ஸ்ரீ கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மைசூர்பா

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

ஸ்ரீ கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மைசூர்பா

Post by தீபக் » Tue Apr 22, 2014 1:43 pm

Image

அன்பை எத்தனை வழிகளில் சொல்லலாம்? பூக்கள் கொடுத்து சொல்லலாம். கடிதம் எழுதி சொல்லலாம். எதையேனும் பரிசாக அளித்தும் சொல்லலாம். இவை எல்லாவற்றையும் விட அன்பை சுவையாகச் சொல்ல அழகான ஒரு வழி சொல்லித் தருகிறார்கள் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினர். அது... அவர்களின் சிறந்த படைப்பான மைசூர்பா - குறித்துக் கொள்ளுங்கள் மைசூர்பாக் அல்ல - மைசூர்பா!

வாயில் இட்டதும் கரைந்து நேராக வயிற்றுக்குள் செல்லும் மிருதுவான மைசூர்பாவை விரும்பாதவர் யாரேனும் உண்டோ? வழக்கமான மைசூர்பாகு என்பது ‘கொஞ்சம் குருணை கொஞ்சம் கடினம்’ என்பதாக இருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நெய் மணக்கும் மிக மிருதுவான, நாவிலே கரையும் தன்மையுடன் இவர்கள் செய்யும் மைசூர்பா... உண்மையில் வேறு எங்கும் கிடைக்காததுதான்!

இந்திய இனிப்பு வகைகளில் உலக அளவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா. இது கடந்து வந்த பாதையும் இதன் பாரம்பரியத்தை போன்றே நீண்ட நெடியது. ‘அமுதச்செம்மல்’ என்.கே.மகாதேவ ஐயரால் 1948ல் தொடங்கப்பட்ட இந்தச் சுவைத் தொழிற்சாலை, 65 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது.

இப்போது மூன்றாவது தலை முறையாக பேத்தி ஹரிதா கிருஷ்ணன் தலைமையில் 1,500 நேரடி பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான மறைமுகப் பணியாளர்களையும் கொண்ட பெரிய கார்பரேட் நிறுவனமாக விரிந்து பரந்து உள்ளது எஸ்.கே.எஸ். எம்.பி.ஏ. பட்டதாரியான ஹரிதா, சிறுவயதிலிருந்தே டாக்டர், வக்கீல், ஆர்க்கிடெக்ட் போன்றவற்றில் ஈர்ப்பு இல்லாமல், குடும்பத் தொழிலில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் காட்டியவர். 2 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்புக்கான பரபர பயிற்சியில் இருக்கிறார்.

தாத்தா காலத்தின் பாரம்பரியங்களைக் கைவிடாமல் - அதே பொழுதில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஏராளமான புது யுக்திகளை கொண்டு வரப்போவதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஹரிதா. அதே நேரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ருசியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் உறுதி கூறுகிறார்.

‘‘ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சோடா உப்பு, டால்டா போன்ற வயிற்றைக் கெடுக்கும் பொருட்களும் செயற்கை வர்ணங்களும் இங்கு தயாராகும் உணவுவகைகளில் கலக்கப்படு வதில்லை. மக்கள் தரும் பணத்துக்கு ஏற்ற தரமான உணவை பொய், ஏமாற்றல் இன்றி தர்மத்தின் வழியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே மகாதேவ ஐயரின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே என்றும் வழிமொழிவோம்’’ என்கிற ஹரிதாவிடம், நம் வழக்கமான கேள்வியையே தாமதம் செய்யாமல் கேட்டோம்...

