மை டியர் சின்ட்ரெல்லா -தொடர் கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

மை டியர் சின்ட்ரெல்லா -தொடர் கதை

Post by ரவிபாரதி » Wed Jun 25, 2014 7:51 pm

:ros: மை டியர் சின்ட்ரெல்லா :ros:

பகுதி - 1

Image

காதலுக்கென்று ஓர் உலகம். காதலை மட்டுமே சுவாசிக்கும் உயிர்கள். சண்டையில்லை; சச்சரவில்லை; துன்பம், வஞ்சம் இப்படி ஏதுமில்லாமல் இன்பம் மட்டுமே நிரம்பிய ஓர் உலகத்தை உருவாக்க முயற்சி செய்கிறேன். இப்படி ஓர் உலகில் நாம் வாழக்கூடாதா என்று இக்கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஏங்கினால் ஒரு படைப்பாளியாக நான் வெற்றிபெறுவேன்.



முதலில் சில விஷயங்களை விளக்கிட விரும்புகிறேன். மற்ற கதைகள் போன்று பெற்றோர்கள், அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகள் பருவம் அடைந்ததும் காதல், காதலால் பெற்றோர்களுடன் மோதல், மோதலால் குடும்பத்தை விட்டு ஓடுதல் இப்படி ஏதும் இல்லாமல் நான் கதையை நகர்த்த போகிறேன்.



என் கற்பனை உலகில் சஞ்சரிக்க வாருங்கள்...
http://www.scenicreflections.com/ithumb ... _8gye8.jpg[/fi]



ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்த ரோஷனின் எண்ணங்கள் பச்சைப் புற்கள் மீதும், திரையெனப் படர்ந்திருக்கும் வெண்பனி மீதும் நிலைத்திருந்தன.



அமைதியான இடம். சில்லென்று வாடைக் காற்று, மலர்களின் மீது தழுவிக்கொண்டு கம்மென்ற வாசத்தோடு வலம் வந்துகொண்டிருந்தது. ஆஹா! என்ன ஓர் இன்பமயமான உலகம். காணும் இடமெல்லாம் இயற்கை அன்னை படர்ந்திருக்கிறாளே! பச்சைப் பசேலென தன் கைககளைப் பரப்பி கண்களுக்கு விருந்து படைக்கிறாளே!



அலை பாயும் மனம் அமைதியாகிறது ரோஷனுக்கு. லேசான பனி அங்கு மெல்ல விழுந்துகொண்டிருக்க, தன் கையில் இருந்த புத்தகத்தைத் திறந்து பார்த்தான் ரோஷன். அதில், "ரோஷன், பத்தாம் வகுப்பு, சின்ட்ரெல்லா பள்ளி" என எழுதப்பட்டிருந்தது.



முதல் முறையாக சின்ட்ரெல்லா பள்ளிக்கு இப்பொழுது தான் செல்லப்போகிறான் ரோஷன். இதற்கு முன் படித்த பள்ளியில் செய்த அட்டகாசத்தால் இப்பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறான். சின்ட்ரெல்லா பள்ளியில் படிப்பதும், சிறையில் கொத்தடிமையாக வேலை செய்வதும் ஒன்று தான் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அதனாலேயே பயத்தோடும் வெறுப்போடும் இவ்விடத்தில் வந்தமர்ந்து மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்துகொண்டிருக்கிறான்.



'யார் தான் படிப்பை கண்டுபிடித்தார்களோ' என்று வெறுப்பாக ஆப்பிள் மரத்தின் மேல் நோக்கினான். கொத்துக் கொத்தாக ஆப்பிள் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. 'நியூட்டன் இந்த மாதிரி அமர்ந்து தான் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று சொல்வார்களே. நாம் என்ன கண்டுபிடிப்போம்' என்று எண்ணி சிரித்தான் ரோஷன். அப்பொழுது அவன் மேல் ஓர் ஆப்பிள் வந்து விழுந்தது. 'நான் நினைத்தது நியூட்டன் காதில் விழுந்துவிட்டதா என்ன?' என்று மரத்தின் மேலே உற்றுநோக்கினான் ரோஷன்.



