அது எப்படி மரணம் குறித்து கவலை இல்லாமல், பயப்படாமல் இருக்க முடியும் ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அது எப்படி மரணம் குறித்து கவலை இல்லாமல், பயப்படாமல் இருக்க முடியும் ?

Post by marmayogi » Thu Aug 11, 2016 8:28 am

கேள்வி - சிலர் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார்கள். சிலர் எந்த நொடியும் மரணம் வரும் எனவே கவனமாக இரு என்கிறார்கள். சிலர் மரணம் வருவதைக் குறித்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், அது எப்படி மரணம் குறித்து கவலை இல்லாமல், பயப்படாமல் இருக்க முடியும் ?

இராம் மனோகர் - மனிதர்கள் யாரும் மரணத்தைக் குறித்து கவலைப்படுவது போலத் தெரியவில்லையே !?! தீராத வியாதி வந்த பிறகுதான் மரணத்தைக் குறித்து கவலைப்படுகிறார்கள். அது வரையிலும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள்தானே ? புகை பிடிக்கிறான், மது அருந்துகிறான், சூதாடுகிறான், பிறன் மனை விழைகிறான், பொய் சொல்கிறான், கொலை செய்கிறான், கலப்படம் செய்கிறான், புறங் கூறுகிறான் இவையனைத்தும் மரணத்தையோ, மரணத்திற்கு ஒப்பான துன்பத்தையோ தரக் கூடியவைதான் எனத் தெரிந்திருந்தாலும் கூட இவற்றைச் செய்பவர்கள் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே பெய்யான முகமூடிகள்தான். உண்மையைச் சொல்வதென்றால் மனிதன் செய்யும் அனைத்து முயற்சிகளும் மரணத்தை எப்படியாவது வெல்ல வேண்டும் அல்லது தள்ளிப் போட வேண்டும் என்பதற்காகத்தான். மரணத்தைக் குறித்து கவலைப்படாதே என்று சொல்வது எதற்காகவென்றால், அது தவிர்க்க முடியாதது. அது இயற்கையானது. ஜனனம் என்று ஒன்று இருந்தால் மரணம் நிச்சயமானது. எனவே அதைக் குறித்து கவலைப்பட்டு மனதைப் பலவீனப்படுத்தாமல் வாழும் நிகழ் கால வாழ்க்கையை செம்மையாக வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள்.

எமனிடம் தர்மன் ''தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இறந்து போனாலும் கூட, தான் மட்டும் இறக்கவே மாட்டோம் என்கிற ரீதியில் மனிதர்கள் வாழ்வது வியப்பாக இருக்கிறது'' என்பான். அதன் உட்கருத்து என்னவென்றால் மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே ஆகும். கவலையோ, பயமோ தேவையில்லை ஆனால் வழிப்பு நிலை வேண்டும். யதார்த்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற் போல தங்கள் நடைமுறை வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். விவசாயி விதையை விதைத்து விட்டு விளைச்சலைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் நல்ல பலனைப் பெற முடியாது. உழைக்க வேண்டும், அல்லும் பகலும் அதற்காக பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல பலனைப் பெற முடியும். அது போல நம் மரணமும், மரணத்திற்குப் பிறகு நம் நிலையும் சுகமானதாக அமைய வேண்டும் என்றால் மரணத்தைக் குறித்து கவலைப்பட்டால் மட்டும் போதாது, அதற்காக பாடுபட வேண்டும். அதற்கான நன் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு மனிதர்கள் செய்யாத காரணத்தினால்தான் இப்படியெல்லாம் பலவாறாகச் சொல்லி பயமுறுத்துகிறார்கள்.

ஒரு புதிய சட்டையை போட்டுக் கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வில் பலவிதமான வேலைப் பளுக்களுக்கிடையே சட்டை கசங்கி, அழுக்காகி விடுகிறது. வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அதை துவைத்து போடுகிறோம் ? நாளடைவில் சட்டை கிழிந்தே போய் விடுகிறது. என்ன செய்கிறோம் ? அந்த சட்டையை கழற்றி எறிந்து விட்டு வேறு புதிய சட்டையை போட்டுக் கொள்கிறோம். அது போல இந்த உடலும் ஒரு சட்டைதான். வயதாகி விட்டது, உறுப்புகள் செயலிழந்து விட்டன, செல்களில் பெருமளவு செத்துப் போய் விட்டன. எனவே உயிரானது வேறு சட்டையை போட்டுக் கொள்கிறது. இதற்கு ஏன் பயப்பட வேண்டும். ஆனால் இதற்கு அடுத்த நிலை ஒன்றிருக்கிறது. அங்கு சட்டையே தேவையில்லை. அங்கே அழுக்கே கிடையாது. அங்கே எந்தப் பழுதும் கிடையாது. ஜனனமும் கிடையாது, மரணமும் கிடையாது. அப்படிப்பட்ட உன்னதமான நிலையை அடைவதற்கு வாழும் பொழுதே நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அது கண்ணுக்குப் புலப்படாத சூக்கும நிலையாக இருப்பதால் மனிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே பலவிதமாகச் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

