Page 1 of 1

கார்த்திகை பற்றி தெரிந்து கொண்டது

Posted: Tue Dec 11, 2012 7:48 am
by sk3662
கார்த்திகை பற்றி தெரிந்து கொண்டது நீங்களும் அறிந்து கொள்ளுங்களேன்

சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் ஜோதிப் பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்து மலையாய் குளிர்ந்த நாளே கார்த்திகை பௌர்ணமி தினம். எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பர். இந்நாளில் அன்னாபிஷேகம் செய்வது மிக விசேஷம். இந்நாளில் ஈசனின் பன்னிரு ஜோதிர் லிங்க வடிவங்களை தரிசிப்பது மகத்தான பலன் தரும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டிய கருத்தை வலியுறுத்தி சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி தேவிக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார். இந்நாளில் லிங்காஷ்டகம் சொல்வதும் கேட்பதும் தீராத வினை தீர்த்து நீங்காத செல்வமும் நிலைத்த ஆயுளும் தரும்.

கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியில் (பிருந்தாவன துவாதசி) துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசி தளத்திற்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசி மணிமாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசி பூஜை நடத்துவதும் சிறப்பானதே. இதனால் லட்சுமி தேவி இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள். இந்நாளில் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.