"அங்கே என்ன பாக்குற?" என்றது ஒரு குரல்.



குரல் வந்த திசையை நோக்கினான் ரோஷன். இதுவரை அவன் அடைந்த கஷ்டங்களுக்கு மருந்து போடுபவனாய் நின்றிருந்தான் ரோஷனின் நண்பன் ராஜ். அவன் கையிலும் புத்தகங்கள். அதில் சின்ட்ரெல்லா பள்ளியின் முத்திரையும் இருந்தது. அதைக் கண்ட ரோஷனுக்கு சந்தோஷப் புன்னகை அரும்பியது.



"டேய் நீ என்ன இங்க இருக்க?" என்றான் ராஜ்.



"இதை நான் கேக்கணும். நீ என்ன படிக்குற பையன் மாதிரி புத்தகம் எடுத்துட்டு வந்திருக்க?"



"புது பள்ளில சேர போறேன்ல. இப்படி எல்லாம் நல்ல பிள்ளை வேஷம் போட்டா தான் கொஞ்ச நாளைக்காவது பொழப்ப ஓட்டமுடியும்"



"சின்ட்ரெல்லா ஸ்கூலா?" என்றான் ரோஷன் ஏளனப் புன்னகையோடு.



"ஆமாடா, ஏன்?" .



"இதுக்கு முன்னாடி அந்த ஸ்கூல பத்தி கேள்விப்பட்டிருக்கியா?" என்றான் ரோஷன் ..



"இல்லடா. ஆனா பெரிய ஸ்கூல்னு சொன்னாங்க"



ரோஷன் அவனை மேலும் கீழுமாக பார்த்தான். ராஜின் முகம் பலிகொடுக்கப்படும் ஆடு புதிய தழையை விரும்பி சாப்பிடுவது போல இருந்தது ரோஷனுக்கு



"என்னடா அப்படி பாக்குற?"



"ரொம்ப பயந்துட்டேன்டா" என்றான் ரோஷன்.



"எதுக்குடா?" என்றான் ராஜ் அதிர்ந்தபடி.



"நம்மள பிரிச்சிருவாங்களோனு தான்" என்று சிரித்தான் ரோஷன்.



"நான் கூட பயந்துட்டேன். எங்க உன்ன வேற ஸ்கூல்ல போட்ருவாங்களோ, நீ படிச்சி முன்னேறி கலெக்டர் ஆயிடுவியோனு. ஆனா நீ மரத்தடில உட்கார்ந்து தியானம் பண்ணினத பாத்த அப்புறம், சத்தியமா நீ உருப்படமாட்டனு முடிவே பண்ணிட்டேன்" என்றான் ராஜ்.



ரோஷன் சற்று திகைத்து பின் சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்.



"சரி, போலாமா?" என்று கேட்டான் ராஜ்.



"தாராளமா"



இருவரும் புற்களின் நடுவே இருந்த பாதையில் நடந்து சென்றனர். ஆங்காங்கே சில மான்களையும் பறந்து செல்லும் பறவைகளையும் கண்டனர். ராஜின் பார்வை சுற்றுமுற்றும் நோக்கின. எங்கு பார்த்தாலும் மரங்களே பெருமளவு நிறைந்திருந்தன. சிறிது தூரம் நடந்த அவர்களின் கண்ணில் "சின்ட்ரெல்லா" என்ற பள்ளியின் வாசகம் தென்பட்டது.



நூறு ஏக்கரில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் பள்ளியை இமைக்காமல் பார்த்து நின்றனர் இருவரும். முகப்பில் பெரிய இரும்பு கேட் விசாலமாக திறந்திருக்க, அதனுள் பள்ளி மாணவர்கள் ஜெர்க்கின் அணிந்தபடி சென்றுகொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் செல்வதை கண்ட ராஜிற்கு அடிவயிறு கலங்கியது.



