வணக்கம், வாழ்வியல் தந்திரம் என்ற தலைப்பில் புதிய கோணத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வடிவமைப்பதினை சிந்திக்கலாம்.
வித்து - பத்து - சொத்து .
ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்படக்கூடிய சக்தியுண்டு. ஆனால், அது எந்தவிதமான சக்தி என்பது அச்சொல்லினை ஒருவர் எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு தகுந்தவாறு மாறுபடும். ஆகையால், வித்து பத்து சொத்து என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன என என்னால் யூகிக்க முடியவில்லை. அதே நேரத்தில், இது இன்பமான வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாழ்வியல் தந்திரம் என்ற தலைப்பில் உங்களோடு பகிர்கிறேன்.
தந்திரம் என்பதே ஒரு இரகசியம்தான். இதனை எத்தனை ஆழத்தில் புதைத்து வைத்தாலும் தக்க சூழல் ஏற்படும் பொழுது வெளிப்பட்டுவிடும். ஆகையால், உண்மையாக நாடிப் பார்ப்பவர்க்கு மிக எளிதாக புரிந்துவிடும் வகையில் தந்திரங்களை உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன், நீங்கள் பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாடி பார்த்தல்.
நாடி என்றவுடன் உங்கள் நினைவுக்கு, நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற குறள் நினைவுக்கு வரலாம். ஏனெனில் வாழ்வியல் என்றாலே ஆரோக்கியம் முக்கியம் அல்லவா. ஆனால், இங்கு புரிந்து கொள்ள வேண்டியது எப்படி நாடிப் பார்ப்பது என்பதுதான். பஞ்ச பூத அக்குபஞ்சர் மருத்துவ முறையில் நாடி பார்க்க, வலது கையின் மணிக்கட்டின் முன்பக்கம்-வெளிப்புற ஓரம், விரலிருந்து நோக்கையில் மணிக்கட்டு முதல் ரேகையை கணக்கில் கொண்டு, அதிலிருந்து ஒர் சூன் இறக்கத்தில் வலது ஆட்காட்டி விரல் நுனியால் தொட்டு பார்ப்பதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அதில் என்னத்த தொட்டு பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கு ஒர் கேள்விக்குறியாக இருந்திருந்தால், அதிலிருந்தே நாடிப் பார்ப்பதின் சூட்சமத்தினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, பஞ்ச பூத நாடி பார்த்தல் என்பதனை நான் அறிந்தவகையில் சொல்கிறேன். நாடிப் புள்ளியில் மென்மையாக விரல் நுனியால் தொட்டு, உயிர் துடிப்பில் இருக்கும் வேகத்தின் தன்மையை மரத்தன்மையுடன் வேகமாக நறுக் நறுக் என்று குத்துவது அல்லது மண் தன்மையுடன் மெத்து மெத்து என்று தாக்குவது என மரம் அல்லது மண் ஆகிய இரு பூதங்களில் எது செயலில் இருக்கிறது என்பதனை உணர்வால் புரிந்து கொண்டு, அப்படியே விரல் நுனியை கொஞ்சம் அழுத்தி அவ்விடத்தின் கீழ்பகுதியில் உயிர்த்துடிப்பின் ஓட்டம் நீரைப்போல் ஊர்ந்து செல்கிறதா அல்லது காற்றைப்போல் நேராக செல்கிறதா என்று நாடியினை உணர்ந்து பார்க்கும் பொழுதே, நிகழ்வில் இருக்கும் இரண்டு பூதங்களின் ஒருங்கிணைந்த சிகிச்சைப் புள்ளிகளில் எந்த ஒர் புள்ளியில் தொடுதல் கொடுக்க வேண்டும் என்று உணரப்படுகிறதோ, அப்புள்ளில் ஒற்றைப் புள்ளி தொடுசிகிச்சை கொடுக்கப்படும். அதே நேரத்தில், நீங்கள் கூறும் நோய்கள் அல்லது பிரச்சனைகளை கேட்டுக் கொண்டும் இருப்பார் மற்றும் உடலில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றங்களையும் கவனித்து பார்ப்பார். ஆனாலும், நாடிப் பிடித்து பார்க்கையில் உணர்தலில் உயிர் என்ன சொல்கிறதோ, அதனை மையமாகக் கொண்டே ஒற்றைப் புள்ளியினை முடிவு செய்து சிகிச்சை கொடுப்பார்.
