏற்ப வாயை அசைத்து என்னை பார்த்து கை நீட்டினான் அரவிந்தன். சிறு வயது முதற்கொண்டு கேலியும் கிண்டலும் அவனோடு ஒட்டிக்கொண்டே வந்துவிட்டது.

ஏய் யாழினி கொஞ்சம் தண்ணி கொடேன் என்றான் அரவிந்தன்.

ஏய் யாழினியா, திரும்பி முறைத்தேன், என்னது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, கால் மீ மேடம் நீ இப்படி கூப்பிடறது எனக்கு பிரிஸ்டேஜ் பிராப்ளம் ஆகுது.

என்னாது உங்க வீட்டு குக்கர்ல பிராப்ளமா, ப்ரீதிக்கு மாறுங்க, ப்ரீத்திக்கு நான் கேரண்டி, ப்ரீத்தியோட அம்மாவுக்கு……….. விளம்பர பட மாடலாய் வசனம் பேசினான்.

அட மடயா இன்னும் நீ அந்த தெத்துபல் ப்ரீத்திய மறக்கலயா? என்று யாமினி வினவ, அவன் சிரித்தான். அவனோடு அவன் கண்களும் சேர்ந்து சிரித்தது.

“என்னடி இது, ஆம்பள பிள்ளைய அடா புடான்னு பேசிக்கிட்டு” என்றபடி அம்மா அங்கு வந்து சேர்ந்தாள்.

“எந்த காலத்துலமா இருக்க இப்பவெல்லாம், ப்ரண்ட ஒருமையில கூப்பிடறது சகஜமாயிடுச்சு, என்றவள் டக்கென்று ஒருமைக்கு மாறி இல்லடி ஜானகி என்று அம்மாவின் கன்னத்தை திருப்பி முத்தமிட்டேன்.

“அடி கழுத என்று அம்மா ஜல்லி கரண்டியால் என்னை அடிக்க வற நான் அவளிடத்தில் இருந்து விலகினேன். அந்த கணம் செல்வா அண்ணாவின் கைப்பை சரிய, அதிலிருந்து அந்த கையேடு கீழே விழுந்தது.

அதை நான் குனிந்து எடுத்த படி “இது என்னண்ணா” என்று வினவினேன்.

“இது எச் ஐ வி கூட்டு மருத்துவத்தப்பபத்திய கையேடு, நீ படிச்சு பார் யாழினி, நீ தான் கவுன்ஸ்லிங்கிற்கு போரயே, எச்ஐவி பாதிக்கப்பட்டவங்களுக்கு எடுத்து சொல்ல வசதியா இருக்கும்”

நான் கையேட்டை பிரித்தேன், “யாழ் சத்தமா படிப்பா, நாங்களும் கேட்கிறோம் என்றான் அரவிந்தன்.

அம்மா அவர்கள் இருவருக்கும் பரிமாறுவதில் கருத்தாய் இருந்தாள். யாமினியையும் அரவிந்தனுடன் அமரச்செய்து உணவு பரிமாறினாள்.

நான் குரல் உயர்த்தி படிக்க துவங்கினேன். அங்கு அமைதி நிலவியது. அந்த அமைதியை கிழித்த படி என் குரல் கணீர் என்று ஒலித்தது.

எச் ஜ வி கூட்டுமருத்துவம் (ANTI RETROVIRAL THERAPY)

எச் ஐ வி உள்ளோரின் உடல் நலத்தை பாதுகாக்க 6 ஆலோசனைகள்.

1. தினமும் காலை மாலை தவறாது குறித்த நேரத்தில் மருந்தினை உட்கொள்ள தவறாதீர்கள்.

2. உங்களது நோயினைப் பற்றி உங்களது குடும்பத்துணையுடன் பகிர்ந்து கொண்டு அவரது உதவியை பெறுவது நல்லது.

3. உடல் நலம் பேணுவதில் மருந்துகள் மட்டுமின்றி மனதிடமும் உறுதியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்களது மன உறுதியை தளரவிடாதீர்கள்.

4. சத்தான உணவு, தூய குடிநீர், சுத்தமான சூழ்நிலை, எளிய உடற்பயிற்சிகள், யோகா, மனஉறுதி இவை உங்களது உற்ற நண்பர்கள்.

5. மது, புகைப்பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் போன்ற தீய பழக்க வழக்கங்கள் உங்களது பகைவர்கள்

6 உங்களது உடல் மன நலம் குறித்த எல்லாவிதமான ஆலோசனைகளையும் இந்த மருத்துவமனையில் நீங்கள் இலவசமாக பெறலாம்.


User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by ஆதித்தன் » Sat Mar 17, 2012 10:39 pm

கதை சூழல் என்னை மிகவும் ரசித்து படிக்க வைத்தது... மிக்க மகிழ்ச்சி.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by Aruntha » Sat Mar 17, 2012 10:50 pm

நன்றாக செல்கிறது கதை. நீங்கள் நட்பு, குடும்பம் என்பவற்றை சொல்லும் விதம் அருமை
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்றென்றும் உன்னோடு

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 1:37 pm

கதை அருமை வாழ்த்துக்கள்..தொடருங்கள் பிற தளங்களிலும் வர முயற்ச்சி செய்யுங்கள்..
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”