"என்னடா, ப்ரோக்ராம் பண்ண ரோபோ போல போறானுங்க?" என்றான் ரோஷனிடம்.



"இன்னும் நிறைய இருக்கு. வா உள்ள போலாம்" என்று ராஜை உள்ளே அழைத்துச் சென்றான் ரோஷன்.



ராஜின் கண்கள் மாணவர்கள் மீதே நிலைத்திருந்தன. அவ்வப்போது மாணவிகள் மீதும் நிலைத்து இதழில் புன்முறுவல் பூத்தன. "பொண்ணுங்களா இதுங்க? தேவதைங்க!" என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்து அப்பெண்களை நோக்கிச் சென்றான்.



அவன் செல்வதைக் கண்டு திகைத்த ரோஷன், "டேய் டேய்" என்று அவனுக்கு எச்சரிக்கை விடுக்க, அதைக் கண்டுகொள்ளாமல் பெண்களை நோக்கிச் சென்ற ராஜை தடுத்து நிறுத்தியது, ஓர் ஆஜானுபாகுவான உருவம். இதற்கு முன் அப்படி ஓர் உருவத்தைக் கண்டிராத ராஜ், திகைத்து சிலையென நின்றான். அவன் சட்டைக் காலரைப் பிடித்துத் தர தரவென இழுத்துச் சென்றது அவ்வுருவம். "ஹலோ! விடுங்க! விடுங்க! எதுக்கு இப்படி பண்றீங்க?" என்று கத்தினான் ராஜ்.



அவன் அலறலைக் கண்ட சிலர் சிரித்தனர். ரோஷனுக்கும் சிரிப்பு வந்தது; இருந்தும் கட்டுப்படுத்திக்கொண்டான். ரோஷனின் அருகில் வந்து ராஜை விட்டு, "பசங்க எல்லாம் அந்தப் பக்கம் போகணும்" என்று கட்டை குரலில் எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது அவ்வுருவம்.



சட்டைக் காலரை சரி செய்தபடி, "யார்ரா இவன்? ஹேங்கர்ல மாட்டுன சட்டைய அலேக்கா தூக்கிட்டு வருவாங்களே, அப்படி தூக்கிட்டு வரான். எனக்கென்னவோ இது எல்லாம் சரியா படல" என்று முணுமுணுத்தான் ராஜ்.



"நான் தான் போகாதேனு சொன்னேன்ல" என்று திட்டினான் ரோஷன்.



"இப்போ கத்துடா. என்னை தூக்குசட்டி போல தூக்கிட்டு வந்தானே. அப்போ கத்தாத. வா" என்று கூறி ராஜ் முன்னே நடக்க ரோஷன் பின்னே சென்றான்.



இருவரும் மாடிப்படி ஏறினார்கள். முதல் மாடி..இரண்டாம் மாடி..மூன்றாம் மாடி என சென்றுகொண்டே இருந்தனர்.



"டேய் எனக்கு ஒரு டவுட்" என்றான் ராஜ்.



"என்ன?"



"நாம எங்கடா போயிட்டு இருக்கோம்?" என்று கேட்டான் ராஜ் ..



"நாம புதுசா வந்திருக்கோம்ல. அதான் செமினார் ஹால்ல நமக்காக விழா எடுத்துட்டு இருக்காங்க. அங்க போறோம்"



"அப்படியா? பரவாயில்லையே. ராஜ் பத்தி இப்போவே தெரிஞ்சி வச்சிருக்காங்க"



"ஆமா ஆமா போ" என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு கடைசி மாடியில் இருக்கும் செமினார் ஹாலுக்கு சென்றான் ரோஷன்.