வேடிக்கையான உண்மை என்னவென்றால், வாழ்வியல் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் சரி, வாழ்வியல் தந்திரம் என்ற தலைப்பில் வித்து பத்து சொத்து என என்ன சொல்லியிருக்கிறேன் என்று கடைசியில் புரியாமல் இருந்தாலும் சரி, தொடுசிகிச்சை எடுத்துக் கொண்டால், இயற்கை புரியவைக்கும். ஆனால், இங்கு நான் உங்களை சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை. சும்மா இருந்தாலே புரிந்துவிடும் என்பதுதான் எனது கோட்பாடு. இங்கும் மருத்துவ தொடுசிகிச்சை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால், பஞ்சபூத அக்குபஞ்சர் படித்த காரணத்தினால், நாடிப்பார்த்தல் என்றவுடன் நாடி பார்ப்பது எப்படி என வந்ததை சொல்லிவிட்டேன். அதே நேரத்தில், குறள் நாடச் சொல்லும் உண்மை, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வாழ்க்கை பற்றிய அடிப்படையும், மகிழ்ச்சிக்கான மூலக் காரணமும் மகிழ்ச்சி கெடுவதற்கான மூலக்காரணமும் தெரிந்து செயல்பட்டால்தான் முடியும்.
வாழ்வியல் அடிப்படையின் உரிப்பொருள் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல் மற்றும் பிரிதல் என்பதனை ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பவைகளின் இயல்புகளோடு பொறுத்தி எழுதியுள்ளனர். ஆகையால், நிலங்களைப் பற்றிய பார்வையும் நமக்கு வேண்டியுள்ளது.
மக்கள் வாழ்வியல் என்பது படிப்படியான வளர்ச்சியினைக் கொண்ட அனுபவம். இயற்கை உண்மையை புரிந்து கொண்டு, தனக்கான நன்மையை நாடி செய்த அறிவுப்பூர்வமான செயல். அவ்வாறு அறிவியல் என்ற பெயரில், நமக்கு நாமே வளர்த்துக் கொண்ட வாழ்வியல் முறை தற்பொழுது நோயையும் துன்பத்தினையும் கொடுத்து வருத்துவதால், மகிழ்ச்சியான வாழ்வியலை அமைத்துக் கொள்வதற்கான சிந்தனைத் தேடலில் எத்தனையோ தகவல்களை அறிந்து கொண்டேன்.
1990 களில் செல்போன் கிடையாது. இமெயில் கிடையாது. இதனை நீங்கள் கண்கூடாகப் பார்த்த வாழ்வியல் மாற்றம். தற்பொழுது கையில் மொபைல் இல்லாமல் இருப்பதில்லை. இமெயிலுக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மொபைல் வாட்சப், சோசியல் மீடியா, யுடியூப், ப்ளாக்கர் என எத்தனையோ வளர்ச்சியினை கண்கூடாக பார்க்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கும் எனக்கும் கிடைத்துள்ளது. அல்லது எனக்கு அடுத்தக்கட்ட இளையவர்கள் மொபைலோடு இண்டர்நெட்டையும் சேர்த்து படித்து வளர்ந்தாலும், இவை எல்லாம் இப்போதைய வளர்ச்சி என்பது நன்றாகவே தெரியும். அதைப்போல், 2025-ஆம் ஆண்டில் பிறக்கும் பீட்டா குழந்தைகளுக்கு புதியதாக எதுவும் வருவதற்கில்லை, தற்போதைய சித்தாந்தமாகிய எல்லாம் ஆன்லைன்.. உலகமே கைக்குள் அடக்கம் என்பதனை மேன்மைப்படித்தி கொடுப்பதுதான் வேலை என்று மீடியா சொல்கிறது. ஆனால் மற்றொருபக்கம், விரைவான நவீன வாழ்வியல் துன்பத்தினை கொடுத்துவிட்டது, இன்பத்தை நோக்கிய வாழ்க்கையை தேடுகிறேன் என்ற பாதையை என்னைப்போல் பலரும் தேட ஆரம்பித்து, பீட்டா குழந்தைகள் பின்னோக்கிய சிந்தனையில் இன்பமான வாழ்வியலுக்கு சொந்தக்காரர் ஆகக்கூடிய அதிர்ஷ்டக்காரர்கள் என்று நான் சொல்வேன்.
