தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியம்?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியம்?

Post by marmayogi » Sun Jul 17, 2016 4:04 pm

கேள்வி: மகரிஷி அவர்களே, நம் நாட்டில் பல மகான்கள் அவ்வப்பொழுது சித்தியடைந்துள்ளனர். அவர்கள் உபதேசத்தால் ஈர்க்கப்பட்டு பலர் பக்தர்கள் ஆனார்கள், ஆனால் தாங்கள் மட்டும் மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியம்?

பதில்: பல மகான்கள் உலகில் சித்தியடைந்தார்கள் என்று கூறுகிறீர்கள். மேலும் என்னைக் குறிப்பிட்டு “உங்களைப் போல் மற்றவர்களும் உயர்நிலை பெறுவது சாத்தியமில்லை” என்று கூறுகிறீர்கள்..
நீங்கள் எந்த நிலையை, எந்தப் பேற்றினை சித்தி என்று கருதுகிறீர்கள்.

வேடமிட்ட சந்நியாசிக் கோலத்தையா? எதேனும் ஜால வித்தையில் தேர்ச்சிப் பெற்று பிறர் வியப்புறச் செய்யும் திறமையையா? இனிக்கப் பேசி சொற்பொழிவாற்றும் தெளிவையா? நாடு எங்கும் மக்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு நூல்களில் எழுதிப் புகழ் பெறுவதையா? ஒரு மனிதன் அருட்பேறு பெற்றதை உங்கள் கண்ணாலோ, கருத்தாலோ காண முடியுமா? எந்தக் கோணத்தில் எந்த நிலையிலிருந்து கொண்டு நீங்கள் பிறர் உயர்வைக் கணிக்கிறீர்கள்?

நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் பல பழிச்செயல்கள் கொண்டவராக, நடிப்பில் வல்லவராக இருக்கலாம். உங்கள் தயவில் வேலை செய்யும் ஒரு கூலியாள் பழிச் செயல் நீங்கி உய்வு பெற்ற ஒரு மகானாக இருக்கலாம். ஒருவரைப்பற்றிக் கணிக்க நீங்கள் உங்கள் தெளிவையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும். அதற்கு முன் ஒருவர் சித்தி பெற்றவர் என்று கருதினால் அது தப்புக் கணக்கேயாகும். மருட்சியால் கொண்ட முடிவாகும்.
மனிதன் புலன்வழியே இன்ப துன்ப நுகர்ச்சியில் மயங்கி உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் அடையும் பொருந்தா நிலைகள் ஆறுகுணங்களாகும். அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலியவையாகும்.

மனதிற்கு மூலமான உயிராற்றலை உணர்தலாகப் பெறும் குண்டலினி யோகத்தால் மனம் ஒடுங்கி தன் மூலத்தில் நிலைபெறுகிறது. அப்பொழுது உணர்ச்சி நிலையில் எழும் ஆறுகுணங்களைப் பற்றியும், அவை இயங்கும் நிலைகளைப் பற்றியும், அகநோக்குப் பயிற்சி என்ற சாதனையால் உணர்ந்து சீரமைப்பு பெறலாம். முறையாகப் பயின்ற பலர் இப்பயிற்சியில் வெற்றி பெற்று அமைதியின் பெருமையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”