அவர்கள் செமினார் ஹாலை நெருங்க நெருங்க மாணவர்களின் சலசலப்பு மிகுதியாய் கேட்டது. இருவரும் ஹாலுக்குள் சென்றனர். அந்த ஹாலைக் கண்ட இருவரும் ஒரு சேர வியப்பெய்தினார்கள். ஆயிரக்கணக்கான இருக்கைகள் போடப்பட்டு அதில் பெரும்பாலும் மாணவர்கள் நிரம்பி இருந்தனர். மேடையில் இருபது நாற்காலிகள் போடபட்டிருந்தன. மேடையின் ஓரம் மைக்கும், சுவரின் ஓரத்தில் பெரிய பேனர் ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டு, அதில் "சின்ட்ரெல்லா பள்ளிக்கு வருக! வருக!" என எழுதிவைக்கப்பட்டிருந்தது.



"இது என்ன ஹாலா? இல்ல மைதானமா? ஊரே தங்கலாம் போலிருக்கு" என்றான் ராஜ்.



அவன் பேசுவதைக் கண்டுகொள்ளாத ரோஷன், "வா, அங்க உட்காரலாம்" என்று இருக்கைகளைச் சுட்டிக் காட்டினான்.



"டேய்! சும்மா போய் செவனேன்னு உட்காரதுல என்னடா இருக்கபோகுது? இப்போ பாரு" என்று கூறி, சிறிது தூரம் நடந்து இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து அவர்கள் அருகில் சென்று நின்றான்.



'என்ன செய்யப்போகிறான்?' என்று ரோஷன் ராஜை நோக்கிக்கொண்டிருந்தான்.



ராஜ் சற்று முன்னே குனிந்து, "உங்களை அவர் கூப்பிடுராரு" என்று அந்த இருவரிடமும் கூறினான்.



"யாரு?" என்றான் ஒருவன்.



"அதோ! அவர் தான்" என்றான் ராஜ்.



"வா, போய் பாக்கலாம்" என்று இருவரும் எழுந்து சென்றனர்.



"வாடா, உட்காரலாம்" என்று ரோஷனை அழைத்து தன் பக்கத்துக்கு இருக்கையில் அமர்த்திக்கொண்டான் ராஜ்.



"ஏண்டா இப்படி பண்ற?"



"எல்லாம் ஒரு டைம்பாஸ் தாண்டா"



"உன்ன திருத்தவே முடியாது" என்று தன்னையே நொந்துகொண்டான் ரோஷன்.



அப்பொழுது ராஜ் எழுப்பி அனுப்பிய மாணவர்கள் அவர்கள் முன் நின்றார்கள்.



"அவங்க கூப்பிடலன்னு சொல்றாங்க" என்றான் ஒருவன்.



"கூப்பிடலையா. சரி, அப்படி உட்காரு" என்று அசட்டையாகக் கூறினான் ராஜ்.



மாணவர்கள் இருவரும் ராஜை முறைத்தவாறே வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டனர்.



அப்பொழுது திடீரென சலசலப்பு அடங்கி எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர்.



"எதுக்கு எல்லாரும் நிக்குறானுங்க?" என்று கூறியபடி ராஜும் ரோஷனும் எழுந்து நின்றனர்.



ஒரு பெண்மணி அதிகாரப் பார்வையை எல்லோர் மீதும் வீசி முன்னே நடந்துவர, அவர் பின்னே பத்து பேர் நடந்து வந்தனர்.



"யார்ரா இது? ஜான்சி ராணி போல நடந்து போறது?" என்று கேட்டான் ராஜ்.



"இவங்க தான் பிரின்சிபால் போல" என்று சொன்னான் ரோஷன்.



மேடையில் ஏறிய அப்பெண்மணி, எல்லோரையும் அமரும்படி சமிக்ஞை கொடுத்து தானும் அமர்ந்துகொண்டார். அவருடன் வந்தவர்களும் மேடை நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.

சலசலப்பு அடங்கி பேரமைதி அந்த கூடத்தில் நிலைத்தது.