அறிவியல் வளர்ச்சி என்பது இன்றல்ல, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி, அதன் வளர்ச்சியின் காரணமாகத்தான் இன்று நாம் கைக்குள் உலகத்தினை அடக்கி பார்ப்பதிலே மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவம் என்ற பெயரில் நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டு, ஆசைக்காக சம்பாதித்த பெரும்பணத்தினை நோய்க்கே செலவு செய்து துன்பத்தினை அனுபவிப்பவர்கள் ஏராளம். பணம் இல்லாமல் இன்பத்தினை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம். இன்பமான வாழ்வு எது என்று தெரியாமலே, உழைத்து உழைத்து போராடி, ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று ஏங்குவோர் ஏராளம். இப்படியான ஒவ்வொருவர் சூழலுக்கு ஏற்ப வாழ்வியல் மாற்றமாக இருந்தாலும், என்னைப்போன்ற தேடலும் விருப்பமும் கொண்டவர்கள் பத்துபேர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், தொடர்கிறது எனது மகிழ்ச்சியான வாழ்வியலுக்கான தேடலும் முயற்சியும்.
1980-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கான சிந்தனையாக இது இருந்தாலும் இதனை முழுமையாக அனுபவிக்கப்போவது பீட்டா குழந்தைகளும் அதற்கு அடுத்த சந்ததிகளுமே ஆகும். ஆம், நாம் சிந்தித்து செயல்படுத்தி கஷ்டப்பட்டு வாழப்போகின்ற இன்பமான வாழ்வியலை, அவர்கள் இயற்கையாகவே கிடைக்க வாழப்போகிறார்கள் என்பது இன்பமாக வாழலாம் வாருங்கள் என்று அழைத்துவிட்டு வாங்கா சொல்வதுபோல் எதிர்காலத்தியலை எடுத்துச் சொல்லும் எதிர்பார்ப்பு என்று நினைக்க வேண்டாம். ஆனால், உண்மையாக நாம் கடந்து வந்த வாழ்க்கை எல்லாம், ஆசைப்பட்டு பெற்றுக் கொடுத்த நரக வாழ்க்கை என்பது உங்களுக்கே புரிதல் ஏற்படும் வகையில் பலரும் சொல்லிவிட்டனர். ஆகையால், நமது சிந்தனைப்படியே நடக்க ஆரம்பிப்போம்.
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் இன்பமாக இருந்துள்ளது என்ற பார்வையில் இன்றைய குறிஞ்சி நிலத்தினை எட்டிப் பார்த்தால், அய்யோ, இங்கு எப்படிதான் வாழ்கிறார்களோ? என்ற அச்சம் ஏற்படாமல், குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும் , ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கான சிந்தனை தான் வாழ்வியல் தந்திரம்.
உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றினை, தாவரங்கள், மரங்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன , நீந்துபவை மற்றும் பல என எண்ணற்ற உயிரினமாக பிரித்துக் கொள்ளலாம். அவற்றுள் மனித இனம் மட்டுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில், மிக முக்கியமானது பிற உடலை படைத்து-காத்து-அழிக்கும் எண்ணம். திருமூலர் உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே என்று ஒர் பாடலில் வரியாக வைத்திருந்தார். அந்த வரிகளைச் சூழ்ந்த பிற வரிகள் கொண்டு பார்த்தால் எனக்கு ஒன்றும் பெரியதாக தெரிவதில்லை. ஆனால், பிற உயிரை உண்டு வாழும் நாம், அவற்றை காத்துதான், தன்னுயிரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. அதை தவறிய காரணத்தினால்தான், இன்று உணவு என்ற பெயரில் நஞ்சை உண்டு ஆரோக்கியம் கெட்டு வாழ்கிறோம்.