நம் பண்டைய பாரத தேசத்தின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று ஒரு வெளிநாட்டு சக்கரவர்த்தி நினைத்தான். எனவே தன் குல குருவான ஒருவரிடம் சென்று நான் எந்தத் திசை நோக்கிச் செல்வது ? யாரை சந்திப்பது ? எந்த நேரத்தில் செல்வது என்றெல்லாம் பல விஷயங்களைப் பற்றி அவரிடம் கேட்டான். அவர் நீ எப்பொழுது வேண்டுமானாலும் செல், எந்தத் திசை வழியாக வேண்டுமானாலும் செல் ஆனால், முதலில் அந்த தேசத்தில் உள்ள சாதுக்கள், மகான்கள், முனிவர்களைப் போய் பார். பிறகு போரைத் துவங்கு என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனும் இமயத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தான். தன் குரு சொன்னது போல யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டே வந்தான். அப்பொழுது ஓரிடத்தில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவர் இடுப்பில் ஒரு கோவணம் மட்டுமே இருந்தது. அவரிடத்தில் வேறு எதுவுமே இல்லை. அந்தச் சக்கரவர்த்தி தன் படைகளையெல்லாம் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, தான் மட்டும் ஒரு குதிரை மீது ஏறி அவரருகே சென்றான். அவன் இடுப்பில் வாள் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது.

அவன் வரும் அரவம் கேட்டு கண் விழித்தார் பெரியவர். அவனை உற்று நோக்கினார். அவரது பார்வை என்ன வேண்டும் என்று கேட்பது போல இருந்தது. அதன் வீரியத்தை, தீட்சண்யத்தை அந்த சக்கரவர்த்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே தன்னையறியாமலேயே அவர் முன் பணிந்து நின்று வணங்கினான். அவரும் அவனைத் தன்னருகே அமர வைத்துக் கொண்டார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான் மன்னன். எதைக் குறித்து கேள்வி கேட்டாலும் மிகத் தெளிவாக பதில் சொல்லும் அவரது அறிவுத் திறன் கண்டு சக்கரவர்த்தி வியந்து போனான். எனவே அவரைத் தன்னோடு தன் தேசத்திற்கு அழைத்துப் போய் விட வேண்டும் என்று நினைத்தான். எனவே தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். ஐயா, தாங்கள் இந்த காட்டில் கிடந்து கஷ்டப்படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, எனவே என்னுடன் எனது தேசத்திற்கு வந்து விடுங்கள். உங்களை மதிப்பு மரியாதையுடன் சந்தோசமாக வைத்துக் கொள்கிறேன் என்றான்.

அந்தத் துறவியோ ''நான் இந்த இடத்தை விட்டு எங்கும் செல்வதில்லை. இங்கே நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். நீ போய் வா '' என்றார். அந்த சக்கரவர்த்தி எவ்வளவோ ஆசை வார்த்தைகளைச் சொல்லியும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவனுக்கு கோபம் வந்து விட்டது. இப்போது நீர் என்னுடன் வரவில்லை என்றால் உம்மை எனது வாளுக்கு இரையாக்குவேன் என்று கர்ஜித்தான். அந்த முனிவர் சற்றும் அஞ்சாமல் புன்னகை பூத்த முகத்தோடு ''சக்கரவர்த்தி நீ இவ்வளவு நேரம் கேட்ட கேள்விகளெல்லாம் அறியாமையால் எழுந்தவை என்றுதான் நினைத்தேன். ஆனால், இப்பொழுது நீ கூறிய கொடிய சொற்களைக் கேட்ட பிறகுதான் தெரிகிறது நீ ஒரு வடிகட்டிய முட்டாள் என்று. அதனால்தான் உன் குரு உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார். அடேய் மூடனே கேள் !!! உன்னால் என்னைக் கொல்ல முடியாது. நீ வெறும் உடம்பு. நான் அப்படியல்ல. சூரியனால் கூட என்னைச் சுட்டெரிக்க முடியாது. நெருப்பு என்னை ஒன்றும் செய்யாது. பஞ்ச பூதங்களாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்க நீ உன் வாளால் என்னைக் கொல்ல முடியுமா ? நான் யார் தெரியுமா ? நான் பிறப்பு இறப்பற்ற, எப்போதும், எங்கும் நிறைந்து, நிலைத்திருக்கின்ற சர்வ வல்லமை படைத்த ஆன்மாவாவேன்'' என்றார்.

சக்ரவர்த்தி உண்மையை உணர்ந்து, அவர் பாதம் பணிந்து வந்த வழியே திரும்பிச் சென்றான். இதுதான் மரணத்தை கண்டு பயப்படாத, கவலைப்படாத நிலை. மற்ற நமது நிலைகளெல்லாம் மரணத்தைக் குறித்து கவலைப்படாமல் இருக்க நாம் போடும் வேஷங்களே. அவை யாவும் மரணத்திற்கு அஞ்சி, நடுங்கி, ஓடி, ஒழிந்து கொள்ளப் பார்க்கும் பரிதாப நிலைகளே ஆகும்.

:- இராம் மனோகர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”