அப்பொழுது மேடை மீது ஒரு மாணவி ஏறினாள். ரோஷனின் கண்கள் அகல விரிந்தன. மல்லிகை இதழால் வார்த்தெடுத்த ஏந்திழல் போல அவள் இருந்தாள். அவளின் குழல்கள் காற்றோடு கீதமிசைதன. அவள் கண்கள் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாய் இருந்தன. இதழ்கள் ரோஜா மலரை நினைவுபடுத்தின. இதுவரை வெறுமனே உட்கார்ந்திருந்த ரோஷன், நிமிர்ந்து உட்கார்ந்து அவள் அழகை பருகத் துவங்கினான்.



"மதிப்பிற்குரிய சின்ட்ரெல்லா பள்ளியின் தலைவர் மிஸ் ராணி அவர்களே!" என்று மைக் முன்னால் தன் குரலை ஒலித்தாள் அவள்.



"அந்த கிழவிக்கு இன்னுமா கல்யாணம் ஆகல?" என்று ரோஷனிடம் கேட்டான் ராஜ்.



"சும்மா இரு" என்று அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து, ஏந்திழல் பேசுவதை கவனித்தான் ரோஷன்.



"கல்விக்காக தன் வாழ்கையை அர்ப்பணித்த அவர்களின் கடுமுயற்சியால் விளைந்த இப்பள்ளி..." என்று அவள் பேசப் பேச ரோஷனின் காதுகளில் அமுதமாய் வந்து விழுந்தன. அவள் என்ன பேசுகிறாள் என்று கவனிக்கவில்லை. அவன் மனம் முழுதும் சொர்க்கத்தில் சஞ்சரித்திருந்தன.



"இப்பொழுது மிஸ் ராணி அவர்கள் உரையாற்றுவார்கள்" என்று கூறி அவள் இறங்கிச் சென்றாள்.



பள்ளி முதல்வர் ராணி, மைக் முன் வந்து நின்று சிறிது கணம் மாணவர்களை நோக்கினார். பின் கரகரத்த குரலில், "டியர் ஸ்டுடென்ட்ஸ்.." என்று ஆரம்பித்தார்.



கனவுலகில் சஞ்சரித்திருந்த ரோஷன் திடுக்கிட்டு நினைவுலகில் வந்தான். மேடையில் கண்ட தேவதையைக் காணோமே என்று கலங்கி, "இவங்க எப்போடா வந்தாங்க?" என்றான்.



"அவங்க வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சி" என்றான் ராஜ்.



நீண்ட பெருமூச்சை விட்டெறிந்து பள்ளி முதல்வர் ராணி பேசுவதை கவனித்தான் ரோஷன்.



"அன்பு மாணவர்களே! சின்ட்ரெல்லா பள்ளியில் படிப்பு மட்டுமே நீங்கள் கற்கப் போவதில்லை. ஒழுக்கத்தையும் சேர்த்து கற்கப் போகிறீர்கள்.." என்று பேசிக்கொண்டே சென்றார்.



ராஜ் தன் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த மேங்கோ ஜூசை எடுத்து பருக ஆரம்பித்தான்.



அதைக் கண்ட ரோஷன், "என்ன இது?" என்றான்."



"ஜூஸ் டா. அவங்க வேற ஆத்து ஆத்துன்னு ஆத்துறாங்கல. என் சக்தி கொறையுது. அதான் ஜூஸ் குடிச்சி சக்திய ஏத்திக்குறேன்"



"நம் பள்ளியில் புதிய மாணவர்களாக சேந்திருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன. அவற்றை சரியாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு இப்பள்ளியைப் பிடிக்கும். கடமையையோ, பள்ளியின் விதிகளையோ மீறினால் கடுமையான தண்டனையை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று கூறியபடி.தான் வைத்திருந்த துண்டுக் காகிதத்தில் உள்ள பெயர்களைப் படிக்கத் துவங்கினார்.



"ராஜேந்திரன்" என்றார் ராணி.



மாணவர்கள், 'யாரது?' என்று சுற்றுமுற்றும் பார்த்தனர்.