உணவு இல்லாவிட்டால் அழிவு நிச்சயம் என்பது நன்றாகத் தெரிந்து, தனக்கான உணவை படைத்து காப்பது மனித உயிர் மட்டுமே, வேறு எந்த உயிரும் தன் உணவுகளை படைத்து உண்பதில்லை. படைத்தல்-காத்தல்-அழித்தல்-மறைத்தல்-அருளல் என்ற ஐம்பெரும் செயலால் மனித இனம் என்பதனை அழிக்க முடியாத ஆளும் சக்தியாக இப்புவியில் பார்க்க முடிகிறது. ஆனாலும் அழிவு உனக்கும் உண்டு என்று பிற உயிரினங்கள் சொல்லும் அளவிற்கு மனிதன் இயற்கை சூழலுக்கு பெரிதும் பாதிப்பு உண்டாக்குவதனை பார்க்கும் பொழுது, மனித இனம் இரு பிரிவாக இருக்குமோ? ஒன்று அழிய வேண்டியதும், மற்றொன்று வாழத் தகுதியானதுமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இருந்தாலும் அது தேவையில்லை, நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும், ஆரோக்கியமாக வாழ வேண்டும் அதற்கான தேடலை மட்டுமே கவனத்தில் கொண்டு, படித்து, படித்து... போதும் போதும்... இதற்கும் மேல் என்னால் படிக்க முடியாது. படித்தவற்றைக் கொண்டு வாழ்ந்து கொள்கிறேன் என்ற முடிவுக்கு தற்பொழுதுதான் வந்திருக்கிறேன்.
வாழ்வியல் தந்திரம் பற்றிய தகவல்களை எடுத்துச் சொல்லவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் இரகசியமானதை எப்படி நேரடியாக சொல்வது. அதிலும் குறிப்பாக நேரடியாக கேள்விகளே இல்லாத பொழுது எப்படி சாத்தியமாகும். ஆகையால், பின்னோக்கிய பார்வையின் நெடுந்தொலைவை கண்டு அஞ்சாமல், கடப்பதற்கு ஏதுவாக அங்கு இங்கு என்று அரக்கப்பரக்கப் பார்த்து கண்டதை எல்லாம் படித்து மேலும் மேலும் தொலைவை அதிகரிக்க விரும்பாமல், படித்த கொஞ்சத்தைக் கொண்டு தெரிந்தது தொலைவான பாதையே என்றாலும் மெதுவாக நடந்தேனும் ஆரோக்கியமான இன்பமான வாழ்வியலுக்கு சென்றுவிட வேண்டும் என்று தொடர்கிறேன்.
முட்டையிலிருந்து கோழி வந்ததா?, கோழியிலிருந்து முட்டை வந்ததா? எது முதலில் வந்தது? என்ற கேள்விக்கு விடை தெரியுமா? அதை தெரிந்துவிட்டு வாழ்வியல் தந்திரத்திற்கான உனது சிந்தனையை தொடங்கு என்று மனம் சொல்வதனைக் கேட்டு, நானும் கூகுள் மாமாவிடம் கேட்டேன், யுடியூப் விடியோ கூட பார்த்தேன், ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் சிந்தனையில் தெளிவாக துளங்கியது. அத்தோடு, நீ படித்தாலும் படிக்காவிட்டாலும் சாகும் வரை உனக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று சொல்வதும் புரிந்தது.
எது முதலில் வந்தது? முட்டையிலிருந்து கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்றால், கோழியிலிருந்து முட்டை வந்தது, ஆனால் முட்டையிலிருந்து குஞ்சி வரவில்லை. சேவலிடமிருந்துதான் கோழி குஞ்சிகள் வந்தது. சேவலுக்கு உயிர்ச்சத்து எங்கிருந்து வந்தது என்றால், உணவிலிருந்து. உணவு உயிரால் பிணைக்கப்பட்ட பஞ்சபூதங்களிலிருந்து. இதை வெவ்வேறு விதமாக ஒளவையார் விளக்கமாக கூறியுள்ளார். அதில் ஒரு வரி, பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு.
எல்லா உயிர்களுக்கும் மூலமானது ஒரே உயிர்தான், அதில் இனம் மாறுபடுவது பஞ்ச பூதங்களின் கலவையின் மாற்றம். ஆக ஒன்றிலிருந்துதான் எல்லாம் தோன்றியதுதான் என்பதுதான் மந்திரம். கோழி எப்படி வந்திச்சி.. சேவல் எப்படி வந்தது? என்றால், சிங்கப்புலி மற்றும் புலிச்சிங்கம் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது, ஒர் ஆண் சிங்கமும் பெண் புலியும் இனச்சேர்க்கை செய்யப்பட்டு உருவானது சிங்கப்புலி. அதைப்போல், ஆண் புலியும் பெண் சிங்கமும் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தி உருவானது புலிச்சிங்கம். ஆனால், சிங்கத்திடம் இருந்து புலி வருவதில்லை, புலியிடமிருந்து சிங்கம் வருவதில்லை.