இத்தனை புகழ்பெற்ற அந்த மைசூர்பாவில் என்ன வசியம் செய்கிறீர்கள்? பதிலே பேசாமல், நேராக அவர்களின் மெயின் கிச்சனுக்கு அழைத்துச் சென்றார் ஹரிதா. 280க்கும் அதிக வகை இனிப்புகள், 70க்கும் மேற்பட்ட கார வகைகள் அனைத்தும் தயாராகும் மிகப்பெரிய கிச்சன்... நெய் மணமும் கலவையான இனிப்பு வாசனையுமாக அந்த ஏரியாவையே மணக்க வைக்கிறது, சுத்தமும் காற்றோட்டமும் கொண்ட அந்த அடுக்களை. ‘‘செய்தே காட்டுகிறோம்...

நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்... எந்த ரகசியமும் இதில் இல்லை. எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே நாங்கள் கொள்முதல் செய்யும் வியாபார நண்பர்களும் பாரம்பரியமானவர்கள். மூன்றாவது தலைமுறையாக ஒரே இடத்தில் இருந்துதான் நெய் வாங்குகிறோம்’’ என்றார் ஹரிதா. 20 நிமிடங்களில் ஒரு கிலோ கடலைமாவு கொண்டு 7 கிலோ மைசூர்பா நம் கண் முன்னே தயாரானது. உண்மைதான்... அதில் வேறு எந்த ரகசியமும் இல்லை... பதம், நேரம், பொருட்களின் தரம் மற்றும் சரியான விகித கலவைதான் மைசூர் பாவில் முக்கியம்!

நம் வீடுகளில், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் ஒரு வாரம் முன்பே மைசூர்பா கிளறத் தொடங்கி விடுவோமே... மொறுமொறுப்பாகக் கிண்டி தாம்பாளத்தில் கொட்டும்போதே அழகாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அத்தனை மெனக்கிடுவதில்லை பலரும். ‘சாதாரண சாம்பார் ரசமே தினம் ஒரு சுவையில் வரும்போது இனிப்பு - அதுவும் மைசூர்பாவை வீட்டில் செய்வது சிரமம்தான். இருக்கவே இருக்கிறது ரெடிமேட் ஜாமூன் மிக்ஸ்... அரை மணி நேரத்தில் தீபாவளி இனிப்பை நாமே செய்து முடித்து, மீதியை கடையில் வாங்கிக் கொண்டாட லாமே’ என்ற மனநிலைதான் இப்போது பெரும்பாலும் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையும் நிறைய ஆர்வமும் இருந்தால் போதும்... மைசூர்பா நாமே செய்து விடலாமே! ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து விடைபெற்று வந்ததும் இதுதான் தோன்றியது!

நம் கண் முன் செய்து காட்டிய இனிப்பை அதே பதம், சுவையோடு வர வைக்க நிறைய முறை செய்ய வேண்டியதாயிற்று. பாகு பதம் கொஞ்சம் தவறிய போது மைசூர்பா ‘பர்பி’ ஆனது. அடுத்த முறை வேகாமல் ‘அல்வா’ பதத்துக்கு போனது. நெய்க்குப் பதில் அல்லது நெய்யும் வேறு டால்டா அல்லது எண்ணெய் என்று முயற்சி செய்த போது ஓரளவு நல்ல ரிசல்ட் வந்தது. ஆனாலும், நமக்குத் தேவை பர்ஃபெக்ட்டான மைசூர்பா தானே? மீண்டும் அவர்கள் செய்த அனைத்தையும் நினைவுபடுத்தி ஒவ்வொரு தவறையும் சரி செய்து பல முறை செய்து பார்த்ததில் ஒருவழியாக வாயில் போட்டதும் கரையும் மனம் இனிக்கும் மைசூர்பா வந்தே விட்டது!


கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!
அளவு மிக முக்கியம்...
நெய் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சேர்க்கிறார்கள். நமக்கு அவ்வளவு நெய் தேவையில்லை என்றால் மூன்றில் ஒரு பங்கு சன் ஃப்ளவர் ஆயில் சேர்க்கலாம். அதே சாஃப்ட்டான பதம் வரும்.
பாகு அளவும் பதமும் தவற விடக்கூடாதது. தண்ணீரில் சர்க்கரை கலந்ததும், அதனை வடிகட்டி, மீண்டும் பாகு செய்ய வைத்தல் நலம். இதனால் சர்க்கரையில் இருக்கும் தூசு, கசடுகளைக் கழிக்கலாம்.
முதலில் பிசுபிசுப்பான பாகு, பின் கால் கம்பி, அரைக்கம்பி, அடுத்து ஒரு கம்பி பதம் வரும். இதுவே சரியான மைசூர்பா பதம்.
கொட்டிக் கிளறும் போது அதனை சிறிது ஆறவிடுதலும், கீழ் இறக்கி வைத்து கிளறி, மீண்டும் கொஞ்சம் நெய்விடுதலும் அவசியம்.
எந்தக் கப்பில் மாவை எடுக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரை, நெய் எடுப்பது கொஞ்சம் எளிதானது.
அது என்ன மைசூர்பா பதம்?

ஸ்டேஜ் 1: கடலை மாவை நன்கு பாகுடன் கிளறவும்.
ஸ்டேஜ் 2: கடலை மாவு பாகு + நெய்யுடன் சேர்ந்து வேக ஆரம்பிக்கும், ஊற்றும் நெய் அனைத்தையும் உறிஞ்சும்.
ஸ்டேஜ் 3: லேசாக ஓரங்களில் நுரைக்கும்... கொதி வரும்.
ஸ்டேஜ் 4: கலர் மாறி லேசாக வெள்ளையாகவும் ஓரங்களில் நன்கு நுரைத்தும் வரும்.
ஸ்டேஜ் 5: இப்படி கலர் மாறியதும் பால் பொங்குவது போல லேசாக பொங்கி வரும். இதுதான் மைசூர்பா பதம். இப்போது இறக்கி வைத்து கைவிடாமல் அந்த பாத்திர சூட்டில் 5 நிமிடம் கிளறவும்.
ஸ்டேஜ் 6: கிளறுவதை நிறுத்தி, நெய் விட்டு ஒரு நிமிடம் அப்படியே விடவும். பின் மீண்டும் 2 நிமிடம் கிளறி ட்ரேக்கு மாற்றவும்.

சீக்ரெட் ரெசிபி மைசூர்பா

என்னென்ன தேவை?

கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை - மூன்று கப் (அதிகம் இனிப்பு வேண்டாதவர்கள் இரண்டரை கப் வைக்கலாம்),
நெய் - 3 கப்.

எப்படிச் செய்வது?

அடிகனமான கடாய் (அல்லது பிரஷர் பேன் கூட ஓ.கே.) சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும். ஒரு சதுரமான ட்ரேயில் நெய் தடவி எடுத்து அருகில் வைக்கவும். கடலை மாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்ததும் வடிகட்டியில் வடித்து மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வந்ததும், அடுப்பை குறைத்து கடலை மாவை கொட்டி, கைவிடாமல் கிளறவும். 3 கப் நெய்யில் கால் கப் தவிர மீதத்தை சிறிது சிறிதாக ஊற்றி விடாமல் கிளறவும். இப்போது அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும்.

ஒட்டாமல் மைசூர்பா பதம் வந்ததும் அடுப்பி லிருந்து இறக்கி கீழே வைத்து, மீண்டும் 5 நிமிடம் கிளறவும். இந்த ஸ்டேஜில், ஒரு நிமிடம் கிளறுவதை நிறுத்தி, மீதமிருக்கும் நெய்யை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் நன்கு கிளறி ட்ரேயில் கொட்டவும். சிறிது நேரம் ஆறவிட்டு, விரும்பிய அளவில் துண்டு போடவும்.

(ரசிப்போம்... ருசிப்போம்!)
rokith
Posts: 2
Joined: Fri Mar 28, 2014 1:21 pm
Cash on hand: Locked

Re: ஸ்ரீ கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மைசூர்பா

Post by rokith » Wed Apr 23, 2014 10:23 am

:ros:
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”