மீண்டும், "ராஜேந்திரன்" என்று மைக்கில் அழைத்தார் ராணி.



"யாருடா அது, ராஜேந்திரன்? பழையகால கல்வெட்டுல பொறிச்சா போல ஒரு பேரு" என்று குளிர்பானத்தைப் பருகியபடி சொன்னான் ராஜ்.



"நீ தாண்டா அது" என்று அவனுக்கு நினைவுபடுத்தினான் ரோஷன்.



"நானா அது?" என்று சுதாரித்து குளிர்பானத்தைக் கீழே வைத்துவிட்டு எழும்ப முற்பட்டான்.



"ஜே.ராஜேந்திரன்" என்று மைக்கில் பெயரை அழுத்தமாக ஒலித்தார் ராணி.



"ஐயோ! கிழவி இனிஷியலோட கூப்பிடுதே" என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்து, ராணியை நோக்கினான் ராஜ். எல்லோரும் ராஜின் முகத்தையே நோக்கினார்கள். என்ன செய்வதென்று புரியாமல், "குட் மார்னிங்" என்று தலை தாழ்த்தினான் ராஜ்.



மாணவர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜை சிறிது நேரம் முறைத்து விட்டு, "ரோஷன்" என்று ஒலித்தார். ரோஷனும் எழுந்து நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.



"இதுக்கு முன்னாடி நீங்க தேசியம் பள்ளியில படிச்சிருக்கீங்க இல்லையா?" என்றார் ராணி.



"ஆமாம் மேடம்" என்றான் ரோஷன்.



"நான் அந்த தலைமை ஆசிரியர் கிட்ட உங்களை பத்தி விசாரிச்சதுல, ஒழுக்கத்துக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லன்னு புரிஞ்சிகிட்டேன். படிப்பும் உங்களுக்கு சுத்தமா வராதாம். நீங்க பாஸ் பண்ணதே நீங்க பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்னு சொன்னாங்க"



"இது எல்லாம் நமக்கே தெரியுமே" என்றான் ராஜ்.



"நீங்க நினைக்குற போல பள்ளி இது இல்ல. உங்களுக்கு தான் பள்ளி விதிமுறைகள் அடங்கிய பள்ளிக் கையேட்டை முதல்ல தரணும்" என்று கூறி "ரோஜா" என்றார் ராணி.



மேடையில் பேசிய மாணவி கையில் சில பள்ளிக் கையேடுகளோடு அவர்கள் அருகில் வந்து இரண்டு கையேடுகளை எடுத்து அவர்களிடம் நீட்டினாள். அவள் அழகை ரசித்தபடி அவள் பெயரை ஒரு முறை தனக்குள்ளாக உச்சரித்தான் ரோஷன். கையேடுகளைக் கொடுத்தவுடன் ரோஜா அங்கிருந்து தன் இருக்கைக்குச் சென்றாள்.



"இதில் உள்ள பள்ளி விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கவேண்டும்" என்று அழுத்தமாகக் கூறி இருவரையும் அமரச் சொன்னார் ராணி.



"கிழவி பின்லேடி கணக்கா உளவு பாத்திருக்கு" என்று முணுமுணுத்தான் ராஜ்.



ராணி மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, எல்லோரையும் வகுப்புக்குச் செல்லப் பணித்து அங்கிருந்து சென்றார்.ரோஜா மற்ற மாணவிகளுடன் அரட்டை அடித்தபடி வெளியே சென்றாள். அவள் பின்னே ராஜும் ரோஷனும் சென்றனர்.



பள்ளி விதிமுறைகள் சிலவற்றைப் படித்தபடி சென்ற ராஜுவிற்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது.

Image

தொடரும்.... :arrow: :arrow: :arrow:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: மை டியர் சின்ட்ரெல்லா -தொடர் கதை

Post by cm nair » Thu Jun 26, 2014 12:51 am

நல்ல வர்ணனைகள்...தொடரட்டும்....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”