பூனைக்கு புலி பிறப்பதில்லை. புலிக்கு பூனை பிறப்பதில்லை. ஆனால், சூழல் ஏதோ ஒர் கட்டத்தில் விளையாடிவிட்டால், தரம் மாறி புது இனம் வந்துவிடலாம். அப்படி கலந்து கலந்து காலம் காலமாய் தோன்றியதுதான் பலதரப்பட்ட உயிரினம். அதில் அடுத்தக் கேள்வி, ஆண் முதலா? பெண் முதலா? என்பதுதான். ஆனால், இதனை முந்தைய பதிலில் இருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தற்போதைய உயிரினங்கள்தான், ஆண் பெண் என இரண்டாகப் பிரிந்துள்ளன. அதற்கு முந்தைய உயிரினங்கள், ஆண் பெண் என்ற பிரிவினை இல்லாமல் இருக்கிறது. அவை பாலிலா இனப்பெருக்கம் அடைகின்றன, அதாவது. பரிணாம வளர்ச்சியின் போது, ஆண் பெண் என இரண்டாக பிரிந்துள்ளனர். ஆண் பெண் என இரண்டாக பிரிந்த காரணத்தால் கலவியின் மூலம் ஒன்றிணைந்து இனப்பெருக்கம் நடைபெறுகிறது என்பதெல்லாம் விதி. அந்த விதியை அறிய முற்படும் மதி, குரங்கிற்கும் மனிதனுக்குமான கலவியில் பிறப்பது என்ன என்ற கேள்வியில் தரத்தினை மாற்றி மாற்றி முயற்சி செய்து கொண்டே இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. நீங்களும் விதியை தெரிந்து கொள்ள, உங்களால் முடிந்ததை கலந்து முயற்சித்துப் பார்க்கலாம்.
வாழ்வியல் தந்திரம் என்ற பெயரில் வித்து பத்து சொத்து என்று சிந்திக்கலாம் என நினைத்தவனுக்கு கலவியல் சிந்தனை வளர்ந்து போவதனைப் பார்த்தால் தந்திரம் தந்த்ராவோடு மிக நெருக்கமான தொடர்பினை கொண்டிருக்குமோ என்ற கேள்வி இருக்கிறது. ஆனாலும் அதனை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிட்டு, அடுத்தக்கட்டமான சிந்தனையை தொடர்வோம்.
பரிணாம வளர்ச்சியில் சிந்தனை நீட்டிக்கும் பொழுது, இப்பூமியின் தாழ்வான பகுதியில் இருந்த நீர் மூலமாகத்தான் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதுவும் உணவை அடிப்படையாகக் கொண்டு உருவான உயிர்கள், உணவில்லாவிட்டால் அழிந்து போகும் சூழல்தான் அன்றும் இன்றும். நீரிலிருந்து நிலத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்த உயிர்கள், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையோடு அடுத்தக்கட்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். பின் நிலத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் என நீண்டு, மனிதன் எப்படியோ வந்துவிட்டான். அதற்காக குரங்கிலிருந்து வந்தானா? அல்லது மனிதன் முதலில் தோன்றி, எல்லா உயிர்களுமாய் தாழ்ந்து போனானா? என்பது எல்லாம் கேள்விக்குறியாகவே வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர் சொல்படி, ஓரறிவு, ஈரறிவு என உயிரினம் வளர்ச்சியடைந்து, மனம் கொண்ட மனிதன் ஆறாம் அறிவோடு பிறந்த உயிரிம், எல்லா உயிரினத்தையும் ஆளும் ஆற்றலும் கொண்டது மனித உயிரினம்.
