Page 1 of 1

மாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும்.

Posted: Sun Jan 05, 2020 8:23 pm
by marmayogi
மாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும்.

அந்த யாதொன்று என்பது நித்தியமாய் இருக்கின்றது.

அந்த நித்தியமான பொருள் அறிவு.

அறிவு என்பது ஞானம்.

அதுவே போதம்.

அந்த போதம் தான் வித்தை.

அந்த வித்தையே அக்ஷரம்.

அந்த அக்ஷரம் ஆகும் " தான் "

அது எவ்வாறு எனில் இப்பொழுது நமக்கு அறிவு உண்டோ , இல்லையோ ?

அறிவு உண்டு.

அந்த அறிவு என்று சொல்லுவது எதுவென்று உம்மால் சொல்லுவதற்கு முடியுமா?

சொல்லுவதற்கு முடியாது.

அறிவு என்பது நாம் கேட்கின்றதோ, காண்கின்றதோ, அறிகின்றதோ அல்ல.

எனில் இவ்விதம் கேட்கின்றதும்,காண்கின்றதும்,அறிகின்றதுமாகிய இவையாவும் தானாய் அறிவாய் இருக்கின்ற பொருள் தன்னில் இருந்து வெளியே வந்து வியாபிக்கும் போது அதில் பிரதி பிம்பமாகவும் பிரதி தொனியாகவும்(எதிரொலியாகவும்) கேட்கவும் , காணவும் ,அறியவும் செய்கின்றதாகும்.

அப்படியாயின் அறிவு என்கிற பொருள் நம்மில் இல்லை என்றால் நமக்கு யாதொன்றும் கேட்கவோ ,காணவோ,அறியவோ முடியாது.

அதெப்படி எனில் ஒருவன் செத்துப் போகிறான்.

செத்துப் போனால் பிணமாகிறான்.
அந்த பிணத்திற்கு ஏதாவது கேட்பதற்கோ,காண்பதற்கோ,அறிவதற்கோ முடியுமா ?

முடியாது.அது ஏன் ?

செத்துப் போனதால்.

செத்தபோது அதற்கு என்ன இல்லை ?

சுவாச சக்தி(மூச்சு) இல்லாமல் போனதால்.

அப்பொழுது ஜீவனுடைய சக்தியாகிய " வாயு " நம்மில் இருக்கின்ற போது மட்டுமே நமக்கு " அறிவு " இருக்கின்றது.

அப்பொழுது அறிவாய் இருக்கின்ற பொருள் எது ?

ஜீவ சக்தியாய் இருக்கின்ற வாயு.

அந்த மூச்சு என்று சொல்லுவது ஜீவசக்தியாகிய வாயுவாகும்.

அந்த ஜீவசக்தி வெளியில் வருவதற்கு " வாயு " என்று பெயர்.

வாயு என்றால் சலிக்கின்றது என்றாகும்.

அந்த சலனத்தில் இருந்தாகும் விசாரம் உண்டாகின்றது.

(விசாரம் என்பது சிந்தனை )

அந்த விசாரத்திற்குக் கர்த்தா மனம்.

அவ்வாறு சலனமுள்ள பொருள் உம்முள் அடங்கியது.

அப்பொழுது உம்முடைய மனமும் உம் உள்ளிலேயே அடங்கிற்று.

ஆகையினால் தான் உமக்கு மற்றொன்றைக் காண்பதற்கும் அறிவதற்கும் முடியாமலிருந்தது.

அப்பொழுது தன்னில் இருந்து வெளியே சலித்து அதாவது பரவிக் கொண்டிருக்கின்ற சக்திக்குத் தான் வாயு என்று சொல்லுகின்றது.

அது தன்னிலிருந்து வெளியே போகாமல் தன் உள் வழியாய் மேல் கீழாய் கதாகதம் செய்து அதாவது நடமாடி பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருக்கின்ற நிலைமைக்கு " சமீரணன் " என்று பெயர்.

சமீரணன் என்றால் பிரம்மரந்திரத்தோடு ஈரணம் செய்தல் அதாவது தாக்கிக் கொண்டிருத்தல்.

பிரம்மம் என்றால் நித்தியமாய் இருக்கின்ற பொருள்.

அந்த பொருளுடன் தொட்டு வேறுபடாமல் முட்டிக் கொண்டிருக்கின்ற கதியே அதாவது நடப்பே ஈரணம்.

தன் உள் வழியாய் மேல் கீழ் நடந்து வெளியே விட்டுப் போகாமல் பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருப்பதற்கு சமீரணன் என்றும் அப்படி இல்லாமல் வெளியே சலித்துக் கொண்டிருக்கின்ற கதிக்கு வாயு என்றும் பெயர்.

தன்னுடைய சலனம் தன்னில் அடங்கி ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது தான் நமக்கு உணர்வு உண்டாகின்றது.

அதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கின்ற காரியம் ஞாபகத்துக்கு வருகிறது.

அப்பொழுது உணர்வாகின்ற ஞாபகம் எங்கிருந்து உண்டாகிறதென்றால் பிரகாசத்தில் இருந்தே தான்.

பிரகாசம் அக்கினியில் இருந்து உண்டாகிறது.

அக்கினி உண்டாகிறது வாயுவில் இருந்து.

அப்பொழுது வாயுவாகி,அக்கினியாகி,பிரகாசமாகி அறிவாயிருக்கின்ற ஜீவசக்தி தன்னிலேயே அடங்கும் பொழுது தான் நமக்கு உணர்வு உண்டாகின்றது.

அப்பொழுது அறிவாய் இருக்கின்ற பொருள் எது ?

ஜீவசக்தியே.

அறிவாகி, ஜீவசக்தியாய் இருக்கின்ற பொருள் சலித்து, வாயுவாகி,நம் உள்ளில் இருந்து வெளியே போய்க் கொண்டிருப்பதற்கே " மாயை " என்று சொல்லுகிறது.

இதற்காகவே " "யாதொன்று இல்லாததாகின்றதோ அது மாயை "என்று சொல்லுவதன் காரணமாகும்.

யாதொன்று என்பது அறிவு.

அந்த அறிவு வாயு ரூபமாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருப்பதற்கே மாயை என்று பெயர்.

தான் என்றால் அவனவனே ஆகும். . .சுவாமி சிவானந்த பரமஹம்சர்