மனிதனின் வாழ்வியல், மேடும் பள்ளமுமாய் ஆன குறிஞ்சி நிலத்தில் தான் முதலில் ஆரம்பித்தது. இங்கு, மக்கள் தொகை என்பது மிகக் குறைவு. ஆகையால், அவனுக்கான உணவு என்பது மிக எளிதாகக் கிடைத்த காரணத்தினால், தன் துணையோடு இன்பமாக வாழ்ந்து வந்தான். வாழ்க்கைக்கு உணவு மிக அவசியம். அதே நேரத்தில் மக்கள் தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகரிக்க ஆரம்பித்திருக்கும். உணவைத் தேடி, உயரத்திலிருந்து இறங்கி, காட்டுக்குள் பயணிக்க ஆரம்பித்ததை முல்லை திணை வாழ்வியலாக இருத்தலோடு ஒப்பிடப்படுகிறது. மக்கள் குறைவாக வாழ்ந்த மலைப்பகுதியில் போதிய உணவு கிடைத்த காலத்தில், மகிழ்ச்சியாக வாழ்ந்தவன். மக்கள் தொகை பெருகி உணவைத்தேடி காட்டுக்குள் வந்தபொழுது உணவுக்காக பெரும் நேரம் அழைவது இன்பத்தினை குறைக்க ஆரம்பித்து, இருத்தலை உருவாக்கியது. உணவு கண்டிப்பாக கிடைக்கும் பொழுது காத்திருத்தல் ஒன்றும் கடினம் இல்லை, ஆனால் உணவு கிடைக்குமா? என்ற கேள்விக்குறி உருவாகும் பொழுது ஊடல் பிறப்பதனை யாராலும் தடுக்க முடியாது.
உணவுக்குப் பற்றாக்குறைதான் மருத நிலத்தின் பிறப்புக்கு அடிப்படையானது. உணவுக்காக காட்டிலிருந்து, ஊருக்குள் வரும் விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் எந்தவொரு விலங்கும் தனக்கான உணவை அறிந்து, அதனை பாதுகாத்து, இனப்பெருக்கத்தினை ஊக்குவித்து, உணவாக உட்கொண்டு, மிச்சத்தினை சேமித்து, வித்தாக்கி மீண்டும் பிறப்பெடுக்கும் சூழலை உருவாக்குதலை செய்வதில்லை. ஆனால் இதனை மனிதன், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலாகச் செய்ய ஆரம்பித்ததுதான், எல்லா உயிர்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பதோடு நில்லாமல், தன் தேவைக்கு ஏற்ப, அடுதடுத்து புதிய கருவிகளையும் படைத்தது எத்தனை சிறப்பு என்பதனை நீங்களே எண்ணிப் பாருங்கள்.
உணவுப் பற்றாக்குறை, மருதநிலத்தை மட்டும் உருவாக்கவில்லை, அங்கு ஏற்பட்ட ஊடல் பாலை நிலைத்தை உருவாக்கிவிட்டது. மருத நிலத்தில்தான் வாழ்வியல் தந்திரம் பெருமளவில் வளர்ந்தது என்றுச் சொன்னாலும் ஊடலே கண்களுக்குத் தெரிகிறது. அப்படியானால், மருதம் மகிழ்ச்சியான வாழ்வியலைக் கொடுக்கவில்லையா என்றால், என்னைப் பெறுத்தவரைக்கும் பெரும் ஆசையை கொடுத்துவிட்டது என்றுதான் தெரிகிறது. ஊடலில் பிரிதல் ஏற்பட்டு பாலை நிலத்தை நாடிய கையோடு இரங்கல் நிமித்தமாய் நெய்தல் பார்வை மேலோங்கியது.
பசிக்கு உணவை உட்கொள்வது, உறவுகளோடு மகிழ்ச்சியாக இருப்பது, உணவு இல்லாவிட்டால் மடிந்து போகும் உயிர்களுக்கு மத்தியில், தனக்கான உணவை படைத்து வாழும் உறவுகளுக்குள் ஊடல் ஏற்பட்டால், தோல்வியோடு நின்றுவிடுமா என்ன? அங்கே புதைக்கப்படுவதில்லை விதைக்கப்பட்டார்கள். ஆகையால்தான் இரங்கல் வித்தை நெய்தலில் கலந்தர்கள். ஒருவரின் ஆயுள் நிறைவுற்று இறப்பவர் உயிர் விண்ணில் சப்தமாய் கலந்துவிடும் என்பார்கள். ஆனால், இடையில் நடக்கும் மரணம் எல்லாம் கடல் அலை சப்தத்தோடு கலந்து மீண்டும் உயிர்த்தெழ முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.
வாழ்வியல் தந்திரம் பற்றி சிந்திக்கலாம் என்றுச் சொல்லி வித்து பத்து சொத்து என்று சொன்னது புரியாமல் இருந்தவர்களுக்கு, புணர்தல்-இருத்தல்-ஊடல்-பிரிதல்-இரங்கல் என்பதற்குள் உலக வாழ்வியல் இப்படி இருந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி, இதயத்தைப் போல் பூமியில் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் கடல் அலையில் வித்து வந்து சேர்ந்தது வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அடுத்ததாக இருக்கும் பத்துக்கு என்னக் கதை சொல்லப்போகிறேன் என்று உங்களுக்குள் ஆர்வம் அதிகரித்திருக்கும். ஆனால், நான் கதை எதுவும் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை. பத்து என்பதனை அப்படியே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இப்பொழுது சொத்து என்பதற்குள் புதுக்கதை பார்க்கலாம்.
நமக்கான சொத்து என்றுப் பார்த்தால் பஞ்ச பூதங்கள்தான். அவற்றை நாம் எந்த அளவுக்கு பத்திரமாக பாதுகாத்துக் கொள்கிறோம் என்றுக் கேட்டால் இல்லை என்ற பதிலை தெளிவாக சொல்ல முடியும். குடிநீர் கூட சுத்தமானதா? என்றக் கேள்விக்குறியில் இருக்கும் சூழலில் எப்படி வாழ்வியல் தந்திரத்தினைப் பற்றி பேசுவது என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும், அதனையெல்லாம் விட்டுவிட்டு, மகிழ்ச்சியான வாழ்வியலுக்கு நம் சொத்தாக பார்ப்பது, பஞ்சபூதங்களையும் அடக்கிய நமது உடலை மட்டும்தான். நம் உடல் மட்டுமே நமது பெரும் சொத்து.
அருவம் உருவம் என்றுப் பார்த்தால், வித்து அருவமாகவும் சொத்து உருவமாகும் நம்மிடமே இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பத்து குணங்களை தந்திரமாக கையாண்டு இன்பான வாழ்வியலை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதுதான் என் ஆசை.
உயிரையும் உடலையும் பிணைத்து வைத்திருப்பது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள், அந்த பத்தையும் கடைப்பிடித்து வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை. அவை, மானம், குலம், கல்வி, காமம், தானம், தவம், முயற்சி, வண்மை, தொழில், அறிவுடமை.
வாழ்வியல் கடந்து வந்த பாதையில் அத்தனையையும் உணவை மையப்படுத்தியே பார்த்திருந்தோம். ஆக, உணவுப் பற்றாக்குறையால் பசியினால் பத்தும் பறக்கவிட்டவர்களால், உயர் வாழ்வியல் வாழ்ந்த மருதநிலத்து குடிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது என்பதுதான் உண்மை.
மக்கள் பஞ்சத்தால் அவதியடைந்ததாக சொல்லும் காலத்தில் பசுமைப் புரட்சியால் எல்லோர்க்கும் போதுமான உணவு கிடைத்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், புதுமையான நவீன உணவு உற்பத்தி, நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை என்பதானல், கொஞ்சம் கொஞ்சமாக உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்து, அதுவும் மகிழ்ச்சியான வாழ்வியலுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துவிட்டது என்பது உண்மை. ஆகையால் இயற்கை விவசாயத்தினை முன்னெடுக்க வேண்டும், நீர் பற்றாக்குறைய நாமே வரப்பினை உயர்த்தி, மழை நீரை நிலத்தில் தேக்கி உணவுத் தேவையில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என்று தொடங்கியிருக்கும் விவசாயத்தினால் எல்லோர்க்கும் உணவு உற்பத்தி செய்ய முடியுமா? என்றால் கேள்விக்குறியாக எனக்குத் தெரிகிறது.
தற்போது நாம் வாழும் பகுதி, நகரப் பகுதியினை பாலை வனம் என்றுதான் சொல்ல முடியும். தொழில் சார்ந்து வாழ்கிறோம். ஆனால் உணவு உற்பத்தியினை சார்ந்து வாழ்வது என்பது இல்லை. உதாரணத்திற்கு, தொலைபேசி உற்பத்திக்கும் உணவு உற்பத்திக்கும் எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது? ஒர் விவசாயி தொலைபேசி பயன்படுத்திகிறார் என்பது சரிதான், ஆனால், அந்த தொலைபேசி இல்லாவிட்டால் உணவு உற்பத்தி இல்லை என்பது இல்லையே, இதனைத்தான் ஆடம்பர வாழ்வியல், பேராசையான உலகம் என்று சொல்வதற்கு காரணம்.
கத்தரிக்காய் விளைவிப்பவர், முருங்கைக்காய் விளைவிப்பவரோடு பண்டம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், சினிமாவோடு பண்டம் மாற்றிக் கொண்டால், அவசியமான உணவுப் பொருளை வாங்கிய சினிமாக்காரர் உயர்வார். அவசியமே இல்லாமல், தன் கடின உழைப்பை சினிமாவுக்கு கொடுத்த விவசாயி தேய்வார். அதிலும், டிஜிட்டல்... புரிகிறதா? அன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்குக்கு பாக்கூத்து சிலர் நடத்தி பசியை போக்குவர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அதே நாடகத்தினை நடத்துவர். ஒவ்வொரு ஊருக்கும் போய் திரும்ப திரும்ப நடித்தால்தான் வயிற்றுக்கு சோறு. ஆனால், இன்று ஒர்முறை கேமரா முன் நடித்துவிட்டு, உலகமெங்கும் காட்சிப்படித்தி ஒரு சிலரே, மொத்த பணத்தினையும் சுருட்டிவிடுகின்றனர். அதாவது நமது பார்வையில் பாலை வாழ்வியல் என்பது வெற்றியும் தோல்வியுமாய் கவர்தலை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. இங்கு மகிழ்ச்சியினை நாம் எதிர்பார்க்க முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி, வித்து பத்து சொத்து என்பதனை மனதில் வைத்துக் கொண்டு, மருதம்-முல்லை-குறிஞ்சி என நமது வாழ்வியல் பயணத்தினை குறிஞ்சி திணைக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க வேண்டும். இங்குதான் தந்திரம் என்பது தேவை என விரும்புகிறேன். ஒவ்வொருவர் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவருவம் வெவ்வேறு பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் பசி என்பது இருக்கும். அந்த பசியினை வித்தாக்கி பத்து சொத்தாக பெருக்குவதற்கான தந்திரம்.
தந்திரம் எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அது சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அதன் முதல் படிக்கட்டு தவம். முதல் படிக்கட்டுதான் எடுத்து வைத்திருக்கிறோம். மற்ற படிக்கட்டுகளையும் சொல்லிவிட்டேன். முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக இன்ப வாழ்வியல் கிட்டும், தேடுங்கள்.
செயல்படுத்த வேண்டிய தந்திரத்தினை வெளிப்படையாக சொல்வது என்பது ஒரு பொழுதும் உதவாது. ஆனால், கொடுக்கப்பட்டதைக் கொண்டு தந்திரங்களை புரிந்து கொள்ளும் புத்திசாலி மட்டும்தான் தந்திரங்களை கையாளத்தெரிந்தவர்களாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக இராஜ தந்திரங்களை வெல்வதற்கான தந்திரங்களை வகுத்து செயல்படுத்துவதாக இருந்தால் எத்தனை சாமர்த்தியமான புத்திசாலித்தனம் இருக்க வேண்டுமென்ற சிந்தனை உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்வியல் தந்திரமாக இங்கு பார்ப்பது மவுனம். கடல் அலைகள் கொண்டு வரும் தகவலை அப்படியே எடுத்து செயல்படுவது. இதில் எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் பசியோடு செயல்படுங்கள், வாழ்வு இன்பமாக இருக்கும்.
வாழ்வியல் தந்திரம் - நாடிப் பார்த்தல்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வாழ்வியல் தந்திரம் - நாடிப் பார்த்தல்
அருவம் உருவம் என்றுப் பார்த்தால், வித்து அருவமாகவும் சொத்து உருவமாகும் நம்மிடமே இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பத்து தந்திரங்களை கையாண்டு இன்பான வாழ்வியலை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதுதான் என் ஆசை.